சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/ஸ்ரீரங்கத்திலிருந்து லக்னோ வரை

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “ஸ்ரீரங்கத்தில் இருந்து லக்னோ வரை ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

லக்னோவிற்கு அருகில் உள்ள பாராபங்கி எனும் இடத்திற்கு தனக்கு மாற்றல் வந்துள்ளது என்று ராகவன் சொன்ன போது, சிறிது கலக்கமானார் ராமானுஜம்.

“என்னது!! பாராபங்கியா – அப்படி ஓரு இடம் இருக்கிறதா!! லக்னோ தெரியும், இது என்ன ஊர்? “

லக்னோ கூட தெரியாமல் அதிர்ந்தாள், அம்மா மைதிலி.

“என்னடா போகப்போறியா?” என்று கேட்டபோது, மகன் ராகவன் சொன்ன பதில், ஸ்ரீரங்கத்திலேயே தலைமுறை, தலைமுறையாக அரங்கனை சேவித்துக்கொண்டு அக்ராஹாரத்திலேயே வசித்துக்கொண்டிருக்கும் ராமானுஜத்தை அதிரச்செய்தது.

“ஆமாம்பா, கம்பெனில செலக்ட் செஞ்சு அனுப்புற பதினைந்து ஆர்கிடெக்ட் என்ஜினீயர்களில் எனக்குத்தான் தலைமைப்பொறுப்பு; கட்டாயம் போகணும். பக்கத்தில ஓரு பெரிய ப்ராஜெக்ட் ஆரம்பிக்கப்போறது. ஹை சாலரி, லக்னோல வீடு, கார் எல்லாமே உண்டு. பாராபங்கி லக்னோவிலிருந்து 27 கிமீ .”

ராகவன் சொல்லும் இடம் எங்கே இருக்கிறது என்றே அவளுக்கு தெரியவும் இல்லை; புரியவும் இல்லை. பிறந்ததிலிருந்தே ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே போனதே கிடையாது. பத்து கிளாஸ் படித்து மணமாகி குடும்பம் உறவுகள், ரங்கன் என்று இங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரு அப்பாவி மைதிலி.
ஸ்ரீரங்கம் அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்த மைதிலிக்கு, உலகம் என்றால் அந்த ரங்கனைச் சுற்றிலும் இருக்கும் அந்த நான்கு அக்ராஹார வீதிகள் மட்டும் தான். காலை, மதியம் – கோவில் மணி, மாலை அரங்கன் சேவை தரிசனம், இவையெல்லாம் தான் அவளது வாழ்க்கை; மனமும் அதற்கு ஏற்றாற்போல் அங்கே சுற்றியே ஓடியது. அதே தெருவில் வாழ்ந்த அவளுக்கு, “தூர ஊர்” என்றால் திருச்சி தான்.

“அம்மா, நீயும் என்னோட வடக்கே வரணும்,” என்று ராகவன் சொன்ன நாள், அவள் கைகளில் இருந்த டம்ளர் சற்று நடுங்கியது.

“நானா ? ஸ்ரீரங்கத்தை விட்டு விட்டா?”

“புது ப்ராஜெக்ட்ம்மா. ஒரு நாலஞ்சு வருஷமாவது அங்கே இருக்கவேண்டி வரும்.”

“இங்கேயும், இந்த வீட்டையும் விட்டு உங்கம்மா வருவாளா!! “

“நீங்க மட்டும் வர எண்ணம் இருக்கா என்ன?”

“ஏன்டா, புது ஊரு, புது மொழி; நான் எப்படி சமாளிப்பேன்னு நினச்சு பார்த்தியா?” இங்க இருந்தா, காலைல ஒரு முறை, மாலைல ஒருமுறை ஓடிப்போய் ரங்கனை பார்த்திட்டு வந்துருவேன். நினைச்சா அம்மா மண்டபத்துக்கு ஸ்னானதுக்கு போவேன். அங்கே வந்து என்ன செய்வேன் எனக்கு யார தெரியும்!!!. கல்யாணம் பண்ணியிருநந்தா உன் பொண்டாட்டி உன் கூட வந்திருப்பா.”

“மைதிலி, நீ ஆறு மாசம் போய் இருந்து வா – பாக்கலாம்; அப்புறமா முடிவு பண்ணலாம். நானும் ரெண்டு மாசத்தில பின்னாடியே வரேன்.”

எல்லாம் முடிவாகி அரை மனதுடன், மைதிலி லக்னோ புறப்பட்டாள். ராமானுஜம் ஸ்ரீரங்கத்திலேயே இருந்துகொண்டார்.

விமானத்தில் ஏறி அமர்ந்தபோது, ஜன்னல் வழியே விமானம் மேலே ஏற ஏற, கீழே சிறிதாகிக் கொண்டிருந்த கோபுரங்களைப்பார்த்தாள். “ரங்கா, நான் உன்ன விட்டுட்டு போறேனே?” என்று உள்ளுக்குள் உருகினாள். லக்னோ விமான நிலையம் இறங்கியதும் அவள் மிரண்டு போனாள். பெரிய சாலைகள். வேகமான வண்டிகள். அவளுக்குப் புரியாத மொழி.

அந்நிய நகரத்தில் அவளுக்குக் கிடைத்த முதல் நிம்மதி. புதிய வீடு. அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் உயரமான கட்டிடம். ஆனால் வாசலில் மண் தரை இல்லை. கோலம் போட இடமில்லை. தண்ணீர் தெளிக்க தெரு இல்லை.

“ஒரு கோலம் போடக்கூட இடமில்லை,” – அலுத்துக்கொண்டாள்.

“அம்மா, போக போக பழகிடுவே.”

மனமோ இன்னும் ஸ்ரீரங்கம் வாசலிலே இருக்கும் மண்வாசனையைத் தேடியது. தனிமை வாட்டியது.

அடுத்த நாள் காலை, ராகவன் வேலைக்குப் போனான். வீடு அமைதியாகி விட்டது. மைதிலி பால்கனியில் நின்று கீழே பார்த்தாள். மக்கள் விரைந்து நடந்தார்கள். யாரும் அவளைப் பார்க்கவில்லை. இடம் அநியாமாய் பட்டது.

“இந்த ஊருக்கு என் மனசு ஒட்டவே இல்லியே?” – தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

மெதுவாக உள்ளே வந்து கொண்டு வந்த சாமான்களை பிரித்து, எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டு இருக்கும் போது, வாசலில் பெல் அடித்தது. போய் கதவை திறந்தாள். வீட்டின் உதவியாளர் போல, பெண் ஒருத்தி பைஜாமா உடை போட்டு நின்று இருந்தாள். “பையா நே முஜே காம் கேலியே புலாயா”. (அண்ணா வேலைக்காக வரச்சொல்லி இருந்தார்). மைதிலிக்கு ஒன்றும் புரியவில்லை. ஜாடை, சைகை பாஷையில் என்ன என்று கேட்டாள். வந்த பெண்ணும் விடாமல் பாத்திரம் கழுவுதல், வீட்டை கூட்டுதல் போன்ற செய்கையை செய்து காட்ட கொஞ்சம் புரிந்தது. மைதிலி கையை காண்பித்து உள்ளே வா என்று சொல்ல, அந்த பெண்ணும் உள்ளே நுழைந்து, வேலையை தொடங்கி செய்து முடித்தாள்.

ஓடிப்போய் ராகவனை போனில் கூப்பிட்டு, “என்னடா வேலைக்கு ஆள் வரச்சொல்லி இருக்கிறேன்னு சொன்னியே; இன்னிக்குன்னு சொல்லக் கூடாதா!” திட்டு போட்டாள். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ராமானுஜத்திற்கு போன் போட்டு, “என்னை மட்டும் இங்க தவிக்க விட்டுட்டேளே! நீங்களும் வந்திருக்கலாம். ராகவன் காலைல போனா, ராத்திரி ஆகுது திரும்பி வர. பேச்சு துணைக்குக்கூட ஆள் இல்லை தெரியுமா?” ஒரு அரை மணி நேரத்திற்கு ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள்.

“இன்னிக்கு ராகவன் வந்தா, ஊருக்கு டிக்கெட் போட்டு திரும்ப போய்டணும். இதுக்கு மேல இங்க தாங்காது,” – தனக்குள் பொருமித்தள்ளினாள். அன்றிரவு ராகவன் மைதிலியைப்பார்த்து, “என்னம்மா பேச மாட்டியா? முகம் உம்னு இருக்கு.”

“ஆமாண்டா ராகவா, 12 மணிநேரம் வாய திறக்கவே முடியல. இங்க நான் யாரோட பேசுவேன்? தனியா திண்டாடி தவிக்கிறேன். வேலை செய்ய வந்த பெண்ணோட சைகை பாஷை பேசினேன் தெரியுமா,” கண்களில் நீர் தளும்பியது.

“அம்மா கோச்சுக்காதே, வருத்தப்படாதே. அங்கேயே விட்டுட்டு வந்தா எனக்கும் தனியா விட்டுட்டு வந்தேன்னு கவலை தானே இருக்கும். ஒரு மாசத்தில அப்பாவையும் வரச்சொல்றேன்.”

“இங்க பாரு ஹிந்தி – தமிழ் புத்தகம். இதைப்பார்த்து கத்துக்கோ. தமிழ் பேச யாரும் இல்லைன்னா தான், உனக்கு இந்த மொழி வரும். “

“என்னத்த வருமோ தெரியல; எனக்கு ஊருக்கு டிக்கெட் போடு; திரும்ப போறேன். “

“இதென்ன வந்து ரெண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ளவா!! கொஞ்சம் பொறுத்துக்கோ, நாளைக்கு என் கூட வேலை செய்யுற ஒருத்தரோட மனைவியை வரச்சொல்றேன். அவங்க கூட வெளில போய்ட்டு வா கடையெல்லாம் தெரிஞ்சுக்கோ. அவளுக்கு இங்கிலிஷ் தெரியும். நீயும் தெரிஞ்ச இங்கிலிஷ் வச்சு சமாளிச்சிக்கோ. ஒரு வாரம் பாரு. அப்புறம் முடிவு பண்ணலாம்.”

மைதிலி அரை மனதோடு சம்மதித்தாள். மைதிலி லக்னோ புறப்பட்ட முதல் மாலை அக்ரஹார தெரு வழக்கம் போலவே இருந்தது. ஆனால் ராமானுஜத்துக்கு ஏதோ மாறிவிட்டது போல இருந்தது. காலையில் எழுந்தார். வாசல் கதவைத் திறந்தார். முன்பு இருந்த கோலம் இல்லை. மண்ணில் தண்ணீர் தெளித்த வாசனை இல்லை.

“இவ்வளவு வருடம் இந்த வாசல் இப்படி வெறிச்சோட இருந்ததே இல்லை?” கோவில் மணி ஒலி அதேபோல் ஒலித்தது.

“கோவிலுக்கு போயிட்டு வரேன்,” என்று சொல்ல யாரும் இல்லை.
அவர் தனியாக ரங்கநாதஸ்வாமியை சேவிக்க சென்றார். அரங்கன் முன் நின்றார். “நீ தான் இவளுக்கு தைரியம் கொடுத்து அனுப்பினயா ரங்கா?” சிறு கோபம் கலந்த பாசம்.

சாப்பாட்டு மேசையில் அமைதியாய் சாப்பிட அமர்ந்தார். மைதிலி இல்லாத சமையல்; அவள் கை ருசி இல்லாத சாம்பார். “அவள் இருக்கும்போது எனக்கு வேலையே இருந்ததில்லை,” என்று முதன்முறையாக உணர்ந்தார்.

அடுத்த சில நாட்களில், அவருக்கு தெரிந்தது. மைதிலி இல்லாத வீடு – சுவர் மட்டுமே அவருக்கு துணை இருந்தது. காலை கோவில் போவது வழக்கம். ஆனால் வீடு திரும்பும் போது வாசலில் சிரித்த முகம் இல்லை. “நாமும் போயிருக்கலாமே?” மைதிலியைப்பற்றிய சிந்தனையில் உறங்கிப்போனார்.

அதே நேரம், லக்னோவில் உள்ள மைதிலியின் மனமும் இதே போல புது இடமும் மொழியும் ஒட்டாமல் தவித்தது. மறுநாள் நண்பரின் மனைவி கல்பனா வந்தாள். சின்ன பெண். எதோ அரை குறையா இங்கிலிஷ் பேசி சமாளிக்க வேண்டியது தான் என்று தீர்மானித்தாள் மைதிலி. மைதிலிக்கு புரியும்படி நிதானமாய் கல்பனா பேசவே மைதிலிக்கு பிடித்துப்போனது.

“ஏண்டிம்மா உனக்கு எந்த ஊரு? “

“எனக்கா ஆன்ட்டி, அசாம் தெரியுமா? அங்கே கௌஹாத்தி பக்கத்தில ஒரு சின்ன கிராமம். மஜூலின்னு பேரு. பிரம்மபுத்ரா நதி கரையில இருக்கு.”

தூக்கி வாரிப்போட்டது மைதிலிக்கு. அசாம் என்றால் காவல் கூர்கா மட்டும் தான் தெரியும். அசாம் ரொம்ப தூரம்னு தெரியும். வேற ஒன்றும் தெரியாதே!

உடைந்த ஆங்கிலத்தில் கல்பனாவிடம், “எப்படிம்மா இங்க இருக்க? இந்த இடம், பாஷை தெரியுமா உனக்கு?

“இல்லை ஆன்ட்டி, அசாமீஸ் மட்டும்தான் தெரியும். இங்கிலிஷ் கூட கொஞ்சம் தான் தெரியும்.. புது இடம் – இங்க வந்து வேற வழி இல்லாம எல்லாம் கத்துக்கிட்டேன்.”
“கல்பனா உன்னால் எப்படி மொழிய கத்துக்க முடிஞ்சிது ?

“அதுவா ஹிந்தி மட்டும் பேசறவங்க கிட்ட போய் பேசுவேன். முதல்ல தப்பு தப்பா பேசுவேன். எல்லோரும் சிரிப்பாங்க; அப்படியும் வெட்கப்படாம பேசுவேன். இப்படித்தான் கத்துண்டேன். “

“இங்க வந்து எத்தனை நாளாகுது?”

“ஆறு மாசம் ஆன்ட்டி. இப்போ ஓரளவு எல்லாம் புரிஞ்சு தெரிஞ்சுகிட்டேன்.”

” நீ சின்ன பொண்ணு; ஈஸியா வரும், நான் அப்படியா!!! “

மறுநாள் கல்பனாவுடன் வெளியே சென்ற மைதிலிக்கு ஒரு புது அனுபவம் கிடைத்தது. மார்க்கெட்டில் காய்கறி வாங்கும் போது கல்பனா மெதுவாக சொன்னாள், “ஆண்ட்டி, ‘கித்னா’ன்னு கேளுங்க. விலை சொல்வாங்க.”

மைதிலி தயக்கத்துடன், “கித்னா?” என்றாள். கடைக்காரர் உடனே ஏதோ வேகமாகச் சொன்னார். ஒன்றும் புரியவில்லை. கல்பனா மொழி பெயர்த்தாள். அந்தச் சிறு வெற்றியே மைதிலிக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த மாலை கல்பனா திடீரென்று கேட்டாள், “ஆண்ட்டி, நீங்க உங்க ஊரை மிஸ் பண்றீங்களா?”

அந்த கேள்வி மைதிலியின் உள்ளத்தைத் தொட்டது. “ஊரா? அது ஊரல்லம்மா; என் மூச்சு. காலையில குளிச்சுட்டு, கோலம் போட்டாத்தான் என் நாள் தொடங்கும். மணி ஒலி கேட்டாத்தான் மனசு அமைதியா இருக்கும்.”

“நானும் அசாம்ல அப்படித்தான் இருந்தேன் ஆண்ட்டி. எங்க ஊரு பீஹு பண்டிகை, மண் வாசனை; எல்லாம் மிஸ் பண்ணினேன்; இங்க வந்ததும் ரொம்ப அழுதேன். ஆனா என்ன செய்வது? வாழ்க்கை எங்க கொண்டு போகுதோ, அங்க போகணுமே.”

அந்த வார்த்தைகள் மைதிலியின் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த பெண் கல்பனாவுடன் எப்படி பேசி சமாளித்தோம் என்ற எண்ணமே பெருமையாக இருந்தது.

அடுத்த சில நாட்களில், “ஹிந்தி – தமிழ்” புத்தகத்தை முதல் முறையாக திறந்தாள். “நமஸ்தே; ஆப்கா நாம் க்யா ஹை;” மெதுவாக உச்சரித்தாள். சின்ன சின்ன வார்த்தைகளை படித்து வைத்துக்கொண்டாள். ஆயியே, பைட்டியே, அச்சா; மனம் ஒரு புது அனுபவத்தை எதிர் கொண்டது. அவளுக்கு அது பிடித்தும் இருந்தது.

வீட்டு உதவியாளர் மீண்டும் மறுநாள் வந்தாள். இந்த முறை மைதிலி சிரித்துக் கொண்டு, “நமஸ்தே; ஆப்கா நாம் க்யா ஹை?” என்று கேட்டாள்.
அவள் சிரித்து, “மேரா நாம் சப்னா,” என்றாள். மைதிலிக்கு குழந்தை போல ஆனந்தம்.

அந்த நாள் முதல் சப்னா வந்தால், இரண்டு மூன்று ஹிந்தி வார்த்தைகள் பேச முயன்றாள்.

சப்னாவும் தமிழில் “அம்மா, தண்ணி; சாப்பாடு.” என்று கற்றுக் கொண்டாள். மொழி ஒரு சுவரல்ல, ஒரு பாலம் என்பதை மைதிலி மெதுவாக உணரத் தொடங்கினாள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை, ராகவன் கேட்டான், “அம்மா, இங்கிருந்து 130 கிலோமீட்டர்தான். அயோத்யா போய்ட்டு வரலாமா?”

“அயோத்யாவா! அவ்ளோ பக்கத்திலேயே இருக்கா?” மைதிலியின் கண்கள் விரிந்தன.

“ஆமாம். ராமர் கோயில். கூடவே அனுமன் கோவில்; சீதையின் கனக பவன் எல்லாம். இருக்கு.” விட்டதை பிடித்தாற்போல மைதிலிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி.

அடுத்த நாள் அவர்கள் அயோத்யா சென்றார்கள். அங்குள்ள ராமர் தரிசனத்தில் நின்ற போது, மைதிலியின் கண்களில் நீர் ததும்பியது. “ரங்கா; நீ ஸ்ரீரங்கத்தில்; ராமா, நீ இங்கே அயோத்தியாவில்;” என்று உள்ளத்தால் பால ராமருடன் பேசினாள்.

சரயுவில் போய் நீராடியவுடன், பழைய கொள்ளிட, காவேரி நினைவுகள் மீண்டு வந்தாற்போல் உணர்ந்தாள் மைதிலி. அந்த தருணம் அவளுக்கு ஒரு புதிய புத்துணர்வை புரிதலைத் தந்தது. அடுத்த வாரம் கல்பனாவுடன் அருகிலுள்ள கோவிலுக்கும், பூங்காவுக்கும், மார்க்கெட்டுக்கும் போனாள். லக்னோவின் முக்கிய மார்க்கெட்டான ஹசரத் கஞ் போய் சுற்றி பார்த்து சிக்கன் காட்டன் புடவைகளும், குர்த்தவும் வாங்கினாள்.

சில நாட்களில் அக்கம் பக்கத்தினர், “நமஸ்தே ஆன்ட்டி” என்று சொல்லத்தொடங்கினர். ஒரு நாள் அபார்ட்மெண்ட் கலாச்சார நிகழ்ச்சியில், மைதிலியிடம் கேட்டார்கள், “ஆண்ட்டி, நீங்க தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கீங்களாம்? ஏதாவது பாரம்பரிய கலை கற்றுக்கொடுப்பீங்களா? உங்க ஊர் பாட்டு பாடிக்காட்டுங்களேன்.” மைதிலி சற்று வெட்கப்பட்டாள்.

அடுத்த வாரம் முதல், சிறுமிகளுக்கு கோலம் போட கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள். பாடிக்காட்டினாள். மண் இல்லாத இடத்தில், சிமெண்டு தரையில் சாக்கட்டியால் படிக்கோலம், சிக்கு கோலம் என்று உற்சாகமாய் போட்டு காட்டினாள்.

“இது எங்க ஊர் மார்கழி கோலம்,” என்று விளக்கும்போது அவள் குரலில் பெருமை கலந்து இருந்தது.

அந்தச் சிறுமிகள் ஹிந்தியில் பேசினார்கள்; மைதிலியின் கொஞ்சம் உடைந்த ஹிந்தி, கொஞ்சம் தமிழ், சைகை மொழி எல்லாமே அவர்களைக் கவர்ந்தது. மனங்கள் மெது மெதுவாக நெருங்கி வந்தன.

ஒரு மாதம் கழித்து, லக்னோவில் மைதிலியின் சிரித்த குரல் போனில் ஸ்ரீரங்கத்தில் கேட்டது . கணவனை கூப்பிட்டாள். “இங்க கோலம் கிளாஸ் தொடங்கிட்டேன்.” அவர் அதிர்ந்தார்.

அவர் மனதில் ஒரு வியப்பு. அடுத்த வாரத்தில் ராமானுஜம் லக்னோ வந்திறங்கினார். மைதிலியின் மாற்றம் அவரால் நம்ப முடியவில்லை. அபார்ட்மெண்ட் குழந்தைகள் “மைதிலி ஆன்ட்டி” என்று ஓடிவந்து கையைப் பிடித்தார்கள். பெண்கள் பாபி, தீதி என்று கூப்பிடத் தொடங்க மைதிலி முற்றிலும் வேறு மனுஷி ஆனாள்.

ராமானுஜம் , “நீயா இப்படி மாறிட்டே?”

மைதிலி சிரித்தாள். “மாறல; ஆனா வளர்ந்துட்டேன்.”

ஒரு மாலை – ராகவன் வேலை முடித்து வந்தபோது, மைதிலி சப்னாவுடன் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தாள். “கல் ஹம் லோக் மார்கெட் ஜாயேங்கே.”

ராகவன் வாயைத் திறந்து பார்த்தான். “அம்மா! நீ ஹிந்தி பேசுறயா?” “அரை குறையாத்தான்,” என்று சிரித்தாள்.

அந்த இரவு, ராமானுஜத்துடன் பேசும்போது அவள் மனம். தெளிவாக இருந்தது. “ஸ்ரீரங்கம் என் உயிர் தான். கல்யாணமானா வேற வீட்டுக்கு போவோமே, ஆனால் அம்மா வீடு மறந்து போகுமா? அப்பப்போ வந்து வந்து பார்த்திட்டு போகமாட்டோமா!. அதே மாதிரி ரெங்கனையும். ஸ்ரீரங்கத்தையும். விட்டுட்டு வந்திருக்கேன். வாழ்க்கை நின்று விடாது. எங்கே அழைக்குதோ அங்கே போக வேண்டும். “

மனமும் மாறி, புதிய இடத்தை, சூழ்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று கொள்ளும் மன முதிர்ச்சியை அடைந்து இருந்தது. மறு நாள் காலை. காலிங் பெல் சப்தம். கதவைத் திறந்தாள்.

“மைதிலி ஆண்டி ஹை க்யா?” “இதோ வரேன்,” என்று மைதிலி அவசரமாக வந்தாள்.

“ருக்கோ; தோடி தேர் மே ஆவூங்கி;” என்று அந்தச் சிறுமிக்கு ஹிந்தியில் பதில் சொல்லிவிட்டு உள்ளே திரும்பினாள்.

“சமைச்சு வச்சிருக்கேன். சாப்பிடுங்கோ. இன்னிக்கு ஒரு குரூப்போட ‘சோட்டா படா இமாம்பாரா’ பார்க்க போறேன். அப்புறம் ரங்கோலி பாட்டு கிளாஸ் இருக்கு. முடிச்சிட்டு இரண்டு மணிக்குள் வந்துடுவேன்.”

ராமானுஜத்தின் மனதில் எண்ணங்கள் வரிசையாக ஓடியது. விண்ணைத் தொடும் கோபுரங்கள்; அக்ராஹார வீதிகள்; பல அடுக்கு பிரகாரங்கள்; காவிரி ஆறு – இவை ஸ்ரீரங்கம் என்றால்; கோமதி, சரயு நதி, இமாம்பாரா போன்ற பழமையான மாபெரும் கட்டிடங்கள், ஊருக்கே உரிய கலாச்சாரம், கலை, கவிதை, உருது மொழி வளர்த்த நகரம் லக்னோ.

அன்று மாலை பால்கனியில் போய் நின்றாள் மைதிலி. இந்த முறை பார்வையில் தேடல் இல்லை. உறுதி இருந்தது. முன்பு பார்த்த அதே காட்சி தான் இன்றும். ஆனால், அது அந்நியமாக இல்லை. மண் மாறலாம். மொழி மாறலாம். சுற்றம் மாறலாம். ஆனால் மனிதன் ஓட வேண்டியது வாழ்க்கையோடுதான்.

அன்றிரவு சாப்பாட்டு வேளையில், “அம்மா ஊருக்கு திரும்ப போக டிக்கெட் என்னிக்கு வாங்கணும்னு கேளு ராகவா? ” என்று கிண்டலாக கேட்ட ராமானுஜத்தையும், ராகவனையும் பார்த்து “அபி க்யா ஜல்தி ஹை!! ” (இப்போ என்ன அவசரம்?) என்று சொல்லி புன்னகைத்தாள் மைதிலி.

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி
திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆசிரியராக பணி புரிந்தவர். படிப்பதிலும், கதைகள் எழுதுவதிலும் சிறு வயதிலிருந்தே மிகுந்த ஆர்வம் கொண்ட இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவை ஆனந்த விகடன், கல்கி, அமுதசுரபி, குமுதம், கலைமகள் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் 120 சிறு கதைகள் மற்றும் மினி சிறு கதைகள் எழுதி இருக்கிறார்

இவரது சிறுகதைகள் ‘மல்லிகைப்பந்தல் ‘என்ற பெயரில் சிறுகதை தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. ஒரு துப்பறியும் நாவல் எழுத வேண்டும் என்பது இவரது நீண்ட கால கனவு.

WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் குழுவினர் சார்பாக வெளியிடப்பட்ட “பேரன்பின் சுகந்தம்,” என்ற முதலாவது சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய “அப்பாவின் ஒரு நாள்,” என்ற சிறுகதை இடம் பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன