மடிப்பாக்கம் பிரபாவதி/பராசக்தி

எத்தனை முயற்சித்தாலும் திருத்த முடியவில்லை. திருந்தவும் இல்லை.
குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். குடிப்பதும் அடிப்பதும் கொஞ்சம்கூடக் குறையவில்லை.
“மாமா, நீங்க சின்ன வயசிலேயே கண்டிப்போட வளர்த்திருக்கணும். இல்லைன்னா, தப்பா எடுத்துக்காதீங்க மாமா, கல்யாணமாவது செஞ்சு வைக்காம இருந்திருக்கணும். நான்தான் மாட்டுனேன். நாலு எழுத்துப் படிச்சும் உபயோகமில்லை. குடி, குடி, குடி! என்ன வாழ்க்கை இது?” என்று நொந்துகொண்டாள் பைரவி.
ஆபீஸிலிருந்து வரும்போதே போதையில் வந்தான். எதிரில் வந்த மகளைத் திட்டிக்கொண்டே கையை ஓங்கினான். அவ்வளவுதான்!
எங்கிருந்து வந்தது அந்தத் தைரியம், சக்தி, கோபம், வீரம்? யாருக்கும் தெரியவில்லை.
பளாரெனக் கன்னத்தில் அறைந்தாள். “ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மக மேலேயே கைய வைக்கப் பாக்குறயா? என் கை பூப்பறிக்குமா? தொலைச்சிடுவேன்!” என்றாள் பைரவி.
எட்டுக் கைகளிலும் ஆயுதம் தாங்கிய பராசக்தியாகத் தெரிந்தாள் பைரவி. இதோ, நண்பர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சரக்கை ஊற்றிய கோப்பையில் பைரவி மீண்டும் பராசக்தியாகத் தெரிந்தாள். மெல்ல எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான் கதிரவன். பைரவியின் கணவன்!

—

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன