சுஶ்ரீ/துர்கா பூஜை

குப்தா சேட் கறாராக சொல்லிவிட்டார். இந்த வருஷம் நவராத்திரிக் கொண்டாட்டத்தில் யாரும் கர்பா ஆடப் போகக் கூடாதுன்னு!
அந்தக் காம்ப்ளெக்ஸில் கிட்டத்தட்ட 300 ஃபிளாட்டுகள் உள்ளன. எல்லாப் பண்டிகைகளையும் கீழே உள்ள மைதானத்தில் கொண்டாடுவார்கள். இதோ, நவராத்திரிப் பூஜைக்குத் தயாராகிறது. பெரிய துர்கைச் சிலை வந்தாச்சு. தினமும் கர்பா ஆட்டம் தடபுடலாக இருக்கும்.
அப்போதுதான் A விங், 14-வது மாடியில் இருக்கும் குப்தா, தன் வீட்டில், “யாரும் கீழே போகக் கூடாது!” என்று கத்திக்கொண்டிருந்தார். அவருக்கு மூன்று பெண்கள். ஒவ்வொருவராகக் கல்யாணம் செய்துகொடுக்கத் திட்டமிட்டிருந்த வேளையில்தான் அது நடந்தது.
போன வருஷம் துர்கா பூஜையின்போது, 12 அடி உயர துர்கைச் சிலை, அனைத்து கைகளிலும் ஆயுதங்களுடனும் மந்தகாசப் புன்னகையுடனும் அமர்ந்திருந்தாள். எதிரில் வட்டமாகப் போடப்பட்ட எல்லைக்குள் இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கும் கர்பா நடனம் 11 மணி வரை நீடிக்கும். அப்புறம் களைப்புடனும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் வீடு திரும்புவர்.
குப்தாவின் மூத்த பெண் ஆரண்யா மட்டும் வீடு திரும்பவில்லை. சந்தியாவும் விந்தியாவும் வீடு திரும்பிவிட்டனர்; மூத்தவளைக் காணவில்லை. விடிய விடியக் காத்திருந்தும் பயனில்லை. யாரோ ஒரு பையனோடு குஜராத்துக்குப் போய்விட்டதாகத் தெரிந்தது.
பாவம்! இந்த வருடம் சந்தியாவும் விந்தியாவும் பால்கனியிலிருந்தே ஜொலிக்கும் துர்கையைப் பார்க்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன