கி. பார்வதி/சந்தோஷி மாதா

நவராத்திரி முடிந்த பிறகு, தோழிகள் வித்யாவும் சாரதாவும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

“நீ எங்கள் வீட்டுக்கு நவராத்திரிக்கு வரும்போது வெல்லமும் பூவும் வாங்கிக்கொண்டு வந்தாயே! வழக்கமாகப் பழமும் பூவும் தானே வாங்கிக்கொண்டு வருவாய்! ஏதாவது வேண்டுதலா? மற்றவர்கள் முன்னால் கேட்க வேண்டாமென்று இப்போது கேட்கிறேன்” என்று கேட்டாள் வித்யா.

“நவராத்திரி நேரத்தில் கொலு வைப்பவர்கள் வீட்டில் பழங்கள் நிறையவே இருக்கும். வெல்லம் கொடுத்தால், நைவேத்தியம் செய்யும்போது பயன்படுத்துவார்கள். அதனால் இந்த முறை ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும்போது வெல்லமும் பூவும் வாங்கிச் சென்றேன்” என்று விளக்கினாள் சாரதா.

“இந்த நவராத்திரியில் வேறென்ன விசேஷம்?”

“இந்த முறை தூய்மைப் பணியாளர்கள் நாலு பேருக்குப் புடவை, ரவிக்கையுடன் தாம்பூலம் கொடுத்தேன். மனசுக்கு நிறைவாக இருந்தது. அவர்களுக்கும் ரொம்பச் சந்தோஷம். முந்தின நாளே சொல்லிவைத்துவிட்டேன். ‘குளித்துவிட்டு, சுத்தமாக வாங்க. தாம்பூலம் கொடுக்கிறேன்’ என்று. கோபம் கொப்பளிக்கும் துர்க்கையின் முகத்தில் புன்னகை அரும்பியதைக் காண முடிந்தது” என்று பரவசப்பட்டாள் சாரதா.

“முதல் தடவையாக நவராத்திரி தாம்பூலம் நீங்கள்தான் கொடுத்திருக்கிறீர்கள், அம்மா! நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று வாழ்த்தி, மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர் நால்வரும்.

அடுத்த வருடத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்கும் தானும் தாம்பூலம் கொடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள் வித்யா.

One Comment on “கி. பார்வதி/சந்தோஷி மாதா”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன