
கண்ணன் ஆட்டிசம் கொண்ட ஆறு வயதுச் சிறுவன். வீட்டில் அவனுடைய அம்மா, அப்பா, நான்கு வயதுத் தங்கை ஆகியோர் இருந்தனர்.
கண்ணனுக்கு ஆட்டிசம் இருப்பதால், அவன் அப்பாவுக்கு அவனிடம் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தது. அதற்குப் பதிலாக, தன் மகளைச் செல்லமாகப் பார்த்துக்கொள்வார்.
கண்ணனுக்கும் இதையெல்லாம் பார்த்து ஏதோ புரிந்தும் புரியாதது போலவும் இருந்தது. அவனுடைய அம்மா கண்ணம்மாதான் அவனுடைய உலகம்.
காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்து, காலை உணவு தயாரித்து, கண்ணனையும் கவனித்து, அவனைச் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது என எல்லாவற்றையும் அவனுடைய அம்மா முகம் சுளிக்காமல் செய்வதைப் பார்ப்பான்.
கண்ணன் ஆட்டிசம் கொண்ட குழந்தையாக இருந்தாலும், சித்திரம் வரைவது அவனுக்கு எளிதாக இருந்தது. ஒருமுறை, கண்ணனின் பள்ளியில் நடைபெற்ற சித்திரம் வரையும் போட்டியில், தனக்குப் பிடித்த ஓவியத்தை வரையும்படி ஆசிரியர்கள் கூறினர். கண்ணன் வரைந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்தது.
அந்தப் பள்ளிக்கு வருகை தந்த மாநில அதிகாரியும் கண்ணன் வரைந்த ஓவியத்தை வெகுவாகப் பாராட்டினார். அந்த ஓவியத்தை வரைய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எவ்வாறு வந்தது என்றும் கேட்டார்.
கண்ணன் சொன்ன பதில் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“அது என்னோட அம்மாவின் ஓவியம். அவள் எனக்கு அன்னபூரணி, தைரியலட்சுமி, காத்யாயினி, சந்தானலட்சுமி, சரஸ்வதி… எல்லாம் அறிந்த என் அம்மா கண்மணி!”
