புற்று/ப.மதியழகன்

“சீதா அம்மா இன்னும் எழுந்திரிக்காம படுத்திருக்காங்க என்னன்னு பார்க்கக்கூடாதா?” என்றான் கனகு.

“நான் தசாவதானி பாருங்க ஒரே நேரத்துல ஆயிரம் வேலை பாக்குறதுக்கு. புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும், உங்களுக்கு டிபன் செய்யனும் ஏன்டா பொம்பளையா பொறந்தோம் போதும் போதும்னு ஆயிடுது. இதுல அவங்களை வேற கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும்னா எப்படி?” என்று சீறினாள் கனகுவின் மனைவி சீதா.

“பாவம் வயசானவங்க உடம்பு நல்லாயிருந்தா கூடமாட ஒத்தாச பண்ண மாட்டாங்களா?” என்றான் கனகு.

“நின்னா கால வலிக்குது உட்காந்தா கையை வலிக்குதுன்னு புலம்பினா அதுக்கு நானே செஞ்சிட்டுப் போயிடுவேன் ஒத்தாசை செய்யறாங்களாம் ஒத்தாசை” என்றாள் சீதா.

“நல்லா இருக்கறப்ப செய்யாமலா போனாங்க வயசான காலத்துல பெத்த பிள்ளைங்க தான காப்பாத்தனும் வேற யாரு காப்பாதுவா சொல்லு?” என்றான் கனகு.

“உங்க வியாக்கியானத்த கொஞ்சம் நிறுத்துங்க பெத்த புள்ளைன்னா நீங்க ஒருத்தர் தானா டெல்லியிலே உங்க அண்ணன் என்ன பண்றாரு அவரையும் பத்து மாசம் சுமந்தாங்கள்ள?” என்று வெடித்தாள் சீதா.

“இங்க ஆறுமாசம் அங்க ஆறுமாசம்னு முடிவு பண்ணுனது தான். உடம்பு முடியாதவங்களாள அவ்வளவு தூரம் போக முடியுமா யோசிச்சித்தான் பேசறியா?” என்றான் கனகு.

“இது ஒரு நொண்டிச் சாக்கு இந்த காரணத்தை சொல்லித்தான எந்தலைல கட்டுறீங்க” என்றாள் சீதா.

“நடமாட முடியாமலா இருக்காங்க அவங்க வேலைய அவங்க பாத்துக்கிறாங்க. குழந்தைகளைப் பாரு ஸ்கூலு விட்டு வந்ததுலேர்ந்து அவங்க கூடத்தான் ஒட்டிகிட்டு இருக்குதுங்க, நைட்லயும் அவங்க கூடத்தான் படுத்துக்கிதுங்க இப்ப அவங்கள டெல்லிக்கு அனுப்புனா ஏங்கிப் போயிடாதுங்க” என்றான் கனகு.

“வீட்ல நாள் முழுக்க இருக்கறது நீங்களா நானா? இருந்து பாத்தா தெரியும் அவங்க வண்டவாளமெல்லாம். உங்கள கட்டுன பாவத்துக்கு ஆறு மாசம் அவங்கள சுமந்தா போதும் ஆள விடுங்க சாமி!” என்றாள் சீதா.

கட்டிலில் படுத்திருந்த தனது தாய் சாந்தாவை தட்டி எழுப்பினான் கனகு. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் நெருப்பாக கொதித்தது. கண்விழித்த சாந்தாவிடம் இந்த டீயைக் குடித்துவிட்டு மாத்திரையை விழுங்கச் சொன்னான். சுடுதண்ணியை மட்டும் குடிங்க சாயந்தரம் வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆபிஸ் கிளம்பினான்.

கேபினில் வந்து அமர்ந்ததும் முதல் வேலையாக டெல்லியிலுள்ள அண்ணன் வரதுக்கு போன் செய்தான்.

“ஹலோ கனகு! அம்மா எப்படி இருக்கா நான் கால் பண்ணனும்னு நினைச்சிகிட்டே இருந்தேன் நீயே பண்ணிட்ட என்ன விஷயம் சொல்லு?” என்றான் வரது.

“அம்மா சென்னை வந்து எட்டு மாசம் ஆகப்போவுது” என்றான் கனகு.

“அதனாலென்ன ஆறு மாசம் முடியறப்ப டான்னு வந்து அழைச்சிட்டுப் போகணுமா? அம்மாவாள அங்கயிங்க அலைய முடியுமா? டெல்லியில ஒரே பனி. இதுக்கெல்லாம் போய் கணக்கு பார்க்கலாமா கனகு. என்ன இருந்தாலும் நம்பள பெத்தவ இல்லயா?” என்றான் வரது.

“அது எனக்குத் தெரியாம இல்ல. உங்களுக்குத்தான் ஞாபகப்படுத்த வேண்டி இருக்கு” என்றான் கனகு.

“அம்மாவ நான் தொந்தரவா நினைக்கலடா போன தடவை வந்தப்ப அகிலாவும், ஆகாசும் ஏங்கிப் போயிடுவாங்க சாப்பிட்டாங்ளா தூங்குனாங்களான்னு ஒரே உன் பிள்ளைங்க புராணம் தான் அம்மாவுக்கு அதான் பேரப் பிள்ளைங்களோட சந்தோஷமா இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்” என்றான் வரது.

“சரி எப்ப டெல்லிக்கு கொண்டுவந்து விட?” என்றான் கனகு.

“நான் அப்ஷக்சன் சொல்லப் போறதில்லை அப்புறம் உன் இஷ்டம்” என்று போனை வைத்தான் வரது.

கனகு தன் நண்பன் சுந்தரத்துக்காக பனகல் பூங்காவில் காத்திருந்தான். “கனகு என்ன ரொம்ப நேரமா காக்க வைச்சிட்டேனா ஏதோ முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்ன” என்றான் சுந்தரம்.

“அம்மாவ பத்தித்தான். அம்மா விஷயத்துல சீதா விட்டுக்கொடுத்து போக மாட்டேங்கிறா. டெல்லி ஆறுமாசம், சென்னை ஆறுமாசம் பேசி முடிவாயிடிச்சி இல்ல அப்புறம் ஏன் எல்லாம் எந்தலைல வந்து விடியுதுன்னு ஒரே சத்தம் போடறா தலைவலி. என்ன செய்யறதுன்னு தெரியலை அதான்” என்றான் கனகு.

“சாந்தாமாவோட அருமை தெரியலை விடு. பேரக் குழந்தைங்க பாட்டியோட தான் அட்டாச்மெண்ட்டா இருப்பாங்க. ஓடி விளையாடுற பிள்ளைங்களுக்கு கதை சொல்லி தூங்க வைக்க பாட்டி இல்லாம போனா அது வீடா அது சுடுகாடுதான்” என்றான் சுந்தரம்.

“சீதாவுக்கு புத்திமதி சொல்லிப் புரியவைக்க முடியும்னு எனக்குத் தோணலை தன் முடிவுல விடாப்பிடியா இருக்கா” என்றான் கனகு.

“நீ என்ன முடிவு பண்ணி இருக்க?” என்றான் கனகுவிடம் சுந்தரம்.

“இந்த விஷயத்துல என்னால தீர்மானமா ஒரு முடிவுக்கு வரமுடியலை” என்றான் கனகு.

“பாரத்தை எங்கிட்ட இறக்கி வச்சிட்டேல்ல கவலையைவிடு நான் பாத்துக்கறேன். சாரதா முதியோர் இல்லம்ன்னு மேற்கு மாம்பலத்துல இருக்கு பெரியவங்களை தங்கமா பாத்துக்கறா. இல்லத்தோட நிர்வாகி சண்முகம் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். வாரத்துல சன்டே மட்டும் சொந்த பந்தங்களை பார்க்க அலோ பண்ணுவாங்க. குழந்தைகளை அழைச்சிட்டு போய் பாத்துட்டு வாயேன் என்ன இப்போ. இதான் சரியான முடிவா இருக்கும்னு எனக்கு படுறது. எதுக்கும் வரதுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்க. இதுல அவனுக்கும் பெரிய பங்கு இருக்கு. எடுத்தோம் கவிழ்த்தோம்னு நாம முடிவெடுக்க முடியாதுல்ல என்ன சொல்ற?” என்றான் சுந்தரம்.

அரை மனதோடு ஒத்துக்கொண்டான் கனகு. வீட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்தபடி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சீதா. அம்மா பூ தொடுத்துக் கொண்டிருந்தாள். கனகு உடை மாற்ற அறைக்குச் சென்றான். காபி டம்பளரோடு சீதா உள்ளே நுழைந்தாள். “அண்ணங்கிட்ட பேசுனீங்களா எப்ப கொண்டுபோய் விடப்போறீங்க?” என்றாள்.

“அம்மாவ இங்க ஆறுமாசம் அங்க ஆறுமாசம்னு அலைக்கழிக்காம முதியோர் இல்லத்துல சேத்துடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்!” என்றான் கனகு.

“ஏன் உங்க அண்ணன் ஆறுமாசம் வச்சிக்க மாட்டாராமா. சரி உங்க அண்ணன் வேலைக்கு போறாரு கொழுந்தியாவுக்கு வேற என்ன வேலை. இந்த சீதா மட்டும் இளிச்சவாயி. நல்லா வாயில வருது. முதல்ல இது யாரோட ஐடியா?” என்றாள் சீதா.

“என் முடிவுதான். அங்கயாவது அம்மா நிம்மதியா இருக்கட்டும்” என்றான் கனகு.

“இங்க மட்டும் யார் அவங்கள கொடுமைப்படுத்தறா? நமக்கு ஒரு நியாயம் அவங்களுக்கு ஒரு நியாயமான்னு கேட்டது தப்பா? முதியோர் இல்லத்துக்கு பணம் கட்ட சொல்லுவானே யாரு செலவு பண்றது?” என்றாள் சீதா.

“அண்ணனும் நானும் சேர்ந்துதான் செய்யணும். இதுக்கு ஒத்துக்குவாருன்னு எனக்கு தோணுது” என்றான் கனகு.

“முதல்ல செய்திய உங்க அண்ண காதுல போடுங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம். அப்புறம் அந்த செலவையும் நம்ம தலையில கட்டிடப் போறாங்க” என்றாள் சீதா.

அடுத்த நாள் ஆபிஸ் கேபினிலிருந்து அண்ணனுக்கு போன் செய்தான் கனகு.

“ஹலோ கனகு ஒன்ட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன் நீயே போன் பண்ணிட்ட. எங்க கம்பெனி சிங்கப்பூர் பிரான்ச்சிக்கு டிரெய்னரா மூணுமாசம் போக வேண்டியிருக்கு டிரிப் கன்ஃபார்ம் ஆயிடிச்சி. எங்கூட அபியும் வர்றா. அம்மாவ இப்ப கூட்டிட்டு வர வேணாம். நாங்க டெல்லி வந்து இறங்கினதும் கால் பண்றேன்” என்றான் வரது.

“அதுபத்தி தான் உங்ககிட்ட பேசணும்” என்றான் கனகு.

“அதுபத்தினா எனக்கு ஒன்னும் புரியலையே?” என்றான் வரது.

“அம்மாவ முதியோர் இல்லத்துல சேக்கலாம்னு இருக்கேன். விசாரிசிட்டேன் வெஸ்ட் மாம்பலத்துல இருக்காம் நல்லா கேர் எடுத்து பார்த்துப்பாங்களாம். நிர்வாகி நம்ம சுந்தரத்துக்கு தெரிங்சவராம். அதனால வொரி பண்ணிக்காதீங்கன்னு சொன்னான். உங்க முடிவு என்ன?” என்றான் கனகு.

“ம் ஒருதடவைக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சிக்க பாதி செலவை வேணா நான் ஏத்துக்கிறேன். அப்ப அம்மாவ எப்படி சம்மதிக்க வைக்கப்போற?” என்றான் வரது.

“உங்ககிட்ட ஒப்பீனியன் கேட்டுட்டு பேசலாம்னு இருந்தேன்” என்றான் கனகு.

அன்று இரவு சீதாவும் குழந்தைகளும் தூங்கச் சென்றுவிட்டார்கள். சாந்தா டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். கனகு சோபாவில் வந்து அமர்ந்தான்.

“அம்மா உங்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்

“என்ன பூடகமா பேசற என்ன விஷயம்?” என்றாள்

“அண்ணனும் நானும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம்” என்றான்

“எதைப் பத்தி?” என்றாள்

“உங்களப்த்திதான்” என்றான்

“என்னைப்பத்தியா என்னைப் பத்தி முடிவெடுக்க என்னடா இருக்கு?” என்றாள்

“ஆமாம்மா உங்கள முதியோர் இல்லத்துல சேக்கலாம்னு இருக்கோம்!” என்றான்

சாந்தா கண் கலங்கினாள். “கனகு என்னை பாரமா நினைக்கிறியாடா. முதுமை தள்ளாட்டங்கிறது எல்லாருக்கும் வரத்தானடா செய்யும். உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தவடா. படிப்புலேர்ந்து கல்யாணம் வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணுணவடா எந்தலையிலேயே மண்ணை அள்ளி போட்டுட்டீங்களே” என்று கேவி அழுதாள்.

“மேற்கு மாம்பலத்துல தான் இருக்கு நாளைக்கு பத்து மணிக்கு கிளம்பறோம் இதை நாங்க கொடுத்த தண்டனையா நினைக்காதீங்க போகப் போக உங்களுக்கே புரியும் இந்த முடிவை நான் எடுக்க என்ன காரணம்னு கோழி மிதிச்சு குஞ்சு சாகாது படுத்துக்கோங்க” என்றான் கனகு.

காலை மணி ஒன்பதரை இருக்கும் அகிலா ஓடிவந்து அப்பா பாட்டி அழுவுறா என்றாள். கனகு அறைக்குப் போய் பார்த்தான். “கனகு இந்த வயசுல பந்து மாதிரி ஆளாளுக்கு என்னைய உதைச்சி விளையாடுறீங்க பாத்தியா” என சொல்லிவிட்டு முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சாந்தா.

கார் சாரதா முதியோர் இல்லத்தில் வந்து நின்றது. கனகு, சுந்தரம், சாந்தா மூவரும் இறங்கினார்கள்.

நிர்வாகி செல்லப்பா அவர்களை வரவேற்று இருக்கையில் அமரச் சொன்னார்.

“இது முதியோர் இல்லம்னு நினைச்சிடாதீங்க பலருக்கு உயிர் கொடுத்த தெய்வங்க எழுந்தருளியிருக்கும் இடம் அப்ப கோவில் தானே. கோவில்லயே இருக்கணும்ங்கிற பாக்கியம் யாருக்கு வாய்க்கும் பக்தர்களுக்குத் தானே. இங்க டி.வி இருக்கு லைப்ரரி இருக்கு துணைக்கு பேச ஆளும் இருக்காங்க. லோன்லியா உணரவே மாட்டீங்க. வாரத்துல ஒருநாள் உங்க உறவினர்கள் வந்து பார்க்க அனுமதிக்கிறோம். எங்கிருந்து பேரப் பிள்ளைகள ஆசிர்வாதம் பண்ணினா என்ன நல்ல மனசோட ஆசிர்வாதம் பண்ணினா நல்லாவே இருப்பாங்க. ஆலமரம் இல்லைனா விழுது எங்கே. விதை போட்டதே இங்க இருக்கறவங்க தானே. தானே மரம் முளைச்சிடுமா நீர் யார் வார்க்கிறது. உங்கள மாதிரி அவங்களும் கணக்கு பாக்க ஆரம்பிச்சி இருந்தாங்கன்னா நீங்க இப்போ யுஎஸ் யுகேலயோ குப்பை கொட்ட முடியாது. என்னுடைய ஆதங்கம் பேசும்படியா ஆயிடிச்சி சரி விஷயத்துக்கு வருவோம்.”

“அம்மாவத்தான் விட வந்தோம்” என்றான் கனகு

“அம்மாவுக்கு இஷ்ட தெய்வம் முருகனுங்களா?” என்றார் சண்முகம்.

“ஆமாப்பா ஏன் கேட்கற?” என்றாள் சாந்தா.

“பக்கத்துல தான் சுப்ரமணியர் கோயில் இருக்கு. கார்த்திகை, சஷ்டினா முருகன் தரிசனமும் கிடைக்கும் கோயில் பிரசாதமும் கிடைக்கும். முருகன் அப்படித்தான் தன்கிட்டயே கூட்டிக்குவான். உங்க பேரன் வயசுதானே அவனுக்கும். கோயில்ல போடுற கந்தசஷ்டியக் கேட்டுதான் இங்க உள்ளவங்க எழுந்திருப்பாங்க அது எழுதப்படாத சட்டம் மாதிரி ஆகிப்போச்சி. நீங்க அவங்கள ஹோம்ல கொண்டு வந்து விடல முருகன்ட்ட கொண்டுவந்து விட்டு இருக்கீங்க அவன் இருக்கான் பார்த்துக்குவான் நீங்க கவலைப்படாம போங்க” என்றார் சண்முகம்.

அடுத்த நாள் சுந்தரத்திடமிருந்து போன் கனகு எடுத்துப் பேசினான். மறுமுனையில் சுந்தரம். “உங்க அப்பாவுக்கு சொந்தமான நிலத்தை நான்கு வழிச்சாலைக்காக அரசாங்கம் கையகப்படுத்தீச்சில்ல அந்த கேஸ்ல சுப்ரீம் கோர்ட்ல இன்னிக்கு உங்க அப்பாவுக்கு சார்பா தீர்ப்பு ஆகியிருக்கு. எப்படியும் முப்பது லட்சம் சாந்தா அம்மாவுக்கு கிடைக்கப் போறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சாந்தா அம்மாவுக்கு இன்ஃபார்ம் பண்ணிடு. உங்க அப்பா காலத்துலயே தீர்ப்பு வந்துருந்துதுன்னா நல்லா இருந்திருக்கும் எல்லாத்தையும் மேல இருக்கறவன் தானே முடிவு பண்றான் நம்ப என்ன செய்ய முடியும் கனகு” என்று சொன்னான் சுந்தரம்.

சீதா ‘யாருங்க போன்ல’ என்றாள். விபரத்தை கனகு சொன்னவுடன் அவளுக்கு தலைகால் புரியலை. ‘நாளைக்கே அம்மாவ போய் அழைச்சிட்டு வந்திடனும்’ என்று ஒத்தைக் காலில் நின்றாள்.

அன்று மாலையே சாந்தா முதியோர் இல்ல நிர்வாகியோடு வீட்டுக்கு வந்தாள். கனகுவும், சீதாவும் எதிரில் இருக்க சாந்தா பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு எதுக்கப்பா அவ்வளவு பணம். அதான் முப்பது லட்சத்துல உனக்கும் வரதுக்கும் ஐஞ்சஞ்சி லட்சம் தரதா இருக்கேன். பத்து லட்சத்தை எம்பேர்ல பேங்க்ல எஃடில போட்டுடப்போறேன் மீதி பத்து லட்சம் சாரதா இல்லத்துக்கு கொடுக்கறதா இருக்கேன். அவரோட சொத்துல இந்த புண்ணிய காரியம் என்னால பண்ண முடிஞ்சிச்சே அதுவே போதும். மத்தபடி பணம் வந்துட்டுங்கிறதுனால இந்த வயசுல துள்ளிக் குதிக்க முடியுமா என்ன? காசு வரும்போகும் மனுசா கிடைப்பாளா?” என்றாள்.

கனகு சீதாவின் முகத்தைப் பார்த்தான் அம்மாவின் வார்த்தைகள் அவளைச் சுட்டிருக்க வேண்டும். மனிதன் தான் படைத்த பணத்துக்கு ஏன் அடிமையாகிறான் என கனகு தன்னுள் கேட்டுக் கொண்டான். சாந்தா தான் சொன்னபடியே செய்தாள். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் இதில் சீதா மட்டும் விதிவிலக்கா என்ன?

2 Comments on “புற்று/ப.மதியழகன்”

  1. எனக்கு எதுக்கப்பா அவ்வளவு பணம். அதான் முப்பது லட்சத்துல உனக்கும் வரதுக்கும் ஐஞ்சஞ்சி லட்சம் தரதா இருக்கேன். பத்து லட்சத்தை எம்பேர்ல பேங்க்ல எஃடில போட்டுடப்போறேன் மீதி பத்து லட்சம் சாரதா இல்லத்துக்கு கொடுக்கறதா இருக்கேன். அவரோட சொத்துல இந்த புண்ணிய காரியம் என்னால பண்ண முடிஞ்சிச்சே அதுவே போதும். மத்தபடி பணம் வந்துட்டுங்கிறதுனால இந்த வயசுல துள்ளிக் குதிக்க முடியுமா என்ன? காசு வரும்போகும் மனுசா கிடைப்பாளா?”
    மிகச் சிறப்பான முடிவு. நல்ல கதை வாழ்த்துகள்

  2. முதியோர் இல்லம் சுமார் 40 ஆண்டுகளாக அதிகரிக்க யார் காரணம் என்று புரிந்தது.சாந்தா வின் மருமகள் சீதாவும் நாளை கண்டிப்பாக மாமியார் ஆகும் போது அவளுக்கு புரியும்.

Comments are closed.