வசந்தா கோவிந்தராஜன்/உன்னால் முடியும்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி வசந்தா கோவிந்தராஜன் எழுதிய ” உன்னால் முடியும்” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

“இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் வருகை தரவிருக்கிறார். அதுவரை அமைதி காக்க வேண்டுகிறேன்!” – ஒரு கரை வேட்டிக்காரர் இருபத்தோராவது தடவையாக அறிவித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவர் “இன்னைக்கு வந்துடுவாரா? குடுத்த பிரியாணி அப்பமே செமிச்சாச்சு,” என்று நக்கலடித்தார். கொல்லென்று சிரிப்பலை கிளம்பியது.

முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த விஸ்வேஸ்வரன் என்ற விச்சு, “பத்மா, ஆத்துக்குக் கெளம்பலாமா? ஜவ்வரிசி வடாம் 20 கிலோ, மாவடு 30 கிலோ, எலுமிச்சை,” என்று ஆரம்பித்தார்.

“எல்லாம் தயாராக இருக்கு. நாளைக்கு அனுப்பிடலாம். கவலைப்படாதீங்க! நாம இந்த அவார்டு வாங்கறதை நாம உருப்படவே மாட்டோம்னு சாபம் கொடுத்தவங்க பார்க்கணும். நாம முன்னுக்கு வந்தது தெரியணும். அதுக்காகத்தான் நானும் பொறுமையாக் காத்திண்டிருக்கேன்,” பத்மா சொல்லி முடிக்கும்போது “பாம் பாம்,” என்று அலறிக்கொண்டு கார்கள் வரிசையாக வந்து நின்றன.

கூட்டம் பரபரப்பானது. முதல்வரின் பார்வை தன்மேல் விழாதா என்ற நப்பாசையில் முண்டியடித்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் திணறினார்கள். முதல் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் – (விச்சு, பத்மா உட்பட) எழுந்து நின்று கை கூப்பினார்கள். இருபுறமும் நின்ற காவலர்கள் அவர்கள் நகராமல் பார்த்துக் கொண்டார்கள். அவார்டு வாங்கும் அனைவரும் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு, முதல்வரிடமிருந்து எப்படி விருது வாங்கவேண்டும் எனப்பல முறை ஒத்திகை அளித்த பின்னர் தான் இங்கே அமர வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு வழியாக வரவேற்புரை முடிந்தவுடன், “இவ்வருட சிறு தொழில் முனைவோருக்கான சாதனையாளர் விருதுகள் மாண்புமிகு முதல்வர் அவர்களால் வழங்கப்படவுள்ளது, அதற்கான பெயர்களை அறிவிக்கின்றோம்!”.

‘விச்சு & கோ,’ பெயர் அறிவித்தவுடன் விஸ்வேஸ்வரனும், பத்மாவும் விருதை வாங்கிக் கொண்டு முதல்வரின் இரு பக்கங்களிலும் நின்று போஸ் கொடுத்தனர். உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வளர்ந்து வரும் தொழிலதிபருக்கான பெருமிதம் இருவர் முகத்திலும் தெரிந்தது. பளிச் பளிச்சென ஃபிளாஷ்கள் மின்னின. கரகோஷங்கள் அதிர்ந்தன. இது பதினைந்து வருட உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். அந்த ஒரு நொடியில் உலகமே ஸ்தம்பித்த ஒரு உணர்வு. ஆனந்தக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த இவர்கள் மகன் வெங்கடேஷும், பத்மாவின் தம்பி தங்கைகளும் கண்ணீருடன் கை தட்டினார்கள். முதல்வர் இலேசாக விச்சுவின் தோள் தட்டிப் பாராட்டினார். இறங்கும்போது நெகிழ்ச்சியில் தள்ளாடும் பத்மாவின் தோளை விச்சு பற்றிக்கொண்டார்.

இருக்கையில் வந்தமர்ந்த பத்மாவுக்கு நிகழ்ச்சியில் மனம் செல்லவில்லை. நிகழ்ச்சி முடியும் வரை நகரவும் முடியாது. விச்சுவைத் திரும்பிப் பார்த்தாள். அவர் முதல்வர் உரையில் ஆழ்ந்து போயிருந்தார். ‘அரைக்கிறுக்கு,’ என்று பட்டம் சூட்டப்பட்ட அதே விச்சுவா இது? முகத்தில் கம்பீரம் மிளிர்கிறதே! நானும் தான்; இப்போது வைரத் தோடும், பட்டுப்புடவையுமாய் ஜொலிக்கறேன்! கருகமணி மாலையும் நைந்து போன புடவையுமாய்க் காட்சியளித்தவள் தானே!’

‘மனதின் ஆழத்தில் பதினைந்து வருடங்களாகப் புதைந்துபோன கசப்பான நினைவுகள்,’ இன்று மேலெழும்பியது. அப்போது நடந்த சம்பவங்களை யாருக்கோ நடந்தது போல் விலகி நின்று பார்க்கும் பக்குவம் அவளுக்கு வந்து விட்டிருந்தது.

நண்டும் சிண்டுமாய் நாலு குழந்தைகளை விட்டு விட்டு அப்பா ஓடிப் போன பின், அம்மா மங்களம் சமையல் வேலைக்குப் போய்க் குழந்தைகளின் வயிறு காயாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். எட்டாம் வகுப்புடன் பத்மாவின் படிப்பு நின்று போனது. அவளும் அவ்வப்போது அம்மாவுடன் சமையல் செய்யப் போவாள். அப்படித்தான் விச்சு வீட்டிற்கு அம்மாவுடன் போனபோது பட்டென்று அந்த அம்மாள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போனார்கள். விச்சுவின் அம்மா – பர்வதம்,

“என் பிள்ளைக்கு பத்மாவைக் கல்யாணம் பண்ணித் தரயா?” என்று மங்களத்திடம் கேட்டாள். மங்களத்துக்கு அது கனவா எனப் புரியவில்லை. பங்களா மாதிரி வீடு, இரண்டு கார், வீடு முழுக்க இழைத்துச் செதுக்கிய தேக்கு மரச் சாமான்கள், கண்ணைப் பறிக்கும் லாந்தர் விளக்குகள். இது குட்டி அரண்மனை. இந்த வீட்டில் என் பெண் வாழப் போகிறாளா? இந்தம்மாவுக்குப் பைத்தியமா? அல்லது இவர் புள்ளைக்கு ஏதாவது ஊனம் இருக்குமோ?’

“உங்க வசதி என்ன, எங்க நிலைமை என்ன! சும்மாப் பரிகாசம் பண்ணாதீங்க!”

“இதிலெல்லாம் யாராவது விளையாடுவாளா? என் புள்ளை விச்சுவைப் பாருங்கோ! அவன் கொஞ்சம் வெகுளி, அவ்வளவு தான். மத்தபடி இந்தாத்து நாட்டுப்பெண்ணாக பத்மா வந்தால் உங்க மத்த குழந்தைகளுக்கும் உதவலாமே, என்ற நல்லெண்ணத்துல தான் சொல்றேன். விச்சு, இங்க வாடா,” என்று கூப்பிட்டாள்.
“என்னம்மா, சாப்பாடு ரெடியா?” என்று கேட்டுக் கொண்டே வந்த விச்சு ஆறடி உயரத்தில் வாட்ட சாட்டமாக இருந்தான். முகம் மட்டும் குழந்தை மாதிரி அப்பாவியாய்த் தெரிந்தது. இவ்வளவு நாள் இந்தப் பையன் கண்ணில் பட்டதேயில்லையே! ஊனம் எதுவுமில்லை.

“விச்சு, அதோ வடை பண்ணிண்டிருக்காளே, அது தான் இவங்க பொண்ணு பத்மா. அவளைக் கல்யாணம் பண்ணிக்கறயா?” என்று கேட்டாள்.

“ஓ, பண்ணிக்கறேனே! எனக்கு தினமும் வடை பண்ணித் தருவாளா?” என்று ஆசையாய்க் கேட்டான். “வடை மட்டுமில்லைடா, எல்லாமே பண்ணித் தருவா. உன்னையும் நன்னா கவனிச்சுப்பா,” என்றாள்.

“நீ சொன்னாச் சரியா இருக்கும். நான் போய்ச் சூடா வடை எடுத்துக்கவா?”
பத்மாவின் அருகில் வந்தான். இரண்டு சூடான வடைகளைத் தட்டில் வைத்து அவன் கையில் கொடுத்தாள். “எனக்கு இன்னும் நாலு வடை வை. சாப்பிட்டுத் திரும்பக் கேட்பேன். ஆமாம், உன்னைக் கல்யாணம் பண்ணிண்டா எனக்குப் பிடிச்சதெல்லாம் பண்ணித் தருவயா?” என்று ஆசையாய்க் கேட்டான். குழந்தை போல் ஆர்வமாய்க் கேட்கும் அவனை நோகடிக்க மனமில்லாமல் “சரி,” என்றாள்.

எந்த நேரத்தில் ‘சரி’ சொன்னாளோ, ஒரே மாதத்தில் கல்யாணமாகி அந்த வீட்டுக்கு மருமகளாய் அடியெடுத்து வைத்து விட்டாள். முதலில் யோசித்த மங்களம் கூட “இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கறது கஷ்டம். எட்டாவது மட்டுமே படிச்சிருக்கற உனக்கும் நல்லது, உனக்குப் பின்னால் இருக்கற உன் தம்பி, தங்கைகளுக்கும் நல்லது. இத்தனை பொறுப்பையும் என் தலையில கட்டிட்டு ஓடிப் போன உங்க அப்பாவால நான் படற கஷ்டத்துக்கு உன்னால ஒரு விடிவு வரப்போறது,” என்றாள்.
விச்சுவின் அம்மா அப்படிக் கேட்டதிலிருந்து அங்கு போவதையே பத்மா நிறுத்தியிருந்தாள். அந்த நாட்களில் விச்சுவின் அம்மா மங்களத்தை நல்ல மூளைச்சலவை பண்ணிட்டாங்க போல.

தம்பி, தங்கைகளை வளர்க்க என்று இவள் படிப்பு பாதியில் நின்று போனது. இப்போதும் இவளே பலிகடா ஆகப்போகிறாள். தன் விதியை நொந்து கொண்டு திருமணத்துக்குச் சம்மதித்தாள். ஒரே மாதத்தில் விச்சு வீட்டிலேயே எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்தது. விச்சு பயிற்சியளிக்கப்பட்ட நாய்க்குட்டி மாதிரி அவர்கள் சொல்வதையெல்லாம் செய்தான். கல்யாணத்தன்று இவள் வீட்டைப் பார்த்த தம்பி, தங்கைகள் மலைத்துப் போய் நின்றார்கள். அக்கா அதிர்ஷ்டக்காரி என்று சந்தோஷப் பட்டார்கள்.

முதலிரவு அறைக்குள் நுழைந்த பத்மாவுக்குப் பெரிதாக கனவுகள் ஏதும் இல்லை தான். அவள் உள்ளே நுழையும்போதே, தட்டு நிறையப் பட்சணங்களை அடுக்கி வைத்து விச்சு கபளீகரம் பண்ணிக் கொண்டிருந்தான். அதை முடித்த பின், இவள் கொண்டு போன ஒரு செம்பு பாலையும், கன்றுக்குட்டி போல் குடித்து ஏப்பம் விட்டான். அடுத்த நிமிடமே படுத்துக் குறட்டைவிட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டான்.

அலங்காரம் கலையாமல் சிலை மாதிரி உட்கார்ந்திருந்த பத்மாவுக்கு எச்சில் வழியத் தூங்கும் அவனைப் பார்த்ததும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. வயிற்றை நிறைப்பதைத் தவிர எதுவுமே தெரியாமல் வளர்ந்து விட்ட அவனோடு எப்படி வாழ்க்கை நடத்துவது; எதுவுமே புரியவில்லை.

மறு நாள் காலையில், இங்கு ஒரு தினுசாக இருப்பது கணவன் மட்டுமல்ல என்பது புரிந்தது. இந்த வீட்டுப் பெண்கள் முழுச் சோம்பேறிகள். ஆண்கள் சபல புத்திக்காரர்கள். விச்சுவின் அண்ணி கர்ப்பமாக இருக்கிறாளென்று படுக்கையை விட்டு இறங்க மாட்டாள். ஒரு மணி நேரத்துக்கொரு முறை அவளுக்கு சூப், ஜூஸ் என அவளது மாடியறைக்குப் போய் எதையாவது கொடுத்துக் கொண்டே இருக்கணும்.

விச்சுவின் அண்ணா ரெடியாகிக் கீழே வரும்போது மேசையில் சுடச்சுட எல்லாம் தயாராக இருக்க வேண்டும். பத்மா பக்கத்தில் நின்று பரிமாறணும். பரிமாறும்போது அவர் கண்களும், கைகளும் விஷமம் செய்யும். “இவ்வளவு நல்லாப் பண்றயே, எல்லா விஷயத்திலும் அப்படித் தானா? விச்சு அதிர்ஷ்டசாலி,” என்று அடிக்குரலில் சொல்லி விட்டு எதுவுமே நடக்காத மாதிரிக் கை கழுவப் போவார்.

விச்சு அவருக்குக் கை துடைக்கத் துண்டு எடுத்துத் தருவது, அவர் ஷூவைப் பாலீஷ் போட்டுத் தயாராக வைப்பது, அவர் துணிகளைத் துவைத்து இஸ்திரி போட்டு வைப்பது என அவர் கிளம்பும் வரை அவருக்குச் சேவகம் செய்வான்.

அவர் கிளம்பிய பின் வந்து தட்டு நிறையச் சாப்பிட்டு விட்டுத் துணி துவைக்கவோ, தோட்டவேலை செய்யவோ கிளம்பி விடுவான். அடுத்து மாமியாரின் தம்பி மனோகர் சாப்பிட வருவார். இவள் மேசையில் எடுத்து வைத்திருந்தாலும் ஏதாவது காரணம் சொல்லி இவளைக் கூப்பிடுவார். இவளைப் பார்த்ததும் “பத்மா, உன்னைப் பார்த்தால் பாவமாய் இருக்கு. இந்த வீட்டுல யாருக்கும் இரக்கமே கிடையாது. நாள் முழுக்க உன்னை விரட்டி விரட்டி வேலை வாங்குவாங்க. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்கிட்டக் கேளு. மாடு மாதிரி நீ உழைக்கறதைப் பார்த்தால் என் மனசு கலங்குது,” என்பார். இவர் ஒருத்தராவது இரக்கப் படறாரே என்று பெருமூச்சு விட்டாள். ஒரே வாரத்தில் அவள் அபிப்ராயம் தலை கீழானது.

மாமியாரின் முழு நேர வேலையே திவானில் உட்கார்ந்து வாயில் எதையாவது அரைத்துக் கொண்டே சீரியல் பார்ப்பது மட்டுமே. இங்கு நடப்பதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார். ‘இவள் சாப்பிட்டாளா’ என்று கேட்க அங்கே ஒரு ஜீவன் கூட இல்லை.

அம்மா வீட்டில் கஞ்சி குடிச்சாலும், சேர்ந்து குடிக்கும் குதூகலம் இருந்தது. இங்கே அனாதை மாதிரி உணர்ந்தாள். சமையல் வேலையும், வீட்டு வேலையும் இடுப்பொடிந்தது. இவள் அசந்து உட்கார்ந்தால் விச்சு வந்து “பத்மா, நீ எப்பவும் வேலை செஞ்சுக்கிட்டே இருக்க. நீ வரதுக்கு முன்னாடி நான்தான் எல்லாரோட துணியும் துவைப்பேன். உனக்கு முடியலைன்னா சொல்லு, நானே துவைக்கறேன்,” என்று சொன்ன போது தான் இவன் கல் இல்லை, களிமண். இவனை எப்படிப் பிடிக்கிறோமோ அந்த வடிவத்துக்குக் கொண்டு வரலாம் என்று தோன்றியது.

அதுவும் அவர்கள் அனைவரும் உள்ளாடைகள் உட்படத் துவைக்கப் போடுவது அருவருப்பாக இருந்தது. அதைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் அண்ணியின் உள்ளாடைகளைக் கூடத் துவைத்துக் காயப்போடும் கணவனைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை.

வந்த ஒரு வாரத்திலேயே, இந்த வீட்டில் விச்சு எடுபிடி, தான் சம்பளம் வாங்காத வேலைக்காரி மற்றும் சமையல்காரி என்பது பத்மாவுக்குத் தெளிவாகப் புரிந்தது. விச்சு அவர்கள் ஏவும் வேலைகளை ஓடி ஓடிச் செய்வதைக் கூடப் பொறுத்துக் கொண்டாள். அந்த வீட்டு டிரைவர் கூட வேலை வாங்கியதைப் பார்க்கும்போது தான், அவனை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது விளங்கியது. மூர்க்கனின் மனைவியாகக் கூட இருந்து விடலாம், முட்டாளின் மனைவியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தாள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த வீட்டு ஆண்கள்(விச்சுவைத் தவிர) தொட்டுத் தொட்டுப் பேசினார்கள். இரட்டை அர்த்தத்தில் கிண்டல் செய்தார்கள். அவர்கள் கண்ணிலேயே அழைப்பு இருக்கும். இவளுக்கு உடம்பெல்லாம் கூசும். மாமியார் தம்பி மனோகர் தனியாக இவள் எப்போது மாட்டுவாள் என்று கழுகு மாதிரி காத்துக் கொண்டிருந்தார். இவரைப் போய் நல்லவர்னு நினைச்சோமே என்று நொந்து கொண்டாள்.

ஒரு நாள் அவளிடம், “பாவம் நீ, உன்னை எனக்குத்தான் கட்டி வைக்க அக்காவிடம் கேட்டேன். அவ ‘அந்த அரைக் கிறுக்குக்கு அவளைக் கட்டி வைக்கிறேன். வேணும்னா நீயும் அனுபவிச்சுக்கோ,’ன்னு சொல்லிட்டா. அவனுக்கு சாப்பிடறதைத் தவிர வேற எதுவும் தெரியாதே. பாவம், அவனால உனக்கு எந்த சுகமும் கிடைச்சிருக்காது,” என்று சொல்லி மெதுவாக அவள் இடுப்பில் கை வைத்தார்.

அந்த நேரம் சரியாக உள்ளே நுழைந்த விச்சு, “பத்மா, லட்டு எங்க வைச்சிருக்க?” என்று கேட்டதும் அவன் மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. ‘நீ இப்படி இருப்பதால் தானே கண்டவனும் என் மேல் கை வைக்கிறான்?’ வந்த ஆத்திரத்தில் அவனை முறைத்துக்கொண்டே இடுப்பில் கை வைத்தவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.

விச்சு தன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு “பத்மா, இனிமேல் லட்டு கேட்க மாட்டேன், அதுக்காக மாமாவை அடிக்காதே!” என்றான். இது குழந்தை, இது கிட்டச் சொல்லிப் பிரயோசனம் இல்லை. அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் வந்து கதவைத் தாளிட்டாள்.

“நீ ஏன் இப்படி இருக்க? என்னை எதுக்குக் கல்யாணம் பண்ணின?” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். “அழாதே பத்மா, நீ அழுதால் எனக்கும் அழுகையா வருது. அப்பாவுக்கப்புறம் என்கிட்ட அன்பா இருக்கறது நீ மட்டும் தான்,” என்று அவனும் அழுதான்.

“உங்கம்மா ஏன் உங்ககிட்டப் பாசமா இல்லை?”

“எங்கம்மா தான் செத்துப் போயிட்டாங்களே! அப்புறம் தான் அப்பா இங்க கூட்டிட்டு வந்தார். அப்பா ‘இவங்க தான் இனி உன்னோட அம்மா, இவங்க சொல்றபடி நீ நடந்துக்கணும்’னு சொன்னாரு. நானும் அப்படித்தான் நடந்துக்கறேன். அப்பா செத்தப்புறம் படிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இவங்க சொல்ற வேலையெல்லாம் செய்வேன். கையெழுத்து போடச் சொல்வாங்க, போடுவேன். அப்புறம்தான் சோறு போடுவாங்க” என்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குப் புரிந்தது. மாமனாரின் ஆசை நாயகியின் மகன் இவன். இவன் பெயரில் இருக்கும் சொத்தை அனுபவிப்பதற்காக இவனுக்கு சோறு போட்டுத் தங்களுடன் வைத்திருக்கிறார்கள். இந்தக் கேடு கெட்ட குடும்பத்திற்கு மாடு மாதிரி உழைப்பதை விட வெளியில் போய் உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். இவன் உழைக்கத் தயங்காதவன். இங்கே இருந்தால் ஆயுசு முழுக்க அடிமை வாழ்க்கை தான். ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

“நான் சொல்றதைக் கேப்பீங்க தானே? நாம இங்கேருந்து வெளில போயிடுவோம். அங்க உங்களுக்குப் பிடிச்சதை மட்டும் செஞ்சு தரேன். சரியா? யார் என்ன சொன்னாலும் நான் பத்மா கூடத்தான் போகப் போறேன்னு சொல்லணும்,” என்றாள். ஒரு பெட்டியில் தான் கொண்டு வந்ததை மட்டும் எடுத்துக்கொண்டாள். விச்சு கையைப் பிடித்துக் கொண்டு மாமியாரிடம் வந்தாள். “நாங்க இந்த வீட்டை விட்டுப் போகப் போறோம்,” என்றாள்.

“நீயும் அவனை மாதிரியே பைத்தியம் ஆயிட்டயா? நீங்க இரண்டுபேரும் எதுவும் படிக்கலை. ரெண்டு பேர் கிட்டயும் சல்லிக்காசு கிடையாது. உன் கழுத்துல, கைல உள்ளது கூட நான் போட்டது. சோத்துக்குத் திண்டாடி நடுத்தெருவுல நிக்கப் போறீங்க,” என்று மிரட்டினார்.

“எங்ககிட்டக் காசு கிடையாது தான். உங்க நகையும் வேண்டாம், உங்க சொத்தும் வேண்டாம். எங்க கை, கால் போதும், நாங்க முன்னுக்கு வந்து காட்டுவோம்,” என்றாள் உறுதியாக.

“என்னடா விச்சு, இந்த அம்மா தானே இவ்வளவு நாள் உனக்குச் சோறு போட்டேன்! என்னை விட்டுட்டுப் போயிடுவியா?”

“எங்கம்மாதான் செத்துப் போச்சே, நீ என் அம்மாவா இருந்தால் எனக்கு இப்படி சூடு போட்டிருப்பயா?” என்று சட்டையைத் தூக்கிக் காட்டினான். அப்போது தான் பத்மா கவனித்தாள். அவன் அடிவயிற்றில் நீளமாகச் சூடு வைத்த வடு! ‘பாவிகளா!’

இதெல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மனோகர், “விடுக்கா, இரண்டு பேருக்கும் வாட்டசாட்டமா உடம்பு இருக்குன்னு திமிர். அதை வைச்சே பொழைச்சுப்பாங்க,” என்றார் நக்கலாக.

“வாங்கினது பத்தலை போல. உன்னோட புத்தி அப்படித்தானே வேலை செய்யும்? இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க, நாங்க உடம்பை நம்பித்தான் போறோம். நீங்க நினைக்கிற அர்த்தமில்லை. உழைப்பு தான் எங்க மூலதனம். ஒரு நாள் நீங்கல்லாம் எங்களைப் பார்த்து பிரமிச்சு நிற்கப் போறீங்க!” என்று சொல்லி விட்டு அவர்கள் போட்ட நகையைக் கழற்றி வைச்சுட்டு வந்து, இன்றோடு பதினைந்து வருடங்கள் முடிந்து விட்டன.

நேராக அம்மா வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொன்னாள். பக்கத்திலேயே ஒரு போர்ஷன் வாடகைக்கு எடுத்துக் கொண்டாள்.

அதிகம் செலவில்லாமல் ஒரு பிசினஸ் தொடங்க வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசித்த போது சட்டென்று இடியாப்பம் நினைவுக்கு வந்தது. சுத்தமான முறையில் மிருதுவான இடியாப்பம் செய்து விற்பனை செய்யலாம் என்று முடிவுக்கு வந்தாள். தவணை முறையில் தானியங்கி இடியாப்ப மிஷின் வாங்கினாள். பதமான பக்குவத்தில் ரெடியானதும் மாலை நாலு மணிவாக்கில் ஒரு பெரிய தூக்கில் வைத்து விச்சுவிடம் கொடுத்தனுப்பினாள். அவன் வீடு வீடாகப் போய் “மாமி, இடியாப்பம் வாங்கறேளா?” என்று சத்தமாகக் கேட்பான்.

வேண்டாம் என்று சொன்னாலும் “ஒரே ஒரு தடவை வாங்கிப் பாருங்கோ! காசு கூடக் குடுக்க வேண்டாம்! குழந்தைக்குக் குடுங்கோ!” என்பான். அவனது வெகுளித்தனமான பேச்சுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதற்காகவே அவனிடம் வாங்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கொடுப்பதை எண்ணிக்கூடப் பார்க்காமல் பையில் போட்டுக் கொள்வான். ஒரு சிலர் அவன் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் தான்.

நாளாக ஆக விச்சு காசைச் சரியாக எண்ணி வாங்கக் கற்றுக் கொண்டான். வயிறே பிரதானமாக இருந்த விச்சு அரை வயிறு சாப்பிடப் பழகினான். வாழ்க்கையும் புரிந்தது .

அடி அடியாக முன்னேறி, பதினைந்து வருட உழைப்பில் சென்னை முழுக்க “விச்சு & கோ” பிரபலமாகியிருந்தது. அறுபது பேர் இவர்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள்.
……
படபடவென்று கைதட்டல் ஒலியினால் அவள் சிந்தனை இழை அறுந்தது. முதல்வர் கிளம்பி விட்டார். கூட்டம் கலைய ஆரம்பித்தது.

“பத்மா, முதல்வர் நம்ம நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டுச் சொன்ன போது சந்தோஷமா இருந்தது. இதை எல்லாரும் TV ல பாத்திருப்பா இல்ல, நமக்கு இதுவே ஒரு விளம்பரமாயிடுத்து இல்லையா?” என்று கேட்கும் கணவனைப் பெருமையாகப் பார்த்தாள்.

அர்ப்பணிப்பும், உழைப்பும் சேர்ந்தால் களிமண் கூடக் கும்பிடும் தெய்வமாகும் என்பது புரிந்தது.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச்சார்ந்த திருமதி வசந்தா கோவிந்தராஜன் சென்னையில் வசிக்கிறார். தமிழ்நாடு அரசின் வேளாண்துறையில் பணிபுரிந்து விருப்பார்ந்த ஓய்வு பெற்ற இவருடைய “யார் கடவுள்?” என்ற சிறுகதை 2021ல் வானவில் சிறுகதைப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பத்து குறுநாவல்களும், இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார்.
குவிகம் குறும்புதினம் போட்டியில் மூன்று முறையும், இலக்கிய பீடம் சிறுகதைப்போட்டியில் இரண்டு முறையும், ஜெர்மனியின் துகள் அமைப்புப்போட்டிகளில் இரண்டு முறையும் இவரது கதைகள் தேர்வாகியுள்ளன. கேலக்ஸி குழுமம், கானல் அமீரகம், உரத்த சிந்தனை, அன்னை ஸ்வர்ணாம்பாள், நெய்வேலி தாய் தொலைக்காட்சி, லலிதா அம்மையார், அன்னை குருபாக்கியம், அமெரிக்காவின் வல்லினச்சிறகுகள், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஆனந்த சந்திரிகை (மூன்று முறை), KYN குழுமம் நடத்திய போட்டிகள், மத்யமர் மற்றும் சங்கப்பலகை போன்ற முகநூல் குழுமங்கள் நடத்திய போட்டிகள் என ஏறத்தாழ இருபத்தைந்து படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் பெற்றுள்ளார்.
இது தவிர லேடீஸ் ஸ்பெஷலில் மூன்று சிறுகதைகளும், உரத்த சிந்தனையில் ஒரு ஆன்மீகக் கட்டுரை மற்றும் பயணக்கட்டுரையும், குமுதம் பக்தி ஸ்பெஷலில் இரண்டு ஆன்மீகக்கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. தினமலர் அயலக இதழில் இவரது அமெரிக்க அனுபவம் குறித்த இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. புஸ்தகா பதிப்பகம் மூலமாக இவரது “யார் கடவுள்”, “சினேகாவின் காதல்”, “வேர்களும் விழுதுகளும்” மற்றும் “வாழ்வெனும் நதி” (வெற்றி பெற்ற கதைகளின் தொகுப்பு) “முரண்படும் திருமணங்கள்” என்னும் முழுநாவல் என ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன