WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி லலிதா சங்கர் எழுதிய ” செங்குழலி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

“பசங்களா! செய்யுள்லாம் நல்லா புரிஞ்சதுல்ல? ஏதாவது சந்தேகம் இருந்தா இப்போவே கேட்டுடுங்க. அப்புறம் நாளைக்கு இது புரியல, அது புரியலன்னு சொல்லக்கூடாது. மறக்காம இன்னிக்கே செய்யுளை படிச்சுட்டு வந்துடுங்க. சேக்கிழார் பத்திய பெரிய புராணத்துல இருக்கற செய்யுளை நாளைக்கு கேப்பேன்; பொருளோடு மறக்காம எல்லாரும் சொல்லணும். புரிஞ்சுதா?”
“புரிஞ்சுது டீச்சர்!” செங்குழலி சந்தோஷமாகக்கூவினாள். அடுத்தடுத்த வகுப்புக்களில் அவளின் குதூகலம் தொடர்ந்தது. மாலை நெருங்க நெருங்க வழக்கம்போல அவள் முகத்தில் பீதி!
“ஏய்! செங்குழலி! ஏண்டி தினமும் சாயங்காலமானா உன் மூஞ்சி இப்படி சுருங்கிப்போகுது?”
“ஒண்ணுமில்ல. எங்க அப்பா நேரத்துக்கு வரணுமேன்னு தான் கவலை வந்துடும். வேற ஒண்ணுமில்ல. முந்தாநாள் அப்படித்தான் என்னை கூட்டிட்டுப்போக வழக்கமா வர்ற அப்பா வரலை. மணி அஞ்சு, அஞ்சரை, ஆறு, ஆறரைன்னு போகுது! அப்பாவை ஆளைக்காணும். படிக்கட்டுல உட்கார்ந்துருக்கற எனக்கு அவசரமா ஒண்ணுக்கு வந்து முட்டுது. தரையில இறங்கி தவழ்ந்து பாத்ரூமுக்குப்போகலாம்னா கீழ தரை முழுசும் சகதி, அதைத்தாண்டி அங்க பாத்ரூம்; அரசாங்க பள்ளிக்கூடத்து பாத்ரூம் எப்படி இருக்கும்? மூக்கைப்பிடிச்சுக்கிட்டு உள்ள போற இடத்துல நான் தவழ்ந்து போய், தவழ்ந்து வந்தா என் உடம்பு நாறிப்புடுங்காது?”
“எங்க அப்பனை நெனச்சு கோவம், கோவமா வந்துச்சு. அடிவயிறு கனத்துப்போயி வலியும், வேதனையா நான் அவஸ்தைப்படறது எனக்குத்தான் தெரியும். வாரத்துல பாதி நாள் இப்படி பயந்து பயந்தே என் பொழப்பு ஓடுது.”
“வேலையை முடிச்சுட்டு குடிபோதையில் எங்க அப்பா என்னை மறந்துடறது வழக்கமா நடக்கறதுதான். அவரு தெரிஞ்சோ அல்லது அவரை யாராவது தெளிய வெச்சு அனுப்பறது வாடிக்கையா இருந்தாலும் என்ன பண்றது? இந்த ஒண்ணுக்கு மட்டும் வராம இருந்தா நல்லா இருக்கும்.”
மணி அடித்தது. செங்குழலி பள்ளி வராண்டாவில் காத்திருந்தாள். நல்லவேளை பதினைந்து நிமிடங்களில் அவள் தந்தை வரவும் அவள் முகத்தில் மகிழ்ச்சி! தந்தையைத் தாவி அணைத்துக்கொண்டாள். அவரின் தோளின் மீதேறி வீட்டை அடைந்தாள்.
“ஏங்க! போதும் நம்ம செங்குழலியை பத்தாப்போட நிறுத்திக்கிடுவோம். உங்களுக்கும் வயசாகுதுல்ல? எத்தனை நாள் இப்படியே இவளை தூக்கித்தூக்கி சொமப்பீங்க?” ராசாத்தி கணவனை சீண்டினாள்.
“ஆங்! என் உடம்புல உசுரு இருக்கறவரைக்கும் சொமப்பேம்புள்ள! படிக்கணும்னு நினைக்கிற நம்ம பொண்ணு என்ன படிக்கணும்னாலும் படிக்கட்டும்.”
“அட! இடுப்பெலும்பே இல்லாம பொறந்த நம்ம குழந்தையை எல்லாரும் தூக்கி வீசிட்டு வான்னு சொல்லும்போது அமைதியாத்தானே இருந்தீங்க? என் மாருல பாலக்குடிச்ச குழந்தையை தூக்கிப்போட மனசு இல்லாம தூக்கிட்டு வந்தபோது, வராத பாசம் இப்போ மட்டும் உங்களுக்கு எப்படி வந்துச்சாம்?”
“ம்ம்ம்! உன் மாருல பாலக்குடிச்சுட்டு அமைதியா அவ என்னைப்பார்த்த பார்வை! “நான் பொறக்கறதுக்கு காரணமான நீயே என்னை இப்படி ஒதுக்கலாமா,”ன்னு கேக்கற மாதிரி இருந்துச்சு. ஈட்டி மாதிரி குத்திச்சு. அப்படியே தூக்கி என் மாருல சுமக்க ஆரம்பிச்சவன் தான் இன்னும் இறக்கல; இனிமேலும் இறக்க மாட்டேன்.”
ஆனால் அவன் தன் மாரிலிருந்து செங்குழலியை வெகு சீக்கிரம் தான் இறந்து, இறக்கவேண்டி வரும் என்று அவனே நினைத்திருக்க மாட்டான்.
செங்குழலியின் வாழ்க்கையில் இடி விழுந்த தருணம் அது. மூன்றாவதாகப்பிறந்த நான் அறிவோடு இருந்து என்ன பண்ண? என்னால் என்ன செய்ய முடியும்? பத்தாவதோடு என்னோட படிப்பை மூட்டை கட்டி விட வேண்டியது தானா? உயிருக்குயிரான அப்பாவைப்பிரிந்து இனி எப்படி நாட்களைக்கடத்துவது? கதறி அழுதாள். அழுதழுது கண்ணீர் வற்றியது. இனி அழுவதற்கும் ஒன்றும் இல்லை. மேற்கொண்டு ஆகவேண்டியதைப்பற்றி யோசிக்கணும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வாகனம் இலவசமாக வழங்கும் இடத்திற்கு அவளை ஒரு நல்லுள்ளம் அழைத்துச்சென்றது அன்புடன் அதை வாங்கி அமர வைத்து அழகு பார்த்தது. அந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரன் சரவணன். அரசுக்கல்லூரி மாணவன். ஆதரவற்ற மனிதர்களையும், மிருகங்களையும் ஒருங்கே அரவணைப்பவன். அவன் செங்குழலியின் நிலை தெரிந்து அவளுக்கும் உதவ வந்தான்.
“செத்துப்போன அப்பா தனக்குப்பதிலாக அனுப்பிய தேவதூதன் அவன்,” என்று செங்குழலி அவனை தெய்வமாகவே நினைத்து தொழுதாள்.
அந்த தெய்வத்தின் துணையோடு அவளுக்கு விருப்பமான படிப்பில் படித்து முன்னேறினாள். அறிவும் தன்னம்பிக்கையும் அவள் குறையைக்களைந்து மெருகேற்றியது.
பலப்பல கடுமையான போராட்டங்களுக்குப்பிறகு கணினித்துறையில் அவளின் அறிவுக்கு வேலை கிடைத்தது. உடல் ஊனத்தைத்தாண்டி அவளை பணிக்கு அமர்த்தும் தேவையை அந்த நிறுவனத்துக்கு நிரூபிக்க அவள் மிகவும் போராட வேண்டி வந்தது அவள் அனைத்தையும் கடந்து தன்னை நிலை நிறுத்தினாள்.
தன்னைப்பார்க்கும் பரிதாபமான பார்வைகளை அவள் அறவே வெறுத்தாள். சரவணனின் கனிவான பார்வையும், ஊக்கமும் அவளின் பொக்கிஷமாக இருந்தது.
“செங்குழலி! ஏன் ஒருமாதிரியா இருக்க?”
“இல்ல – ஒண்ணும் இல்ல.”
“இல்லையே! உன் முகத்துல ஏதோ வேதனை தெரியுதே!”
அவன் அவளை அப்படிக்கேட்டதும் அவள் கண்களில் மளுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.
“இல்ல! இந்த வண்டி வசதியாத்தான் இருக்கு. இந்தப்பாழப்போன உடம்புக்கு எதுதான் ஒத்துக்குது? சேந்தாப்போல ஒரு அரைமணி நேரம் இந்த வண்டியை ஓட்டினா என்னோட முதுகெலும்புல குத்திக்குத்தி வலிக்க ஆரம்பிக்குது. உட்கார்ற இடத்துல தோல் வழண்டு ஒரே புண்ணா ஆயிடுது. அதுக்காக நான் வெளில போக வராம இருக்க முடியுமா? வீட்டுல சொகுசா வாழறதுக்கு இங்க என்ன சொத்து பாழாப்போகுது? இந்த வேதனையை அனுபவிக்கணும்னு என் தலையெழுத்து; அதுக்கு யாரு என்ன பண்ண முடியும்?”
அன்று ஞாயிறு!
செங்குழலி தூங்கி மெதுவாக எழுந்து வாசலுக்கு வந்தாள். வாசலில் சரவணன்!
“என்னங்க, காலையிலேயே எங்க இங்க?”
“அன்னிக்கு நீங்க சொன்னீங்கல்ல! எனக்கு ஒரே யோசனை. பாவம் இந்த இரும்பு வண்டி உங்களை இவ்வளவு பாடுபடுத்தறது நமக்குத் தெரியாமலே போச்சேன்னு நினைச்சுக்கிட்டேன். அதுதான் மெத்தை தைக்கறவரை கையோட கூட்டிக்கிட்டு வந்துட்டேன். இவர் உங்க பிரச்சனையை பாதி சரி பண்ணிடுவார். உங்களுக்கு இனிமே தோல் வழண்டு புண்ணு வராது; ஆனால் உட்கார்ந்துக்கிட்டே இருக்கறதுனால வர்ற முதுகு வலிக்குத்தான், என்ன செய்யறதுன்னு தெரியல. யோசிக்கறேன்.”
யோசனையுடன் நிற்கும் சரவணனைப்பார்த்து, செங்குழலிக்குள் பதின்மூன்று வயதிலிருந்து இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த அது வீறு கொண்டு கிளம்பியது. கடவுளே!
“அம்மா! இங்க வா!”
“என்ன கண்ணு!”
“இந்தா – இது பிடிச்சிருக்கா?”
“அட! புடவை ரொம்ப அழகா இருக்கே! எனக்கா?”
“உனக்குத்தான்.”
“அப்போ, அக்காக்களுக்கு, உனக்கு?”
“அக்காக்களுக்கும் வாங்கி இருக்கேன். எனக்கு இதை வாங்கினேன்.”
“என்னது? வெள்ளி கொலுசா?”
“ம்ம்ம்! சின்ன வயசுல நான் கல் வெள்ளிக்கொலுசு போட்டுக்கணும்னு ஆசைப்பட்டபோது எக்ஸ் மாதிரி இருக்கற இந்தக்கோணக்காலுக்கு கொலுசு ஒரு கேடான்னு எல்லாரும் கேலி செஞ்சீங்க. அந்தக்கல்வெள்ளி கொலுசு கூட யாரும் வாங்கித்தரல; அப்பவே நான் முடிவு செஞ்சுருந்தேன் என்னோட முதல் சம்பளத்துல வெள்ளிக்கொலுசு வாங்கணும்னு. இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கும்மா!”
“ஏண்டி நானா சொன்னேன்?”
“ஆமா – நீயும் தான். உனக்கு அப்போ எனக்கு வலிக்கும்னு தெரியல. தெரியாம சொல்லிட்ட, விட்டுத்தள்ளு. இந்தக்கொலுசு என் காலுக்கு நல்லா இருக்கா?”
“அழகா இருக்கு செங்குழலி! அட இது என்ன பாண்ட் சர்ட்?”
“அது! அது வந்து! சரவணன் சார்க்கு”. (எனக்கு ஏன் வெக்கம் வருது? வர வர சரவணன் சாரை நினைச்சாலே ஒருமாதிரி பண்ணுதே) அவளுக்குள் கிளம்பிய ஆசையை அவள் முழுங்கினாள்.
…..
“செங்குழலி! இந்த சர்ட்டும் பேண்டும் ரொம்ப அழகா இருக்கு. எதுக்கு இதெல்லாம்?”
“இல்ல சார்! நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சுருக்கீங்க. அதுக்கு என் தோலையே செருப்பா தெச்சுப்போட்டாலும் தகும்.” (சொல்லும்போதே வெக்கம் வருதே! ஏன் என்னால அவரை நேருக்கு நேர் பார்க்க முடியல?)
“வாங்க தம்பி! இன்னிக்கு எங்க செங்குழலி இந்த நிலைக்கு வந்துருக்கான்னா அதுக்கு நீங்கதான் காரணம். நீங்க நீண்ட காலம் கண்ணுக்கு நிறைஞ்ச மனைவி குழந்தைகளோட சந்தோஷமா இருக்கணும். காபி சாப்பிடறீங்களா?”
“கண்ணுக்கு நிறைஞ்ச மனைவியா! அப்போ நான்! அரைகுறை உடம்போட அவருக்கு தகுதியானவளா? சேச்சே! எனக்கு எப்படி இந்த ஆசையெல்லாம் வரலாம்?” – கண்களில் குபுக்கென்று கண்ணீர் வந்தது.
“அதெல்லாம் வேண்டாம் ஆண்டி! நான் வேற வேலையா இந்தப்பக்கம் வந்தேன் அப்படியே செங்குழலியும் பார்த்துட்டுப்போலாம்னு. நான் கிளம்பறேன் ஆண்டி! செங்குழலி! வரேன்.”
சரவணனின் குரல் அசரீரியாகக்கேட்டு அவளை உலுக்கியது. தலையைக்குனிந்து கொண்டே மண்டையை ஆட்டினாள்.
நல்ல வேலை, கைநிறைய சம்பளம், தேவைக்கு எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லை. நாட்கள் ஓடின.
“ஏண்டி! செங்குழலி! அந்தத்தம்பி என்ன தப்பு பண்ணிச்சு? நீ அவரு வரும்போதெல்லாம் ஏதாவது சாக்கு சொல்லி அந்தத்தம்பி முகத்தையே திரும்பிப்பாக்க மாட்டேங்கற? ஏன்?”
“அப்படில்லாம் ஒண்ணும் இல்லையே!”
“இல்லையா? முன்னாடியெல்லாம் அந்தத்தம்பி வந்தா பேசிக்கிட்டே இருப்ப. எதுக்கெடுத்தாலும் அது கிட்ட உதவி கேட்டுக்கிட்டே இருப்ப, அதுவும் எல்லா தடவையும் முகம் கோணாம செஞ்சு கொடுக்கும். இப்போ என்ன ஆச்சு உனக்கு?”
“ஒண்ணும் இல்லையே!”
“என்ன ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்லன்னு சொல்ற. உனக்கு வேணுங்கும் போது அந்தத்தம்பி வேணும், இப்போ அதோட தயவு தேவையில்லை; அதனால அந்தத்தம்பியை முகம் குடுத்துப்பாக்காம கூட நீ இருப்பியா? அது ஏதோ கேக்க வருது; நீ வெடுக்குன்னு பேசின மாதிரி தெரிஞ்சுச்சு. எனக்கென்னவோ இதெல்லாம் சரியாப்படல. இங்க பாரு! நம்ம வாழ்க்கையில எது இருக்கோ இல்லையோ எப்பவும் நாம நன்றி மறக்கக்கூடாது. காரியம் ஆனதும் மனுசங்களைத் தூக்கிப்போடக்கூடாது. அது நல்லதுக்கில்ல ஆனால் நீ இப்போ பண்றது, அந்தத்தம்பியை தூக்கிப்போடறது மாதிரி தான் இருக்குது.”
“அம்மா! போதும் நிறுத்து. என்னால முடியல. நான் என்ன செய்வேன்? உடம்பை முடமாக்கிய கடவுள் மத்ததையும் அப்படியே பண்ணி இருக்கலாம்ல?”
“என்னது பண்ணி இருக்கலாம்?”
“எனக்குல்லாம் எதுக்கு காதல்? அது எனக்கு வரலாமா? அந்த சரவணனைப்பார்த்தா எனக்கு ஆசை பொங்குதே! நான் என்ன செய்யட்டும்? கண்ணுக்கு நெறஞ்ச அந்த மனுஷன் எங்க? நான் எங்க? ஆண்டவன் இடுப்பெலும்பில்லாம படைச்சவன், ஒரு உணர்ச்சியும் இல்லாத ஜடமாவும் சேர்த்துப்படச்சுருக்கணும். தப்பு பண்ணிட்டான். எனக்கு வரவேண்டிய வயசுல எல்லா ஆசையும் வந்துச்சு. அடக்கிக்கிட்டுத்தான் இருந்தேன். இப்போ சரவணன் மேல பூதாகாரமா பொங்கி நிக்குது. நான் என்ன பண்ணட்டும்? அவரை பாக்காம இருந்தா இந்த உணர்ச்சிலேர்ந்து தப்பிச்சுடலாம்னு நினைக்கறேன் ஆனால் முடியல.”
“என் கண்ணே! உன் வேதனை புரியுது. அழுது கொட்டிடு. உன் வேதனை வடியட்டும். அதுக்காக அந்தத்தம்பியை உதாசீனம் செஞ்சா எல்லாம் சரியாகிடுமா? உன்னோட உதாசீனம் அந்தத்தம்பிக்கு வலிக்காது? சாதாரணமா இருக்கறது கஷ்டம் தான். உணர்ச்சிகளை அடக்கறது உனக்கு மட்டுமல்ல; எல்லாருக்கும் தேவையான ஒண்ணுதான். அதை அடக்கப்பழகிக்கத்தான் வேணும்.“
“எப்படிம்மா?”
“அவர் கூட அவருக்கு உதவியா நீயும் சேவை பண்ணு. எப்படியெல்லாம் அவருக்கு உதவ முடியும்னு யோசி. கூடவே மனசால அவரை விட்டு விலகி இருக்கணும்னு நினை. அந்த நல்ல மனசு எப்பவும் நல்லா இருக்கட்டும்னு மனசால வாழ்த்து. காதலை அப்படிக்கூட திசை திருப்பலாம். அன்னை தெரசால்லாம் எப்படி வாழ்ந்தாங்க? அவங்க தன்னோட காதலை தொழுநோயாளிகளுக்கு காமிச்சாங்க, அப்புறம், குழந்தைங்க, வயசானவங்கன்னு அவங்க காதல் கிளைவிட்டுப்பரவிச்சு.”
“படிக்காத இந்த அம்மாக்கே இவ்வளவு தெரியும்போது, இம்புட்டுப்படிப்பு படிச்ச என் பொண்ணு உனக்கு எவ்வளவு விஷயம் தெரியணும்? எம்பொண்ணு நாளைக்கு இன்னொரு அன்னை தெரேசாவா ஊரு மெச்ச வாழலாம், அல்லது அவளுக்கு ஒரு காதல் கணவன் வாய்ச்சு ஒரு நல்ல குடும்பம் அமையலாம், ஏன் இந்த சரவணனுக்கே உன்னைப்பிடிச்சு கல்யாணம் கட்டிக்கவும் வாய்ப்பு இருக்கே! ஆனால் எது நடந்தாலும் அது நல்லதுக்குன்னு நினைச்சுக்கணும்; எப்பவும் நீ துவண்டு போகக்கூடாது கண்ணு!”
“எனக்கே நீ பொறந்தபோது எந்த நம்பிக்கையும் இல்லை. டாக்டருங்கல்லாம் எங்களுக்கு நீ வாழ்நாள் முழுக்க ஒரு பாரமா இருப்பன்னு சொன்னாங்க. என்னைச்சுத்தி இருந்த சொந்தங்கல்லாம் உன்னைத் தூக்கி போடச்சொன்னாங்கதான். எனக்கு மனசு கேக்காம உன்னைத்தூக்கிட்டு வந்த போது, நான் நம்பல; உன்னை நினச்சு அழுதுகிட்டு தான் இருந்தேன். ஆனால் நீ! எந்திரிச்சு, தவழ்ந்து, படிச்சு சாதிக்கல? வாழ்க்கையில தோத்துப்போனவங்களுக்கு “இதோ பாரு நான் எப்படி இருக்கேன் பாரு,”ன்னு உன்னைக்காட்டி அவங்களை தேத்தறதை விட்டுப்போட்டு கண்ணைக்கசக்கிக்கிட்டு – என்னது இது? உன்னோட குணத்துக்கும், நீ இப்போ இருக்கறதுக்கும் சம்பந்தமே இல்லாம; இது நல்லாவா இருக்கு? நீயே சொல்லு?”
செங்குழலி இதைக்கேட்டு, “அட ஆமாம்ல! என்னது இது புதுசா? வசதி வந்ததும், உள்ள இருக்கற மத்த ஆசையெல்லாம் கிளம்பி எழுந்து; நல்லவேளை அது என்னை நசுக்காம எங்க அம்மா காப்பாத்திட்டா. நாம என்ன சாதாரணமா குடும்பம், குழந்தை குட்டின்னு வாழறதுக்கா பொறந்துருக்கோம்? சாதிக்கல்ல பொறந்துருக்கோம்! முதல்ல நாம முழிச்சுக்கணும். நாளைக்கே சரவணன் சாரைப்பாக்கணும், அரசுப்பள்ளிக்குழந்தைங்களுக்கு கம்ப்யூட்டர் சம்பந்தமா பாடம் சொல்லிக்கொடுக்கணும்னு கேட்டுருந்தார்ல? அதுக்கு என்ன செய்யலாம்னு பேசி முடிவெடுக்கணும்.”
“நமக்கு எம்புட்டு வேலை இருக்கு. உலகத்தை ஜெயிக்கணும்ல!” சுணங்கிப்போன செங்குழலி வீறு கொண்டு எழுந்து விட்டாள். வெற்றியை நோக்கி ஓடப்போகும் அவள் இனி திரும்பிப்பார்க்கப்போவதில்லை.

லலிதா சங்கர்
திருமதி லலிதா சங்கர் 2019 லிருந்து எழுத ஆரம்பித்து இதுவரை 20 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சுஜாதா நினைவு சிறுகதைப்போட்டி, மங்கையர் மலர் ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப்போட்டி, அனந்த நாராயணன் நினைவு சிறுகதைப் போட்டி, எழுதுகிறேன் ஒரு கடிதம், கோமதியம்மாள் நினைவு சிறுகதைப்போட்டி, WriterSCafe – நடத்திய சிறுகதைப்போட்டி போன்ற பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளும் பெற்று இருக்கிறார். பரிசு பெற்ற அனுபவமும் எழுத்துலகில் மென்மேலும் பரிமளிக்க பேரார்வமும் கொண்டவர் இவர்.
