
“அப்பா, பார்க்குக்குப் போகலாம்பா!” என்று நான்கு நாட்களாகக் கெஞ்சிய சிறுமி ஹேமாவின் ஆசையை நிறைவேற்ற, பிரதாப் அவளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். அவளுக்குப் பிடித்த பஞ்சுப் பொம்மையும் கூடவே வந்தது.
இருவரும் மனமகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த வேளையில், பிரதாப்பின் அலைபேசி ஒலித்தது. “கண்ணு, இங்கேயே இரு. இதோ, பேசிவிட்டு வந்துவிடுகிறேன்” என்று சொல்லிச் சாலையோரம் நகர்ந்தவனை, கட்டுப்பாட்டை இழந்த ஒரு வேன் மோதித் தள்ளியது.
நேரம் செல்லச் செல்ல, அப்பாவைக் காணாமல், தன் பொம்மையை நெஞ்சோடு அணைத்தபடி, “அப்பா… அப்பா…” என விம்மி அழுதாள் ஹேமா. அவளது அழுகுரலைக் கேட்டு அங்கு வந்த முன்பின் தெரியாத ஒருவர், மண்டியிட்டு அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, “அழாதே கண்ணம்மா, அப்பா வந்துவிடுவார்” என்று மெதுவாக அவளது தலையை வருடி ஆறுதல் கூறினார்.
அவரது அணைப்பில் அவளது விசும்பல் அடங்கியது. அப்பாவுக்காக ஏங்கி நின்ற அந்தப் பிஞ்சு மனதுக்குத் தெரியுமா… இனி அவளது அப்பா திரும்பி வரமாட்டார் என்று?
