சுஶ்ரீ/பானு காத்திருக்கா

பானு பதுங்கி அமர்ந்தாள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே பயங்கரச் சண்டை. கடந்த ஆறு மாதங்களாக நடப்பதுதான் இது.
“நான் ஒழிஞ்சு போறேன்” என்று சூட்கேஸுடன் போன அப்பா, திரும்பி வரவே இல்லை. அம்மா அழுதுகொண்டே இருக்கிறாள்.
சித்ராவும் சந்திரனும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள். இரண்டு ஆண்டுகள் காதலித்து, வீட்டாரை எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டார்கள். அடுத்த ஆண்டே பானு பிறந்தாள். அவளுக்கு நான்கு வயது ஆகும் வரை குடும்பம் சந்தோஷமாகத்தான் இருந்தது. அந்த ஒரு அலுவலக நண்பனின் திருமண நாள் வரை!
அந்தத் திருமணத்தின்போது சித்ரா மேடையில் மணப்பெண்ணின் தோழியாக இருந்தாள். சேகர் என்ற அலுவலக நண்பன், சந்திரனின் அருகில் வந்து அமர்ந்தான். சித்ராவைப் பற்றி ஏதேதோ சொன்னான். சித்ராவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்றையும் கொடுத்தான்.
“பாவம், செகண்ட் ஹேண்ட் மனைவி உனக்கு!” என்று சொல்லிச் சந்திரனுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.
ஆறு மாதங்கள் கழித்து, இன்னொரு நண்பனின் வாழ்க்கையிலும் இதேபோல் சேகர் விளையாடியது தெரியவந்தது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் போலிப் படங்களைத் தயாரித்தது சமீபத்தில் அம்பலமாகிவிட்டது.
அவசரமாகத் தங்கள் குடியிருப்புக்கு ஓடி வந்தான் சந்திரன். பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த பானு அவனை நோக்கி ஓடி வந்தாள்.
“அப்பா, என் ஃபேவரிட் பொம்மையை உனக்கே கொடுக்கிறேன். எங்களை விட்டுப் போகாதேப்பா!”
சந்திரன் கண்ணீருடன் பானுவை அணைத்துக்கொண்டான். தூரத்திலிருந்து இதைப் பார்த்த சித்ரா, ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன