
என்னுடைய ஒரே மகள் அம்பிகா. அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. அவளுடைய அம்மா கடந்த வருடம் மறைந்துவிட்டாள். உள்ளம் உடைந்துபோன நான் மறுமணமும் செய்துகொள்ளவில்லை. என்னுடைய மாமனார் உட்படப் பலர் மறுமணம் செய்துகொள்ள என்னை வற்புறுத்தினார்கள். இருந்தாலும், லதா இருந்த இடத்தில் இன்னொருவரை வைத்து என்னால் பார்க்க முடியவில்லை.
அம்பிகாவை அடுத்த வீட்டில் இருக்கும் என்னுடைய அக்காதான் தன்னுடைய மகளாகப் பார்த்துக்கொண்டாள். தத்தெடுத்துக்கொள்ளாத குறைதான்.
இப்படிப்பட்ட நிலையில், இன்று மாலை அக்காவுடன் கோவிலுக்குச் சென்ற அவளை இதுவரை காணவில்லை.
எனக்கு மிகுந்த மன உளைச்சல். அக்காவுக்கும் அதே நிலைதான். வேண்டாத தெய்வம் இல்லை. இரவு பத்து மணி இருக்கும். காவல்துறை வண்டி ஒன்று வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து என்னுடைய குட்டித் தேவதை இறங்கி வந்தாள்.
கோவில் கூட்டத்தில் வழிதவறிச் சென்றிருந்த அவளைப் போக்குவரத்துக் காவலர் குமார்தான் பார்த்து அழைத்து வந்திருக்கிறார். குமார் என்னுடன் பள்ளியில் படித்தவர். எனக்கு மிகவும் விருப்பமான நண்பர். என்னுடைய மகளையும் நன்கு அறிந்தவர்.
மீண்டும் கிடைத்த மகளால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவளைத் தழுவிக்கொண்டேன்.
மகள் என்றால் எல்லா அப்பாக்களுக்கும் மிகவும் விருப்பம்தானே? நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
