
அந்தத் தோப்பில் தன் தந்தை ராஜேஷின் கையைப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்த பப்பி, திடீரென பிரேக் பிடித்தாற்போல் நிற்க, குனிந்து பார்த்தான் ராஜேஷ். கண் கலங்கியபடி இருந்த மகளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“என்னடா?”
“டாடி… டாடி…” என்று திக்கித் திணறிய பப்பி, “போன வருஷம் தீபாவளிக்கு மம்மி இருந்தாங்க. சந்தோஷமா பண்டிகையைக் கொண்டாடினோம். இந்த வருஷம் தீபாவளிக்கு மம்மி இல்லாமப் போயிட்டாங்களே!” என்று கேவி அழுதாள்.
பொங்கி வந்த அழுகையைச் சமாளித்து அடக்கியபடி சுதாரித்த ராஜேஷ், “பப்பி, மம்மி எங்கேயும் போகலடா. கடவுள் கிட்டதான் போயிருக்காங்க. நீ இப்படி அடிக்கடி மம்மியை நினைச்சு அழாதேடா” என்று ஆறுதல் கூறினான்.
அவனைத் தேற்றிட இயல்புநிலைக்குத் திரும்பினாள் பப்பி.
நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறே இல்லாமல் இருந்தனர் ராஜேஷ் தம்பதியர். அதனால் தத்தெடுக்கப்பட்டவள் பப்பி. ஆனாலும், உயிரோடிருந்தவரை தன் மனைவியை எவ்வளவு நேசித்தாள் பப்பி! ‘மம்மி, மம்மி’ என்று அடிக்கடி கூப்பிட்டு, தன் பாசத்தை வெளிப்படுத்துவாள். இப்போது தன் மீதும் உயிரை வைத்திருக்கிறாள் என நினைத்துப் பூரித்துப்போனான் ராஜேஷ்.
