
அம்மாக்களும் ஆயாக்களும் பாட்டிகளும் தாங்கள் கூட்டிக்கொண்டு வந்திருந்த சிறார்களைச் சறுக்கு விளையாட்டு, ஏற்றமிறக்கம், வழுக்குவது, வட்டமாகச் சுற்றும் ராட்டினம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்திவிட்டு, கதைக்கத் தொடங்கிவிட்டனர்.
இதுதான் சமயம் என மணியின் கண்கள் ஆறு வயது ஸாய்பிரணதியைச் சுற்றியே வந்தன. தூரத்தில் மணியைக் கண்டவள் வேகமாக ஓடிவந்து அவனைக் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள். கதைத்துக்கொண்டிருந்த ஆயா, மணியைப் பார்த்தும் பார்க்காத மாதிரி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
“ஏம்பா, தாத்தா வீட்டுக்கு வரமாட்டேங்கிறே? அம்மா கோபிப்பாங்களா?” எனப் பதிலளிக்க முடியாத கேள்வியைத் தொடுத்தாள்.
தொட்டாற்சிணுங்கி இலைகளைப்போல மணியின் இமைகள் சட்டென மூடின. கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவனது கைகள் அவளை மேலும் இறுக்கின. கன்னம், தலை, காது என ஒரே முத்தமழை!
குழந்தைக்கு எப்படி விவரிப்பது? அம்மா இவனுக்கு எதிராக விவாகரத்து கேட்டு, தனது பெற்றோர் வீட்டிலேயே இருக்கிறாள் என்பதையும், தான் தினமும் அலுவலகத்திலிருந்து வந்ததும் இந்தப் பூங்காவிற்கு வந்து திருட்டுத்தனமாகச் சந்திப்பதையும் எப்படிச் சொல்வது?
இருவருடைய பழக்கவழக்கங்களும் எதிரும் புதிருமாக அமைந்திருந்ததைத் திருமணம் முடிந்து இரண்டு வருடங்களில்தான் உணர முடிந்தது. அவதிப்படுவது குழந்தையும் தந்தையுமே!

Nice