லீலா ராமசாமி/கடவுளைக் காத்தவள்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி லீலா ராமசாமி எழுதிய ” கடவுளைக் காத்தவள் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:


“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி”

ஓதுவாரின் குரல் ஒலிபெருக்கிகள் வாயிலாகக் கோயில் பிரகாரங்களில் ஒலித்துக் கொண்டிருந்தது.

தினமும் கேட்டுக் கேட்டுத் தேவார, திருவாசகப் பாடல்கள் அவளுக்கு மனத்தில் பதிந்து விட்டன. வெளிப் பிரகாரத்தைப் பெருக்கிக் கழுவினாள்.

தரையில் ஏற்கனவே ஓவியர்களால் வண்ணக்கலவை கொண்டு தீட்டப்பட்ட பெரிய பெரிய கோலங்கள் தண்ணீரால் கழுவி விட்ட போதும், வாழ்வில் நடந்த மறக்க முடியாத இன்ப அனுபவங்களைப் போல, அழியாமல் பளிச்சென்று இருந்தன.

காலையில் சற்றுத் தாமதமாக விழித்தவள், அவசரமாகக் குளித்து விட்டு ஓடிவந்து, இதோ பிரகாரங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறாள்.

“கோணையம்மா! இப்பத்தான் பிரகாரம் பெருக்குறியா? பக்தாள் வர ஆரம்பிச்சுட்டா,” அர்ச்சகர் கேட்டுக் கொண்டே பிள்ளையாருக்கு மாலையைச் சாத்தினார்.

அவளுடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சற்றுக் கோணினாற் போல் நடப்பதால், மற்றவர்கள் அவளை அடையாளம் காண இட்ட பெயர் அது. அதே பெயரையே அவளை அழைக்கவும் பயன்படுத்திய போது, யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட அவள் அதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காததால், அந்தப் பெயரே அவளுக்கு நிலைத்து விட்டது.

“முடிச்சிட்டேன் சாமி! என்னமோ இன்னைக்குக் கொஞ்சம் கண்ணசந்துட்டேன்.”

“இன்னைக்குச் சிவராத்திரி. தூங்கிடப் போறே!”

“தூங்க மாட்டேன் சாமி! இன்னைக்கு நான் விரதம்,” – என்றபடி நேரே உள்ளே தெரிந்த மூலவரைக் கண்களை மூடி வணங்கினாள்.

“பார்வதி!” கேட்கும் புறப் புலனைக் கடந்து, உள்ளிருக்கும் உயிரைத் தொட்டு அசைத்து அழைப்பது யார்? பல பிறவிகளில் ஆத்மார்த்தமாய் அழைத்துப் பழகிய குரல் அல்லவா அது!

கண்களைத் திறந்தால் அந்தக் குரல் மறைந்து விடுமோ? அவள் கண்களைத் திறக்காமல், மீண்டும் அந்தக் குரலுக்காகக் காத்திருந்தாள்.

“கோணையம்மா! உன்னை அங்கே ஆபீஸ் ரூம்ல கூப்டாங்க.”

கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.

“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு,” – ஓதுவார் திருநீற்றுப் பதிகம் பாடக் கூடவே அவளுடைய மனக்குரலும் சேர்ந்து பாடிக்கொண்டே வந்தது.

“சார்! கூப்டீங்களா?”

“கோணையம்மா! அங்கே மடைப்பள்ளிப் பக்கமா தேங்கா நாரு, வேண்டாத காகிதமெல்லாம் இறைஞ்சி கெடக்காம். அந்த எடங்களைச் சுத்தப் படுத்திட்டு வா”

“சரிங்க சார்!”

மனம் கசிந்துருகி பாடிக் கொண்டே மடைப்பள்ளிச் சுவருக்கு அருகில் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். சுவற்றுக்கு மறுபுறத்திலிருந்து இரண்டு குரல்கள் பேசிக்கொண்டது கேட்டது.

“அர்ச்சகரே! கொஞ்சம் இப்படி வாரும். இங்கே யாரும் இல்லை. கடந்த ஒரு வாரமா உங்களைத் தனியாப் பாத்து பேசணும்னு இருந்தேன். நீங்க இந்தப் பக்கமா வர்றதப் பார்த்தேன்,” – கோயில் தர்மகர்த்தா தர்மலிங்கத்தின் குரல்.

“ஐயா! நீங்க சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்து இருப்பேனே!” – என்றது, அர்ச்சகர் நீலகண்டனின் குரல் பணிவாக.

“அதனாலென்ன ! இதோ இப்பப் பேசிட்டாப் போச்சு. இந்தக் கோயில்ல இருக்கிற சோமாஸ்கந்தர் – ஏலவார்க்குழலி உற்சவர் சிலைகள் ரொம்பத் தொன்மையானது, இல்லையா?”

“ஆமாங்கய்யா. அதில் என்ன சந்தேகம்?”

“அதனாலேயே, வெளிநாடுகள்ல அந்தச் சிலைகளோட சந்தை மதிப்பு இன்னிக்கு எக்கச்சக்கமாம். வெளிநாட்டில இருக்கும் என் மகன் அங்கே இதுக்கு ஒரு நல்ல விலையா பேசி வச்சிருக்கான். இன்னைக்கு சிவராத்திரி. எல்லாரும் கண்ணு முழிச்சிட்டு இருப்பாங்க. அதனாலே, நாளைக்கு ராத்திரி கோயில் நடை சாத்துனதுக்கு அப்புறம் இப்ப இருக்கிற சிலைகளுக்குப் பதிலா, நான் கொண்டு வர்ற சிலைகளை மாத்தி வச்சிடலாம். அச்சு அசலா அப்படியே இருக்கும். யாரும் கண்டு பிடிக்க முடியாது. உங்களுக்கும் இதுல கணிசமா ஒரு தொகை கிடைக்கும். சரிதானே?” – கோயில் தர்மகர்த்தா தர்மலிங்கத்தின் குரல் ‘வாங்க காபி குடிக்கலாம்,’ என்ற தொனியில் சொல்லிக்கொண்டே போனது.

“ஐயா! சிவன் சொத்து குல நாசம்! எல்லாரும் இந்தக் கோயிலுக்கு சொத்து எழுதி வைக்கிறாங்க. நாம இதிலிருந்து எடுக்கறது தப்பில்லையா? கோணையம்மா கூட தன் வீட்டைக் கோயிலுக்கு எழுதி வைக்கும்போது இந்தக் கோயிலின் தர்மகர்த்தாவா இருக்குற உங்களுக்கு இந்த எண்ணம் வரலாமா?” – தலைமை குருக்களின் குரல் அதிர்ச்சியுடன் இரைஞ்சியது.

“இதப் பாருங்க நீலகண்டன்! கோணையம்மாவுக்கு எந்த வாரிசும் கிடையாது. ஒண்டிக்கட்டை. ஆனா நீங்களும் நானும் அப்படியா? உமக்கு ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கிறா. அவளுக்கு ஒரு நல்ல இடத்தில கல்யாணம் முடிச்சு வைக்க வேணாமா? கமுக்கமா காதும், காதும் வச்ச மாதிரி சிலைகளை மாத்தி வைக்கிறதுக்கு மட்டும் நீங்க கூட இருந்தா போதும். ஏன்னா கடைசியா கோயில் கர்ப்ப கிரகத்தை மூடிச் சாத்தறது நாம ரெண்டு பேரும் தான்!” – தீர்மானமான குரலில் கூறினார் தர்மலிங்கம்.

“ஐயா! நான் இந்த ஈஸ்வரனை ரொம்பக் காலமா தொட்டுப் பூசிக்கிற பாக்கியம் கெடைச்சவன். உங்களுக்கு வேணும்னா அது வெறும் சிலாரூபமா இருக்கலாம். ஆனா எனக்கு அது தெய்வம். எனக்கு நீங்க சொல்ற காரியத்துல உடன்பாடில்லை. என்னை விட்டுடுங்க,” – அர்ச்சகர் பயத்துடன் கெஞ்சினார்.

“தோ பாரும் நீலகண்டன்! உமக்கு ஒரு வாரம் அவகாசம் தர்றேன். அடுத்த வாரம் இதே நாள்ல இந்த வேலையை நாம முடிக்கிறோம். இல்லே. இதை வெளியே சொல்லி தப்பிக்கலாம்னு ஏதாவது புத்திசாலித்தனமா காரியம் செஞ்சீங்கன்னு தெரிஞ்சுது; உம்மையும், உம்மக் குடும்பத்தையும் ஒழிச்சுக் கட்டுறது எனக்குப் பெரிய காரியமில்லே. யோசிச்சு சாதகமான முடிவா எடுங்க,” – தர்மலிங்கம் கோபத்துடன் மிரட்டும் குரலில் எச்சரித்தார்.

அவர்கள் இருவரும் வரும் காலடிச் சத்தம் கேட்டுச் சுவருக்குப் பின்னால் மறைந்து நின்றாள் கோணையம்மா. அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ‘என்ன இது, வேலியே பயிரை மேயப் பார்க்குதே?’

முதலில் கடுமையான முகத்துடன் வெளியேறினார் தர்மலிங்கம். பின்னால் மிகுந்த வேதனையுடன், தலை குனிந்தபடி தளர்ந்த நடையுடன் வெளியே வந்தார் அர்ச்சகர் நீலகண்டன்.

அப்போதிலிருந்து நீலகண்டனின் முகம் வாடி எதையோ பறிகொடுத்தது போலிருந்தது. ஒவ்வொரு முறை கர்ப்பக் கிருகத்தில் மூலவருக்கும், உற்சவருக்கும் தீபாராதனை காட்டும் போதெல்லாம் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கோணையம்மாவுக்கு வேலை முடிய உச்சிப் பொழுது ஆயிற்று. அவள் சற்று ஓய்வெடுக்கும் இடமாகத் தேர்வு செய்வது, அதோ அந்த நாலு கால் மண்டபம் தான்!

மேலே சுட்டெரிக்கும் வெயில்; கீழே அனலாய்த் தகிக்கும் தரை! வெற்றுக் காலுடன் நடந்தாள். அவள் மனம் தர்மலிங்கம் அர்ச்சகரை மிரட்டியதையே அசை போட்டது. மண்டபம் யாருமற்று அமைதியாக இருந்தது. அதன் நிழலில் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து தனது பாதங்களைக் கைகளால் மெதுவாகப் பிடித்து விட்டுக் கொண்டாள்.

குதிகால்களில் வெடிப்புகளும் விரல்களுக்கடியிலிருந்த மேவிய பாகங்களில் காய்ப்புக் காய்த்துப் போய்க் காணப்பட்ட தனது பாதங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். .

“பார்வதி!”

அதே ஆன்மாவை ஊடுருவும் அவள் கணவனின் குரல்!
முன்பொரு நாள், நெருக்கமான ஒரு நேரத்தில், இந்தப் பாதங்களை மிருதுவாக வருடி இதழ்களால் முத்தமிட்டு, – அவனது இதே குரல் தானே அவளது காதுகளில் கிசுகிசுத்தது?

” பார்வதி! உன் பாதம் தான் எவ்வளவு மென்மையா இருக்கு! இதேபோல் வாசுகியின் மென்மையான பாதத்தைப் பாத்து தான்,

‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்,’ னு

  • குறள் எழுதினாரோ வள்ளுவர்?” – என்று காதல் மொழி பேசியது அவனின் இதே குரல்தான்!

அடுத்து வந்த நாட்களில் வள்ளுவர் – வாசுகியின் அழகான சிலைகள் அவன் கைகளில் உருவாயின. எப்பேர்ப்பட்ட கலைஞன் அவள் கணவன் பரமசிவன்!

மற்றொரு விசேஷ நாளில் நிறைய விருந்தினர் வந்து விட புழக்கடையில் பெரிய விறகடுப்பில் சமைத்து, அதையெல்லாம் எடுத்து வரும் வழியில், வெயில் காயும் திறந்த முற்றத்தைக் கடந்து வர வேண்டும். அப்படிப் பலமுறை கடக்கும்போது, கால்களைச் சூடான தரை சுட்டுச் சிவந்து விட்டது.

விருந்தினர் சென்றவுடன், அவளைக் கட்டிலில் கிடத்தி, அவள் பாதத்தைத் தன் மடியில் எடுத்து வைத்து, “பார்வதி! நாம் முற்பிறவியில் அம்பிகாபதி, அமராவதியாகத்தான் இருந்திருக்க வேண்டும். நீ விருந்தாளிகளுக்குக் கால் வலியுடன் ஓடி, ஓடிப் பரிமாறும்போது, அந்த அம்பிகாபதி பாடியது போல –

‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய,’
என்று பாடத் துடித்தேன்,” என்று, இதே மெல்லிய குரலில் தழுதழுத்தானே!

சில நாட்களில் அம்பிகாபதியும், அமராவதியும், காதல் சொட்டும் முகங்களுடன் அழகான சிலைகளாக அவன் கைகளில் உருவெடுத்தனர்.

பின்னொரு நாளில், இந்தக் கோயிலுக்கு வந்திருந்த போது இதே மண்டபத்தில், “பார்வதி! நாம வேற யாரும் இல்ல. இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கிற அந்தப் பார்வதி பரமசிவனோட பிள்ளைகள் தான். என் அம்மையப்பனைச் சிலை வடிப்பது தான் என் பிறவியின் நோக்கமே,” என்று நெகிழ்ந்ததே அந்தக் குரல்!

அடுத்த சில நாட்களில், அச்சு அசலாக அந்த உற்சவர் சிலைகள் அவன் கைகளில் உருப் பெற்றனவே!

அடுத்த வாரமே அவர்கள் இருவரும் சென்ற இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளாகி, தன் பிறவி நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அந்தக் காந்தக் குரல் அமைதியாகி விட்டது!

பார்வதி எத்தனைக் காலம், காலில் பலத்த அடியுடன் நினைவிழந்து கிடந்தாளோ?

நினைவு திரும்பி, கால் நடக்க முடிந்த போது, இந்தக் கோயில் பணியில் சேர்ந்து, தன் பரமசிவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். அவன் மறைந்தாலும் அவன் கைகளில் உருவாகிய அந்தச் சிற்பங்கள் அவனை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இன்று, அவள் பரமசிவன் அவளை அழைக்கிறான். ஏன்?

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளை, “கோணையம்மா!” என்ற குரல் அழைத்தது.

“இந்தக் கூடை நிறைய அந்த வில்வ மரத்திலிருந்து, வில்வ இலை பறிச்சிட்டுப் போய் அர்ச்சகர்ட்ட குடுத்துரு.”

“சரிங்க சார்!”

வில்வ இலைக் கூடையை, அர்ச்சகரிடம் கொடுத்த கோணையம்மா, மனத்தைத் தேற்றிக்கொண்டு அவரிடம் கேட்டாள். “சாமி! உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?”

“சொல்லு கோணையம்மா! என்ன விசயம்?”

அவள் கூறியதைக் கேட்டு அர்ச்சகரின் முகம் பிரகாசமாகியது.

அடுத்த வாரத்தில் தர்மகர்த்தா, சோமாஸ்கந்தர், ஏலவார்குழலியின் உற்சவர் சிலைகளை எடுத்துவிட்டுப் போலிச் சிலைகளை வைக்கும் போது அர்ச்சகர் நீலகண்டன் அவர் கூடவே இருந்தார். அவர் முகத்தில் பயமும், பதற்றமும் போட்டியிட்டன.

**

உற்சவர் சிலைகள் அடுத்த இரு தினங்களில் எல்லாச் சோதனைகளுக்கும் தப்பி ஆகாய விமானத்தில் பறந்து, வெளிநாட்டில் தர்மகர்த்தாவின் மகனுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தன.

**

“ஜான்! நான் சொன்ன வேலையைச் சரியா முடிச்சிட்டியா?”

ஏர்போர்ட் காபி ஷாப்பிலிருந்து வெளியே வந்த அந்த இருவரில், ஒருவன் கேட்டான்.

“ஆன்டனி! நீ சொன்னபடி, கார் பார்க்கிங்ல, நாலாவதா நின்னுட்டிருந்த உன் எதிரி கார்ல டைம்பாம் செட் பண்ணி முடிக்கவும், அந்தக் கார் கிளம்பிப் போகவும், சரியா இருந்தது. அவன் காரை எடுத்த முப்பதாவது நிமிடத்தில் அது வெடிக்கும்”

“ஜான்! நான் சொன்ன நாலாவது கார் அதே இடத்தில் நிற்கிறதே; நீ எந்தக் காரில் பாம் வைத்தாய்?”

“ஐயோ, ஆன்டனி! நான் அந்தப் பக்கத்திலிருந்து, நாலாவது காரில் பாம் வைத்தேன்! அந்தக் கார் இன்னும் ஐந்து நிமிடத்தில் வெடித்து விடுமே!”

**

உற்சாகமாகக் காரை ஓட்டியபடியே, அவன் தன் தந்தையை அலைபேசியில் அழைத்தான்.

“அப்பா! ‘கலைப் பொருள்கள்’ என்ற போர்வையில் அந்தச் சிலைகளைக் கொண்டு வந்ததில், எங்கேயும் யாருக்குமே சந்தேகம் வரலை. எந்தச் சோதனையிலும் சிக்கவே இல்லை. நாளைக்குச் சிலைகளைக் கைமாத்திட்டு உங்களைக் கூப்பிடுறேன்,” என்று பேசிக்கொண்டே இருந்தவன், திடீரென்று அலறினான்.

“ஐயோ; இதென்ன கார் எஞ்சினில் இவ்வளவு புகை! இந்தச் சாலையில் எங்கேயும் காரை நிறுத்த முடியாதே. பின்னாலேயே ராட்சத வேகத்தில் ஒரு ட்ரக் வருதே! ஐயோ; காரில் நெருப்புப் பத்திக்கிச்சே! ஆ; அந்த ட்ரக்?”
அடுத்த நொடி – “டமார்” என்ற ஒரு பேரிடிச் சத்தம்! அத்துடன் அலைபேசியில் அமைதி.

கேட்டுக் கொண்டிருந்த தர்மலிங்கம் பதறினார். ஏதோ அசம்பாவிதம் என்று புரிந்தது. என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள தவித்து, யார் யாரையோ தொடர்பு கொண்டார்.

சற்று நேரத்திலேயே, தன் ஒரே மகன், காருடன் வெடித்துச் சிதறி எரிந்து பஸ்பம் ஆகிப் போனதை ஊடகங்களில் காணொளியாகப் பார்த்த அவரது ரத்த அழுத்தம் ஏறி, இதயம் தாறுமாறாகத் துடித்தது. மூளையின் ரத்தக்குழாய் வெடித்துப் பக்கவாதம் வந்து பேச்சில்லாமல் விழுந்தவர், மீண்டும் எழவில்லை.

கார் தீ விபத்தில் வெடித்ததில், அதிலிருந்த சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி சிலைகள் வெகு தொலைவில் தூக்கி வீசப்பட்டன. சாலையோரம் மரங்கள் அடர்ந்த காட்டில் விழுந்த சிலைகளின் மேல் கரிப்புகை படிந்திருந்தாலும், அச்சிலைகளின் முகத்தில் இருந்த தெய்வீகப் புன்னகை மட்டும் அப்படியே இருந்தது.

**

அர்ச்சகர் நீலகண்டன் கோணையம்மாவிடம் வருத்தத்துடன் கூறிக் கொண்டிருந்தார்.

“நான் அன்னிக்கே தர்மகர்த்தா கிட்டே வேண்டாம்னு சொன்னேன். அவரு கேட்கலை. சிலைகளை எடுத்துட்டுப் போன அவரோட ஒரே மகனும், அவருமே இப்ப இல்லாமப் போய்ட்டாங்க. தெய்வத்தையே திருட நினைக்கலாமா?”

“ஆனா; கோணையம்மா! நீ அந்த வில்வ இலைக் கூடையில் உன் கணவர் செய்த அச்சு அசலான சோமஸ்கந்தர், ஏலவார்க்குழலி சிலைகளைக் கொண்டு வந்து வைச்சிட்டு, உண்மையான உற்சவர் சிலைகளை உன் வீட்டுக்கு எடுத்துப் போய்ப் பாதுகாத்து, ஒரு மிகப்பெரிய சிவத் தொண்டைச் செஞ்சிருக்கே. உனக்கு இந்தக் கோயிலே கடமைப்பட்டிருக்கு.”

“சாமி! பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க. உலகத்தையே காப்பாத்துற சாமிக்குத் தன்னைக் காப்பாத்திக்கத் தெரியாதா? அன்னிக்கு மடைப் பள்ளியில நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை நான் கேட்கும்படியா செஞ்சதே அந்த ஆண்டவன் தானே!”

“ஆமா, அதுவும் ஆண்டவன் சித்தம் தான்!”

“இல்லாட்டா இப்படி ஒரு கைங்கர்யம் செய்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்குமா? உற்சவர் என் வீட்டில வந்து தங்குனது எனக்கு எவ்வளவு பெரிய கொடுப்பினை! சாமி தன்னைத் தானே காப்பாத்திக்கிட்டார். இந்த ஆட்டத்துல நான் ஒரு கருவி தான்!”

சொல்லி விட்டுத் துடைப்பத்தை எடுத்துக் கர்ம சிரத்தையாகப் பெருக்கும் கோணையம்மாவை, சோமாஸ்கந்தரும், ஏலவார்க்குழலியும் தெய்வீகப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்

லீலா ராமசாமி
சின்னாளப்பட்டியை சார்ந்த திருமதி S.R. லீலா, லீலா ராமசாமி என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதி வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார்.
திருமதி லீலா ராமசாமி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனவளக்கலைப் பேராசிரியர். பணி ஓய்வுக்குப் பின் முகநூலில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பல சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர். குமுதம், கல்கி, மாலைமலர், ஆனந்த சந்திரிகை, உரத்த சிந்தனை முதலிய பத்திரிகைகளில் இவரது படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.
இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு யோகா புத்தகங்கள் என்று பத்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் குழுவினர் சார்பாக வெளியிடப்பட்ட “பேரன்பின் சுகந்தம்” என்ற முதலாவது சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய “ஒரு மார்ச்சுவரி மரணம்” என்ற சிறுகதை இடம் பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன