நாகேந்திர பாரதி/’ உணர்வுகள் உணரப்படுவதில்லை ‘

நன்றி அழகியசிங்கர், கௌரிஷங்கர் சார், வணக்கம் நண்பர்களே,
சந்தியா ஷங்கர் அவர்களின் ‘ உணர்வுகள் உணரப்படுவதில்லை ‘ சிறுகதை.

காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். ‘time and tide don ‘t wait for anybody ‘. உயிர்களும் அப்படித்தான். அவை போனபின்தான் அவற்றின் பெருமை உணர்ந்து புலம்புவார்கள், அந்த உயிர்களின் உணர்வுகளை உணராதோர். இதை இரண்டு தம்பதியர் வாழ்க்கையின் மூலம் உணர்த்தும் கதை தான் ‘ உணர்வுகள் உணரப்படுவதில்லை ‘ .

ஆணாதிக்க மனப்பான்மையோடு ஒருவன். அவனைப் பொறுத்துக்கொள்ளும் பூமாதேவியாய் ஒருத்தி. இந்தத் தம்பதிகளின் வாழ்க்கை நிகழ்வுகள், நாம் பல வீடுகளில் பார்த்தவை என்பதால், கதையோடு ஒன்றிப் படிக்க முடிகிறது .

அவன் ராகேஷ், மல்டி நேஷனல் கம்பெனியில் டைரக்டர் போஸ்டில் இருப்பவன் . அவனது சிறுவயதிலேயே அவன் அம்மா இறந்து விட , அவனைச் செல்லம் கொடுத்து வளர்த்து முன்கோபக்காரனாகவும் , கோபக்காரனாகவும் கெடுத்து வைத்திருக்கும் அவன் அப்பா கல்யாணமூர்த்தி. கல்யாணம் ஆனால் சரியாகிவிடும் என்று தனது நண்பர் மகள் மாதவியை மணமுடித்து வைக்கிறார். அவள் குணவதி. வருத்தங்களை வெளிக்காட்டாமல் , கணவனையும் பார்த்துக் கொண்டு மாமனாரையும் அப்பா போல் பார்த்துக் கொண்டு கணவனுக்கேற்றபடி வளைந்து கொடுத்து வாழும் அவளைப் பார்த்து வருத்தப்படுகிறார் மாமனார். மகனுக்குப் புத்திமதி சொல்கிறார்.

அவனோ எடுத்தெறிந்து பேசுகிறான் .

‘அப்பா, மாதவிக்கு இங்கே என்ன குறை. அவள் நினைத்தபடிதானே இருக்கா , இங்கே மாமியார் கொடுமையா, நாத்தனார்கள் இருக்கிறார்களா , நானும் நீங்களும் சமையல் பத்தி ஏதாவது குறை சொல்றோமா, ஏதோ போட்டதைத் தின்னுக்கிட்டுதானே இருக்கிறோம்.’

‘ நீங்க சொல்றபடியெல்லாம் என்னால் இவளோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. எனக்கு ஆபீஸ் வேலை நிறைய்ய இருக்கு. தினமும் ஒரு மீட்டிங். இல்லை ஒரு க்ளையண்ட்டைப் பார்க்கப் போகணும். இப்படி நிறைய பொறுப்பு இருக்கு. மாதவிதான் எங்கே வேணாலும் போய் வரலாமே ,நான், என்ன செலவழிச்சே , ஏதுன்னு கணக்கா கேட்கிறேன் ‘. இப்படி மூஞ்சியில் அடித்த மாதிரி பேசிவிட்டுப் போய் விடுவான்.

‘கணவனுடன் வெளியே போய் வரலாம், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்’ என்று கனவு கண்டு வந்த மாதவி, மௌனமாகத் தன் அறையில் அமர்ந்து அழுவாள். நெருங்கிய சிநேகிதியும் கிடையாது. பெற்றோரிடமும் சொல்லத் தயக்கம்.

ஆறுவருடம் ஆகிவிட்டது. குழந்தையும் இல்லை. டாக்டர் சொன்னார் ‘ உடம்பில் ஒரு பிரச்னையும் இல்லை. இருவரும் மனம் விரும்பி ஒன்றுபட்டால்தான் குழந்தை பிறக்கும் ‘.

கணவன் மனைவி என்பது தாலி பந்தம் மட்டும் இல்லை. உணர்வுகளைப் புரிந்து கொண்டு விருப்பையும் வெறுப்பையும் பகிர்ந்து கொள்வது தானே தாம்பத்யம் .

காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து அவள் கஷ்டப்படுவதைப் பார்த்து மாமனார் சொன்னார். ‘ அவன் வேலைகளை அவனைச் செய்ய விடு. அப்பத்தான் அவனுக்கு பொறுப்பு வரும் . ‘ அவளோ , ‘நீங்கள் இருவரும் எனக்கு குழந்தைகள் போல் ‘ என்று சொல்லிவிட்டு தன் இயந்திர வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு இருந்தாள்.

இதைப் பார்த்து வருத்தப்பட்டு , வருத்தப்பட்டு, பி பி ஏறி இப்போது மைல்டு அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் அவர். பார்த்துக் கொள்வது அவள்தான். அவன் வந்து போய்க் கொண்டிருந்தான். ஒரு முறை அவன் வந்த நேரம், அவள், மாமனாருக்குப் பேப்பர் வாங்கிப் போய் வர, நேரம் ஆக, டாக்டர் அந்த நேரம் ரவுண்ட்ஸ் வந்திருந்தார். திரும்பி வந்த மனைவியைப் பார்த்து ராகேஷ் கத்துகிறான்.

‘ மாதவி , எங்கே போனே, உன்னை மருந்து வாங்கத்தானே நர்ஸ் அனுப்பினாங்க. வெளியே சுத்திட்டு வரே , பொறுப்பு வேணாமா, அப்பா, நீங்கதான் பேப்பர் வாங்கச் சொன்னீங்களா, மாதவிக்கு ரெம்ப இடம் கொடுக்கிறீங்க ‘ என்று டாக்டர் இருக்கும்போதே பொரிகிறான்.

டாக்டரே அவனைப் பார்த்து ‘ ரிலாக்ஸ் ராகேஷ், அப்பா இப்ப ஓகே. இன்னும் ரெண்டு நாள்லே டிஸ்சார்ஜ் செஞ்சுடலாம் ‘ என்று சொல்ல சமாதானம் ஆகி வெளியேறுகிறான். மாதவியின் கண்களில் கண்ணீர். சமாதானப்படுத்தும் மாமனாரிடம் சொல்கிறாள். ‘ அவர் சுபாவம் தெரிந்தது தானே அப்பா’ .

இதே சமயம் ஆஸ்பத்திரியில் இன்னுமொரு வயதான தம்பதிகள். மனைவிக்கு நுரையீரல் கேன்சர். உள்ளே ஐ சி யூவில் அவள். வெளியே இவர். மகனும் மகளும் வெளிநாட்டில் .
ஆஸ்பத்திரியில் ஒருநாள் மாதவி அவருடன் பேச்சுக் கொடுக்கும் நேரம் அவர் சொன்னார்
‘என் மனைவி துர்கா, அன்பான பெண்மணி, குடும்பம் குழந்தைகள் என்றே வாழ்நாளைக் கழித்து விட்டாள். நானும் வேலை வேலை என்று பணம் சம்பாதிப்பதிலேயே இருந்து விட்டேன். அவளைக் கவனிக்கவில்லை. ‘நான் இல்லாட்டாதான் என் அருமை தெரியும் ‘ என்று அவள் அடிக்கடி சொல்வாள் . இப்ப ரிட்டையர் ஆயிட்டேன், இனி மேல் அவளை நல்லா கவனிச்சுக்குவேன். அதுக்குள்ளே இவளுக்கு இப்படி ஆயிடுச்சு . அவ சீக்கிரம் குணம் ஆகணும். நீயும் பிரார்த்தனை பண்ணும்மா ‘ என்று அழுதார்.

இப்போது மாதவியிடம் ராகேஷ் எரிந்து விழுந்து விட்டுப் போகும்போது , மறுபுறம் பார்க்கிறாள். அங்கே அந்த முதியவரின் மனைவியின் முகத்தை வெள்ளைத் திரையால் மூடுகிறார்கள். அவள் வாக்கு பலித்து விட்டது. தானும் சில சமயம் அது போல் நினைத்ததை எண்ணிப் பார்க்கிறாள் . ‘ கடவுளே என்னை மன்னித்து விடு ‘ என்று நினைத்தபடி அந்த முதியவருக்கு ஆறுதல் சொல்ல ஓடுகிறாள் .

‘உணர்வுகளை உணர்வதற்குள் கால தாமதம் ஆகிவிடுகிறது’ என்று முடிகிறது கதை .

உண்மைதான். இருக்கும்போது பலரின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை, அவர்கள் இறந்தபின்தான் புரிகிறது அவர்கள் மதிப்பு. அதற்குள் காலம் கடந்து விடுகிறது. இறந்த காலம் திரும்ப வருவதில்லை. இதை நிகழ் காலத்தில் உணர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் மதித்து வாழ்கிறார்கள் . மதியாதோர் பலர், மற்றவரை, குறிப்பாகத் தங்கள் மனைவியரை அடிமைகள் போல் நடத்தும் நிலைமை இன்றும் பல வீடுகளில் நிகழ்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

குறிப்பாகக் கணவன் மட்டும் சம்பாதிக்கும் குடும்பங்களில் இந்த நிலைமை அதிகம் இருக்கிறது . பெண்களும் வேலைக்குச் சென்று பண விஷயங்களில் சுயசார்போடு இருக்கும் குடும்பங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைமை மாறி வருகிறது. கல்வியும், வேலை வாய்ப்பும் பெண்களுக்கு அவசியத் தேவை என்பதை உணரும் அதே நேரத்தில், ஆணாதிக்க மனப் பான்மை மாற வேண்டிய அவசியமும் அதி முக்கியம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை உயிர்களும் அப்படித்தான்.
இது போன்ற பல கதைகள் ஆண்கள் மனதை மாற்றி ஒருவரை ஒருவர் மதித்து வாழும் பண்பை உருவாக்கும் என்ற நம்பிக்கை உண்டாகிறது. இது போன்ற ஒரு சமூகச் சிந்தனையை உருவாக்கும் சேவையைச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சந்தியா ஷங்கர் அவர்கள் , இந்தக் கதை மூலம். அவர்க்கு வாழ்த்துக்கள். வாய்ப்பளித்த அழகியசிங்கருக்கு நன்றி. வணக்கம்
——-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன