
பழைய, கிழிந்த கோட்டு, அழுக்கான, பிய்ந்த ஷூ, கண்களில் ஏக்கம். கையில் ஒரு பொம்மைக் குழந்தையுடன், அந்தப் பார்க்கில் தனக்குள் பேசிக்கொண்டே அலைந்துகொண்டிருக்கும் அந்த மனிதனுக்கு நாற்பது வயதிருக்கலாம்.
பார்க்குக்கு எதிரில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஜனனி, தினமும் தன் அம்மா சாந்தியுடன் வருவாள். கையில் பொம்மையுடன் அலையும் அங்கிளைப் பார்த்தபடியே பள்ளிக்குள் செல்வாள். அவரைக் காணாத நாட்களில் அவளுடைய கண்கள் அவரைத் தேடும். அந்தப் பொம்மை ஜனனிக்கு மிகவும் பிடிக்கும்!
“யாரும்மா அந்த அங்கிள்? அவர் கையில் இருக்கும் பொம்மை அழகா இருக்கில்ல?”
வருத்தத்துடன் ஒருநாள் அம்மா சொன்னாள்: “நீ வேணும்னா அவர்கிட்டே போய்ப் பேசு. பாவம், அவரோட பாப்பா இங்கேதான் காரில் அடிபட்டு, அப்புறம் இறந்துபோச்சு.”
ஆசையுடன் ஓடிய ஜனனி, அவரிடமிருந்து பொம்மையை வாங்கிக்கொண்டாள்.
“அங்கிள், ஒரு ஹக்கி!” என்று சொல்லி அவரைக் கட்டிக்கொண்டாள்.
அங்கிளின் உடல் ஒருமுறை சிலிர்த்தது. ஜனனி அங்கிளின் கண்களைத் துடைத்துவிட்டாள்.
அன்று அந்தக் காரை ஓட்டிவந்தது தன் அப்பாதான் என்பது ஜனனிக்கும், அந்த அங்கிளுக்கும் தெரியாது. சாந்தியின் கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது.
