
“அடுத்த மாசம் கண்டிப்பா ஊருக்கு வந்துடுவேன், டியர்.”
ரேணுவின் அப்பா ரமேஷ் சொன்னபோது, அவளுக்கு எந்தவித மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. ஏனென்றால், இப்படி அடிக்கடி சொல்லி ஏமாற்றுவது அவனது வாடிக்கையாகிவிட்டது.
இத்தனைக்கும், ரமேஷ் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
கடைசியாக, அவளது ஐந்தாவது பிறந்தநாளன்று, அவள் பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இந்தியாவுக்கு வந்தவன், அந்த பார்பி பொம்மையைப் பரிசாகக் கொடுத்தான்.
அதன்பின் இப்போது பத்து பிறந்தநாட்கள் வந்துவிட்டன. வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொருட்களும், கைப்பேசி மூலம் அவனது வாழ்த்துகளும் வரத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றை நேரில் பெற்றுக்கொள்ளும் சுகம் இல்லை.
“உனக்காகத்தானே இங்கே தனியாகக் கிடந்து சம்பாதிக்கிறேன்” என்பான் அடிக்கடி.
‘உடன் படிக்கும் மற்ற குழந்தைகள் எல்லாம் பெற்றோருடன் குதூகலமாக இருக்கும்போது, தான் மட்டும் அப்பா அருகில் இல்லாமல் இருப்பதை அவர் எப்போது உணர்ந்துகொள்வார்?’ என ஏக்கத்தில் திளைப்பாள் ரேணு.
இனிமேலாவது தன் தந்தை இங்கே நிரந்தரமாக இருப்பாரா என அவள் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, தன் அம்மாவிடம் அவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
“இங்கே லே-ஆஃப் பண்ணிட்டாங்க. விசாவும் காலியாகிவிட்டது. நான் கண்டிப்பாக வந்துவிடுவேன்.”
