WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு மருத்துவர் கந்தசாமி எழுதிய ” ஓ நண்பனே! ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

சரசரவென பறக்கும் கார், பஸ் ரேஸுக்கு இடையே சாலையோர பரோட்டா கடை ஞாயிறு வியாபாரம். இரவு 7 மணிக்கு பரோட்டா மாவை, தலையில் எண்ணெய் விட்டு அடிப்பது போல, தண்ணீர் விட்டு பிசைந்து குத்தி அடித்து வட்டமிட்டு காற்றில் பறக்க விட்டு, மாஸ்டர் ராஜா உருண்டை போடும் அழகே தனி. இது மாஸ்டர் ராஜாவின் கைவந்த கலை. உள்ளே அடுப்பில் சால்னா, கோழிக்கறி கமகமக்க, வெளியே விறகு அடுப்பில் தகதகக்கும் கல்லில் முட்டை கோழியாகும் முன் ஆம்லெட் ஆகிவிடும் அபாயம்.
கல்லாப்பெட்டியில் செல்வம், பெயருக்கு ஏற்றவாறு கல்லாப்பெட்டி நிரம்ப நோட்டுகளை எண்ணி நிரப்பும் இதமே அழகு. கஸ்டமர் கூட்டமானாலும், அழகாய் ஆர்டர் எடுத்துக்கொடுத்து காசு வாங்குவதில் கில்லாடி. கம்ப்யூட்டர் இல்லை; கால்குலேட்டர் இல்லை; காதில் சொருகிய பென்சில் – பேப்பரில் எழுதி மனக்கணக்காய் கூட்டல் போடுவதில் புலி ராமானுஜம்.
ராஜா, செல்வத்திற்கு இணையாக, சர்வர் டீமில் அவரது நண்பர்கள் குழு நிரம்பி களை கட்டும். ஆக இவர்களது நெல்லை பரோட்டா ஸ்டால் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஓடி விட்டது. விடிய, விடிய கடை நடத்தி, அதிகாலையில் உறங்கி, மீண்டும் மதியம் எழுந்து, அன்றைய கடைக்கு ரெடியாவதே இவர்கள் ஒரு நாள் வாழ்க்கை.
ராஜாவும், செல்வமும் பள்ளி தோழர்கள்; நெல்லை மைந்தர்கள்; நெல்லை சீமை படிப்பில் தென்னிந்திய ஆக்ஸ்போர்டு என அழைக்கப்பட்டது. ராஜா, செல்வம் இருவரும் நெல்லைக்கு அருகில் களக்காடு கிராமத்தில் பிறந்தவர்கள். சிறிய கிராமமானதால் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்கள். இருவரும் பள்ளி நேரம் தவிர மற்ற நேரத்தில் வயல் வெளியில் வேலை செய்து அங்கு உள்ள கிணற்றில் பயமறியாது குதித்து, விளையாடி மகிழ்வர். யாரும் பார்க்காத வேளையில் பக்கத்து மாந்தோப்பில் மாங்காய் பறித்து தோட்டத்தின் சொந்தக்காரரிடம் அடி வாங்கியதும் உண்டு. பள்ளியில், பரீட்சைகளில் செல்வம் அதிக மதிப்பெண்கள் வாங்க, இதைக்கேட்ட ராஜா வீட்டில் பூஜை தான். செல்வம் ராஜாவிடம், “டேய், என்க கூடயே சுத்திட்டு பரிட்சையில் மட்டும் மார்க் வாங்கி என்னை மாட்டி விட்டுடு,” என புலம்புவான். செல்வத்தின் தந்தை காளி, கூலி வேலை செய்தாலும் வேலை பார்த்த காசை குடியில் காலி பண்ணி விடுவார். அவர் செல்வத்திடம், “இத பார்டா, படித்தது போதும்; ஒழுங்கு மரியாதையா களணி காட்டில் வேலை பார்த்து காசு கொடு,” என்று அவனை தினமும் மிரட்டுவார்.
செல்வத்தின் தாய், பார்வதி, “செல்வா, இதை நீ மனதில் கொள்ளாதே; நீயாவது நல்லா படித்து டாக்டர் ஆகணும்,” என உசுப்பேத்துவாள். ராஜாவின் வீட்டிலோ நிலை தலை கீழ். தாய் நோய்வாய்ப்பட, தந்தை பக்கத்து ஊரில் உள்ள தொழிற்சாலையில் 12 மணி நேரம் வேலை. ராஜாவின் தந்தை முத்து ராஜாவிடம், “ராஜா, நீ கழனி வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் நன்றாக படி; படித்து அம்மாவை காப்பாற்று,” என்று கூறுவார்.
ராஜாவும், செல்வமும் பள்ளிக்குச் செல்லும் பாலிய பருவத்தில் வீட்டில் உள்ள மனச்சுமை அறியாமல், தினமும் பள்ளி, விளையாட்டு என குதுகாலித்தனர். ராஜா, செல்வத்திடம், “டேய், நாம் இரண்டு பேரும் என்ன படிச்சாலும், எங்கே போனாலும் ஒன்னா தொழில் பண்ணனும்டா; அதுவே நம் எதிர்காலத் திட்டம், ” என சொல்லுவான். காலங்கள் செல்லச்செல்ல, இருவரும் மேற்படிப்பு படிக்க முயன்று, வீட்டின் சூழ்நிலை காரணமாக களக்காடு கிராமத்தை விட்டு, நகரமான நெல்லைக்கு போய், பல கடைகள் ஏறி இறங்கி, ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தனர்.
ஹோட்டல் முதலாளி பெரியசாமி இருவர் வீட்டு நிலை அறிந்து, “டேய் பசங்களா, படிக்கிற வயதில் வேலைக்கு வர்றீங்க; வேலை போக மீதி நேரத்தில் பிளஸ் டூ படித்து கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் ஏதாவது படிங்கடா,” என அறிவுரை கூறினார். பள்ளி வாழ்வு முடிந்ததை பார்க்காமல், இருவரும் ஓட்டலில் தொழில் நுணுக்கங்களை கற்றனர். ஹோட்டல் முதலாளி பெரியசாமி இருவரின் சிரத்தையை பார்த்து,” டேய் நீங்க இரண்டு பேரும் சொந்த காலில் நின்று தனியாக கடை போடுங்க; கடவுள் காப்பாற்றுவார்; இப்படியே எத்தனை நாள் வேலை செய்வீங்க?” என அறிவுரை கூறினார். எனவே ராஜா செல்வத்திடம், “செல்வா, நாம் இருவரும் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய், என பழிக்காமல், உருப்படியா ஒரு கடை போடலாம்,” என்றான். அந்த நல்ல நாளும் வந்தது. இருவரும் “நெல்லை பரோட்டா ஸ்டால்,” தொடங்கினர். ராஜாவின் கை மனம் ருசி பறக்க, செல்வத்தின் வியாபாரப்போக்கு முன்னேற, கடையும் வளர்ந்தது. பணம், பொருள் பெருக, நெல்லையில், இருவரும் கல்யாணமாகி செட்டில் ஆகி விட்டனர். செல்வத்திற்கு நீண்ட நாளாக தான் படிக்க முடியவில்லை என வருத்தம். அவன் ராஜாவிடம், “ராஜா, நாம் தான் படிக்கவில்லை; நம் வருங்கால குழந்தைகளையாவது நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்,” என்றான். ராஜாவும், “ஆமாண்டா, நாம் படிப்பில் கோட்டை விட்டதை நம் குழந்தைகள் பின்பற்றக் கூடாது,” என்றான். பத்து ஆண்டுகள் கண்ணிமைக்க, இருவர் குழந்தைகளும், நெல்லை நகர பள்ளியில் பயின்று வந்தனர். ராஜாவின் பசங்க இதயா, லட்சுமி இருவரும் நன்றாக படித்து மருத்துவரானார்கள். செல்வத்தின் பிள்ளைகள் குமாரும், நடராஜனும் இன்ஜினியரிங் படித்து மேல்நாடு சென்றனர். பிள்ளைகள் செட்டிலாக, ராஜா, செல்வம் இருவரும் மனம் நிறைய; தொழிலை விடவில்லை. ஆனால் செல்வத்திற்கு தன் வியாபார உத்தியே கடையின் முன்னேற்றத்திற்கு காரணம் என்ற மிதப்பில் ராஜாவிடம், “ராஜா, போதும் நம் பார்ட்னர்ஷிப்; இனி கடையை பிரித்து, தனியே வியாபாரம் செய்யலாம்,” என்றான். ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. “செல்வா இத்தனை நாளாய் நாம் அண்ணன், தம்பியாய் – தாயாய், தாரமாய் இருந்து இரவு பகல் பாராமல் உழைத்து விட்டு, இப்போது கழட்டி விடுகிறாயே? இது என்ன நியாயம்,? என்று கேட்டான்.
செல்வமோ, “ராஜா, அதெல்லாம் தொழில் திறமை; உனக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை; கடையைப் பிரித்து கணக்கு, வழக்கு இத்துடன் முடித்துக் கொள்வோம்,” என உறுதியாகச்சொல்லி விட்டான். இதனால் மனமுடைந்த ராஜா, தன் பங்கைப்பிரித்து, நெல்லையில் இருக்கப்பிடிக்காமல், தன் சொந்த ஊருக்கே சென்று விட்டான்.
தன் மருத்துவ மகன்களும், திருமணம் முடிந்து, சென்னையில் செட்டில் ஆகிவிட்டனர். ராஜா ஊரில் சில ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் பண்ணத் தொடங்கி விட்டான். பங்கு பிரித்ததில் செல்வம் பெரும் பங்கை, தனக்கு எடுத்துக் கொண்டதில் ராஜாவுக்கு வருத்தம். மேலும் நட்பின் காரணமாக இதை பொருட்படுத்தாமல், “போதும் என்ற மனமே பொன் செய்யும்,” என வாழத்தொடங்கி விட்டான்.
பேராசை பிடித்த செல்வமோ, மேலும் பல தொழில்கள் தொடங்கி பெரும் செல்வந்தர் ஆனான். பணமும், புகழும் தலைக்கேற; கூடா நட்புக்கு உள்ளானான். தன்னை விட்டால் யாருமில்லை, என்ற மமதையில் காலை, இரவு பாராமல் குடியில் இறங்கி பணத்தை செலவிட்டான். மிஞ்சிக்கேட்ட அவன் குடும்பத்தினரிடம் இந்த சொத்தெல்லாம் என் சுய சம்பாத்தியம்; இதை அழிப்பதோ, செலவழிப்பதோ என் சாய்ஸ் என மார் தட்டினான். பல கால உயிர் நண்பன ராஜாவை மறந்தான். பணம் பத்தும் செய்யும்; பிசினஸ்ல் 11 செய்யும். தன்னை மறந்த செல்வம், ஒரு நாள் குடிபோதையில் கார் ஓட்ட, விபத்துக்குள்ளாகி நினைவிழந்தான். விபத்து செய்தி கேட்டவுடன், ராஜா செல்வத்தைக் காண ஓடி வந்தான். பரிதவித்த செல்வம் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, “நான் இருக்கும் வரை செல்வத்திற்கு ஒன்றும் ஆகாது, ” என ஆறுதல் சொன்னான். நினைவிழந்த செல்வத்திற்கு சிகிச்சை மேல் சிகிச்சைகள்; அறுவை சிகிச்சைகள் நடந்தன. செல்வம் மகன்கள் வெளிநாடு சென்றதால், உடன் வர முடியவில்லை. கடவுளாய் பார்த்து அனுப்பியது போல், ராஜா உடனிருந்து செல்வத்தை நன்கு கவனித்தான். நல்லவேளை நட்பின் பலத்தால், செல்வத்தைக்காப்பாற்ற, நினைவு திரும்பி நலமானான் செல்வம். கண்விழித்தவுடன், முதலில் கடவுளாய் ராஜா தோன்றினான். செல்வம் பேச முடியாத நிலையில், செய்கையால் இருகரம் கூப்பி ராஜாவின் கையைப்பற்றி கதறி அழுதான். ராஜா அவனைத்தேற்ற, செல்வத்தை மருத்துவ சிகிச்சை செய்த மருத்துவர் வந்தார். அவர் செல்வத்திடம், “சார், உங்கள் நண்பன் ராஜா இல்லையென்றால், நீங்கள் இன்று உயிருடன் இல்லை,” எனக் கூறினார். செல்வம் கண்ணீர் விட்டு, தான் செய்த தவறுகளை உணர்ந்து வருந்தினான். உடல் நலம் தேறி வீடு திரும்பியவுடன், செல்வம் ராஜாவிடம், “டேய், நீ இனி எங்கும் செல்லக்கூடாது. மீண்டும் நாம் தொழில் தொடங்குவோம்; இது உன் மேல் சத்தியம்,” என்றான். இதை அமைதியாகக்கேட்ட ராஜா, “செல்வா, நீ உன் உழைப்பால் முன்னேறினாய்; நான் ராமருக்கு அணிலாக உதவினேன்; உன்னை விபத்திலிருந்து காப்பாற்றி விட்டேன். இனி என் கடமை முடிந்தது. எனவே, நாம் என்றும் நண்பர்களாய் இருப்போம். இது உறுதி,” என சமாதானம் கூறிவிட்டு மன நிறைவோடு ஊர் திரும்பினான். செல்வமோ தன் பணத்தாசையால் நட்பை இழந்து விட்டோமே என வருந்தினாலும், மீண்டும் ராஜாவின் நட்பு மலர்ந்தது என் நல்ல நேரமே என்று நெல்லையில் தன் நண்பனால் திரும்பப்பெற்ற வாழ்வை தொடங்கலானான் .
ஊரும், உறவும் வேறானாலும், வாயும் வயிறும் வேறானாலும், சுற்றம் சுற்றாமல் விலகினாலும், நட்பே என்றும் நிலைத்து நிற்கும் என்பதற்கு ராஜாவும், செல்வமும் சாட்சி.

மருத்துவர் கந்தசாமி
மருத்துவர் ச. கந்தசாமி சென்னையில் உள்ள மாதா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பணி நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில், கவிதைகள் எழுதும் வழக்கம் உள்ளவர். “பொருநை கவிதைகள்” என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் வெளியிட்டுள்ளார். இவர் ஒரு மாரத்தான் ஓட்ட வீரரும் கூட.
பொது நல மருத்துவராக சென்னை, பள்ளிக்கரணையில் “ஃபேமிலி கேர் கிளினிக்” மூலம் மருத்துவ பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Thank you
The concept of the story is beautifuly written and according to the saying, ‘A friend in need is a friend indeed’, is emphasized throughout the story, with a happy ending. Enjoyed the story with its twists and turns.
Thank you very much mam for your kind review n appreciation