
பொங்கி பெருகும் ஆற்றின் கரையோரம் ராமேசனின் விரலைப் பிடித்து நடந்து வந்த குழந்தை அதுலா, ‘சட்’ என்று நின்றாள்.
சாலையோரம் ஒற்றைக்கால் இல்லாத அழகான பொம்மையை ஒருவன் வைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
அதுலா அந்தப் பொம்மையைக் கையில் எடுத்துக்கொண்டு, சூம்பிய காலுடன் ஓட முடியாமல், “அப்பா! இங்கே பாருங்கள்! அந்த மாமா இந்தப் பொம்மையைத் தனியே விட்டுவிட்டுப் போகிறார். பாவம்! என்னைப் போலவே அதற்கும் ஒரு கால் மடங்கி, நடக்க முடியாமல் இருக்கிறது” என்று சொல்லும்போதே, குழந்தையின் கண்களில் நீர் தளும்பியது.
“அப்பா! நீங்களும் என்னை மரத்தடியில் விட்டுவிட்டுப் போய்விடுவீர்களா?” என்று கேட்டதும், “நான் அதுலா குட்டியின் அப்பா. அப்படி ஒருக்காலும் செய்ய மாட்டேன்” என்று குழந்தையை நெஞ்சோடு தழுவிக்கொண்டான்.
“யாரும் இல்லாமல் பொம்மை தனியாக இருக்கப் பயப்படாதா? நான் வேணா, இதுக்கு அம்மாவா இருக்கட்டுமா?” என்று கேட்டாள்.
“வேண்டாம்! அதோட அம்மா வந்து தேடுவாங்க.”
சொல்லி வாய் மூடவில்லை; ஒரு சிறுமி ஓடிவந்து, பொம்மையை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டாள்.
அதுலா, “நீ தான் இந்தப் பொம்மையின் அம்மாவா?” என்று கேட்டாள்.
“ஆமாமாம்! இப்பத்திலிருந்து நான்தான்!” என்றாள் வந்த குழந்தை.
