மோஹனா சுகதேவ்/நாதர் முடி மேலிருக்கும்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி மோஹனா சுகதேவ் எழுதிய ” நாதர் முடி மேலிருக்கும்! ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:


முல்லையாற்றின் கரையில் ஒரு பெரிய ஆல மரம். அதற்குப் பக்கத்தில் ஒரு பழமையான ஆலயம். பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டு அப்பர், மாணிக்கவாசகர், சம்பந்தர் முதலிய சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற ஆலயம். ஆனால், இப்போது சரியாகப் பராமரிக்கப்படாமல் சற்று சிதிலமாகியிருந்தது. அந்த பழமையான சிவன் கோவில் மாத்தூர் என்ற ஊரிலிருந்து, சற்று தள்ளி ஒதுக்குப்புறமாயிருந்தது. பக்கத்தில் ஆட்கள் யாரும் தென்படாமல், காற்று கூட மௌனமாய் வீசிக் கொண்டிருந்தது.
காலை எட்டு மணியிருக்கும். கதிரவன் தொடு வானத்திலிருந்து சற்று மேலே எழும்பியிருந்தான். அந்தக் காலை வேளையில் ஆல மரத்தின் கிளைகளில் குருவிகளும், பட்சிகளும் கலகலவென்று பூபாளம் இசைத்துக் கொண்டிருந்தன. ஆறும் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாக கோவிலுக்குள்ளேயிருந்து தென்றலில் மிதந்து வந்தது ஒரு இன்னிசைப் பாட்டு!
“பொன்னார்மேனியனே! புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!”
அந்தக் கோவிலின் முன்மண்டபத்திலிருந்து வந்த இனிமையான தேவாரப் பாடல், கேட்பவர்களை பரவசப்படுத்தும் வண்ணம் உருக்கமாயிருந்தது. யார் இவ்வளவு இனிமையாக பாடுவது என்று கோவிலுக்குள்ளே சென்று பார்த்தால் ஒரு இளம் பெண்ணும், எட்டு வயது பாலகனும்தான் அந்தக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் இருந்த சிவனுக்கு பாமாலை சூட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளே ஒரு வயதான அர்ச்சகர் சிவனுக்கு பூமாலை சூட்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த கோவிலின் வாசலில் ஒரு கியா கார் புயல் போல் சர்ரென்று வந்து நின்றது. நான்கு தடியர்கள் அதிலிருந்து இறங்கி மடமடவென்று இறங்கி உள்ளே ஓடி வந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே ஏதோ திட்டமிட்டு வந்தவர்களைப் போல் தெரிந்தது. அதில் நன்கு உயரமாய் தெரிந்த அருண் முதலில் வர, மற்றவர்கள் பின்னால் வந்தார்கள். எல்லோரும் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல் கர்ப்பகிரகத்தை நோக்கி விரைந்தார்கள்.
உள்ளே தீபாராதனை செய்து கொண்டிருந்த சிவராஜ் குருக்கள் திடீரென்று உள்ளே நுழைந்தவர்களைக் கண்டு மருண்டு விழித்தார்.
“யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”
அவர்கள் எதுவும் பேசவில்லை. ஒருவன் அவர் கையில் இருந்த தட்டை தட்டி விடவும், அது கீழே “நங்” என்ற சப்தத்துடன் விழுந்து உருண்டு ஓடியது. அந்த நெட்டையன் நேராக சிவலிங்கத்தை நெருங்கி, அதன்மேல் அர்ச்சனை செய்திருந்த பூக்களை தூர எறிந்தான். பின்பு அந்த லிங்கத்தை கைகளால் தூக்க முயன்றான். அது அவ்வளவு எளிதில் வராததால் தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கதிரிடம் “அந்தக் கடப்பாரையைக் கொடு,” என்று கட்டளையிட்டான்.
சிவராஜ் குருக்கள் அருண் செய்யும் செயலால் மனம் பதறி, ”ஐயையோ! அபச்சாரம்! அபச்சாரம்! சுவாமியை தூக்காதீங்க?” என்று கூக்குரலிட்டார்.
“பட்டரே! வாயை மூடிகிட்டு சும்மா இரு, இல்லைன்னா இந்தக் கடப்பாரையிலே முதல் குத்து உனக்குத்தான்.”
கதிர் குருக்களின் கைகளை பின்னால் வளைத்துப் பிடித்துக் கொள்ள, அருண் சிவலிங்கத்தை தரையில் இருந்த பீடத்திலிருந்து எடுக்கத் தோதாக சுற்றிலும் கடப்பாரையில் ஓங்கி, ஓங்கி குத்தினான். சிவலிங்கமும் மெல்ல மெல்ல அசைந்து கொடுத்தது. கர்ப்பகிரகத்தின் உள்ளே இருந்த இரண்டு பேர்களைத் தவிர மற்ற இரண்டு பேர்கள் அந்தப் பெண்ணையும், பையனையும் ஒரு தடிமனான கயிற்றால் இறுகக்கட்டிக் கொண்டிருந்தார்கள். பையன் அந்த குண்டர்களைக் கண்டு மருண்டு அழ ஆரம்பித்தான்.
“டேய்! வாயை மூடு.”
ஒருவன் அவன் கன்னத்தில் அறைந்ததில் திகைத்துப்போய், சிறுவன் அலறி வாயை இறுக மூடிக் கொண்டான். கண்கள் கலங்கி உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவன் வாயில் துணியை வைத்து அடைத்தான் அவன். அந்தப் பெண்ணின் வாயிலும் துணி அடைக்கப்பட்டது.
அருணுக்கு அந்த சிவலிங்கத்தை எடுக்க அதிக நேரம் தேவைப்படவில்லை. சற்று நேரத்தில் சிவலிங்கம் அவன் கைக்கு வந்து விட்டது.
“டேய் கதிர்! பழனி! பாண்டி! லிங்கத்தை எடுத்துட்டேன். இவங்க மூணு பேரையும் உள்ளே போட்டு கதவை சாத்துங்க. நாம சீக்கிரம் இங்கேருந்து எஸ்கேப் ஆயிடலாம். சீக்கிரம் ஆகட்டும்!”
அருண் அந்த லிங்கத்தின் மேல் பக்கத்தில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு வேஷ்டியை எடுத்து போர்த்திக் கொண்டான். கர்ப்பகிரகத்தை விட்டு அவன் வெளியே வரவும், மற்றவர்கள் உள்ளே இருந்த குருக்களுடன் அந்த இளம்பெண்ணையும், பையனையும் உடலும், கைகளும் கயிற்றால் கட்டிய நிலையில் கர்ப்பகிருகத்திற்குள் தள்ளி வெளிக்கதவைப் பூட்டித் தாள் போட்டனர்.
வந்த நான்கு பேரும் வந்த வேலை முடிந்த திருப்தியில் காரில் ஏறி காற்றாய் பறந்து விட்டனர்.
கர்ப்பகிருகத்தின் உள்ளே…………….
ஒரே கும்மிருட்டு; காற்று வரவே இடமில்லாமல் மூச்சு முட்டியது. நல்ல வேளையாய் குருக்கள் ஏற்றி வைத்த தீபம் எரிந்து கொண்டிருந்ததால் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடிந்தது. குருக்கள் அவசர அவசரமாக இளம்பெண்ணையும், பையனையும் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு வாயில் அடைத்திருந்த துணிகளை எடுத்தார். கயிறு அவிழ்ந்ததும் அந்த பாலகன் அதிர்ச்சியில் மயங்கி பொத்தென்று கீழே விழுந்து விட்டான்.
குருக்கள் பதறி விட்டார்.
“தியாகு! தியாகு! உனக்கு என்ன ஆச்சு? சிவ சிவா! ஏன் இந்த சோதனை?”
குருக்கள் உத்தரணியிலிருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்தார்.
“தாத்தா! அவன் கண்ணு அசையுறது. அவனுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க.”
“காயத்ரி! நீ கொஞ்சம் அந்த பேப்பரை எடுத்து வீசி விடுறியா?”
“ஆகட்டும் தாத்தா!”
கொஞ்ச நேரம் கழித்தே தியாகு என்ற தியாகராஜன் கண் விழித்தான்.
திறந்த கண்களில் பீதி அப்பியிருந்தது.
வாயைத் திறந்து ஏதோ பேச முயன்றான். ஆனால் ஓசை வரவில்லை.
“தாத்தா! தியாகு வாயைத் திறந்து ஏதோ சொல்றான்; ஆனா சத்தமே வரல்லே.”
குருக்கள் அவனை உலுக்கி திரும்ப கேட்டார்.
“தியாகு! என்ன ஆச்சு உனக்கு?”
அவன் கண்கள் வேகமாக அங்குமிங்கும் சுழன்றன. பின்பு தன் கையை குவித்து “அவர்கள் எங்கே?” என்று சைகையில் கேட்டான்.
“அவங்க போயாச்சு. உனக்கு என்னடா ஆச்சு? பேச முடியலியா?”
பேச முடியவில்லை என்பது போல் தியாகு சைகை செய்யவும், குருக்கள் உடைந்து போனார்.
“காயத்ரி! இந்த லோகம் ரொம்பக் கெட்டுப்போச்சும்மா! கைகூப்பி வணங்க வேண்டிய தெய்வத்தை இப்படி களவாடிட்டு போவாங்களா?”
“தாத்தா! அந்த லிங்கம் வெறும் கல்லுதானே? அதை ஏன் திருடிட்டு போறாங்க?”
“காயத்ரி! அந்த சிவலிங்கம் வெறும் கல்லு இல்லேம்மா! அது மரகத லிங்கம். கலரை பார்த்தியா? பச்சைக் கலர்லே ஜொலிக்கும். அதோட மதிப்பு கோடிக்கணக்கிலே இருக்கும்.”
“அப்புறம் ஏன் தாத்தா அதுக்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யலே?”
“சாமின்னா எல்லோருக்கும் ஒரு பயம் இருக்குமில்லையா? அது போதும்னு, தர்மகர்த்தா நினைச்சுட்டாரு.”
“இப்போ நாம எப்படி வெளியே போறது தாத்தா?”
“யாராவது கோவிலுக்கு வந்து நம்மளைத் திறந்து விட்டாதான் உண்டு. உன் தம்பி வேறே பேச முடியாமே பயந்து போய் கிடக்கான். சிவனே! தென்னாடுடைய சிவனே போற்றி! நீதான் உன்னைக் காப்பாத்திக்கணும். நாங்க எதுவும் செய்ய முடியாமே சக்தி இழந்து இருக்கோம். எங்களைக் காப்பாத்து.”
“தாத்தா! தியாகு வேறே பேசாமே சைகை பண்றான். காலையிலே என்ன அழகா ரெண்டு பேரும் பொன்னார்மேனியனே பாட்டு பாடினோம். இப்போ நாம என்ன பண்றது?”
“யாராவது வந்து கதவை திறக்கற வரைக்கும், சிவனேன்னு பொறுமையா காத்துக்கிட்டு கிடப்போம். வேறே வழி? “
குருக்கள் இப்போது தன் மனக்குமுறலைக்கொட்ட ஆரம்பித்தார்.
“சொக்கா! உன் திருவிளையாடலுக்கு அளவே இல்லையா? நான் நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து உன்னை பூஜை பண்ணிட்டு இருக்கேன். என்னோட பூஜைக்கு சக்தி இல்லையா? அப்ப உன்னை கண்கண்ட தெய்வம்னு இருபத்திநாலு மணி நேரமா மனசிலே துதிக்கறது எல்லாம் வீணா? உன்னை திருடிட்டுப் போனவங்களை நீ தண்டிக்கலைன்னா, நீ தெய்வம்னு எப்படி நானும் மத்தவங்களும் நம்ப முடியும்?”
“உன்னையே நினைச்சுண்டு இருக்கிற என்னையும், என் பேரப் பசங்களையும் நிராதரவா விட்டுட்டியே. சொக்கா! நீ ஏது பண்ணுவியோ, எப்படி பண்ணுவியோ எனக்குத் தெரியாது. நீ திரும்ப முன்னை மாதிரி இந்தக் கோவில்லே, இந்த இடத்திலே வந்து உட்காரணும். இல்லன்னா நான் உன்னை கும்பிடப் போறதில்லே. உனக்கு நித்ய கர்மாவா பண்ற தினசரி பூஜையை நிறுத்திட்டு, என் உசிரையும் மாயச்சுக்குவேன். இது சத்தியம்! உன் மேலே ஆணை!”
ஏதோ சன்னதம் வந்தாற்போல், குருக்கள் மூச்சு விடாமல் தன் இஷ்ட தெய்வத்திடம் முறையிட்ட களைப்பில் சோர்வுடன் சாய்ந்து விட்டார். காயத்ரியும், தியாகுவும் கூட மயக்கத்தில் தரையில் கிடந்தார்கள்.
…..
சிவராஜ் குருக்களுக்கு சிவகாமி ஒரே மகள். அவள் பருவப் பெண் ஆனதும் ஒரு வைதீக குடும்பத்தில் பிறந்த சங்கரனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பக்கத்து ஊரில் நடந்த திருமணத்துக்கு சென்ற சங்கரனும், சிவகாமியும் பஸ் விபத்தில் இறந்து விட, அவர்களின் வாரிசுகள் காயத்ரி, தியாகுவை வளர்க்கும் பொறுப்பு குருக்கள் தலையில் விழுந்தது. குருக்களின் பார்யாள் விசாலம் இருபது ஆண்டுகளுக்கு முன்பே சுமங்கலியாய் சிவலோகப் பதவி அடைந்து விட்டாள்.
……
இப்போது மரகத லிங்கம் எங்கு போய் கொண்டிருக்கிறது என்று பார்ப்போம். அருண் டிரைவர் பாண்டிக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். மரகத லிங்கத்தின் மேல் ஒரு வேட்டியை சுற்றி, ஒரு அட்டைப்பெட்டிக்குள் பத்திரமாய் தன் காலடியில் வைத்திருந்தான். கதிரும், பழனியும் பின்னால் உட்கார்ந்து இருந்தார்கள்.
கார் நெடுஞ்சாலையில் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. கதிரும், பழனியும் சிலை கடத்தல் இலகுவாய் முடிந்ததில் உற்சாகமாய் இருந்தார்கள்.
“பாஸ்! நாம இப்போ எங்கே போறோம்?”
“நேரா கொச்சி போயிட்டு இருக்கோம். அங்கே நமக்காக, மார்க் ஹார்பர்லே காத்துகிட்டு இருப்பான். அவன்கிட்டே பணத்தை வாங்கிட்டு, சென்னைக்கு நாளைக்கு ராத்திரியே திரும்பிடறோம்.”
“சபாஷ் பாஸ்! நாம எங்கேயும் போலீஸ்லே மாட்டற சான்ஸ் இல்லேதானே?”
“நிச்சயமா இல்லேடா! நாம அந்த அர்ச்சகர், கூட இருந்த சின்ன பையன், பொண்ணு எல்லோரையும் கர்ப்பகிருகத்திலே பூட்டி வச்சிட்டோம். யாராவது அந்தக் கோவிலுக்கு வந்து அவங்களைத் திறந்து விட்டாத்தான், மரகத லிங்கம் காணாம போன விஷயம் ஊருக்குத் தெரியும். அதுக்கப்புறம் அவங்க போலீஸுக்கு கம்ப்ளைண்ட் பண்ணி அவங்க நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி நாம தமிழ்நாடு எல்லையை விட்டே போயிருப்போம். நம்மளை அடையாளம் கண்டுபிடிச்சு நம்மளை நெருங்கி வறதுக்கு சான்ஸே இல்லை.”
“பாஸ்! நாளைக்கு நைட் செமையா பார்ட்டி வேணும். சரியா?”
“நிச்சயமா!”
எல்லோரும் களைத்திருந்தார்கள். அருண் பாண்டியிடம் காரை நிறுத்தி விட்டு ரோடு ஓரத்தில் இருந்த ஒரு சின்ன ஹோட்டலுக்கு எல்லோரையும் வரச் சொன்னான்.
ஹோட்டலில் அப்போதுதான் பரோட்டோ, சால்னா, ஆம்லெட் என்று சூடாய் ரெடி ஆகிக் கொண்டிருந்தது. எல்லோரும் வயிறு நிறைய உண்ட பின் பக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடையில், பீர் பாட்டில்களும் வாங்கிக் கொண்டார்கள்.
திரும்ப வண்டியில் உட்கார்ந்து பயணத்தை தொடர்ந்தார்கள். இப்போது மலைப்பாதை ஆரம்பித்திருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலை தன் பிரம்மாண்டமான உயரத்தோடு அவர்களை வரவேற்றது. மலையின் மறுபக்கம் இருக்கும் கொச்சிக்கு போய்ச்சேர, அவர்களுக்கு எட்டு மணி நேரம் ஆகும்.
வளைந்து, வளைந்து செலும் பாதை; இரண்டு பக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்கள்; பறவைகளின் வினோதமான சத்தங்கள்; சில்வண்டின் ஓசை; அந்தப் பகுதி முழுதும் மௌனம் குடிகொண்டிருக்க, கார் எஞ்சின் சத்தம் மட்டும் கேட்டது. அந்த அமானுஷ்ய சூழல் ஏதோ பயங்கரத்தை உள்ளடக்கியிருந்தது.
அந்தி சாயும் நேரம்; மனிதர்கள் யாரையும் ரோடில் பார்க்க முடியவில்லை. பாண்டிக்கு காலில் எதுவோ வழுவழுவென்று தட்டுப்பட்டது. அவன் குனிந்து பார்த்தப்போது மரகதலிங்கம் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் எதுவோ ஊர்வது போல் இருந்தது.
“பாஸ்! அட்டைபெட்டிக்குள்ளே ஏதோ தெரியுது. என்னன்னு பாருங்க?”
அருண் குனிந்து அட்டைபெட்டியைப் பார்த்தான். கண்கள் மின்ன கருப்பாய் ஏதோ தென்பட்டது. அவன் குனிந்து பெட்டியைத் திறந்து பார்த்தான். அவ்வளவுதான்! அடுத்த கணம் “ஐயோ! கண்ணு போச்சே!” என்று வீரிட்டான்.
மற்றவர்கள் அருணுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்குள் ஒரு ராஜநாகம் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த பாண்டியின் கையில் சுற்றிக் கொண்டது. அவன் பயத்தில் அலறி கையை உதற, அதுவோ அவன் மார்பைக் கொத்த குறி பார்த்தது.
“பாம்பு! பாம்பு! ஐயோ பாம்பு!”
பாண்டி கத்திக் கதறி ஸ்டியரிங்கிலிருந்து கையை எடுத்தவுடன், நல்ல வேகத்தில் பறந்து கொண்டிருந்த அந்தக் கார் ரோடிலிருந்து மலையின் ஓரத்தில் ஓடி முன்சக்கரங்கள் இரண்டும் அந்தரத்தில் தொங்க, கார் முன்னால் சாய்ந்தது.
செங்குத்தான காட் ரோடு; கீழே பார்த்தால் மூச்சு நின்றுவிடும்படியான அதல பாதாளம்; மேகங்கள் பவனி வரும் மலை உயரத்தில், எலும்பைக் குத்தும் பனிக் காற்று.
அருண் கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்ததால், அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. கதிரும், பழனியும் சீட்டில் அசையாமல் பயத்தில் உறைந்து போயிருந்தனர். இருவரின் கண்களும் பிதுங்கி வெளியே வந்து விடும் போல் இருந்தது. உடம்பு உதறி நாக்குழற பிரமை பிடித்துப் போயிருந்த அவர்கள் கொஞ்சம் நகர்ந்தாலும் முன்பாரத்தில் கார் கீழே போய் விடும்.
ராஜ நாகம் அந்தக் காரில் இருந்த நால்வரையும் சுற்றி சுற்றிப் பார்த்தது. கண்கள் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் பிரகாசிக்க, அதன் உடல் கரு நீல நிறத்தில் மினுமினுவென மின்னியது. அதன் வாயில் இருந்து சிவப்பு நிறத்தில் பிளவுபட்ட இரு நாக்குகள் பளபளக்க, “உஸ்! உஸ்!” என்று அதன் சீற்றம் அவர்களை மருட்டியது.
ராஜநாகம் படத்தை உயர்த்தி பாண்டியைக் கொத்துவதற்கு முன்பாகவே, அவன் பாதி செத்திருந்தான். அது வேகமாய் அவனைக் கொத்தியதும், அவ்வளவுதான்; அவன் சரிந்து முன்பக்கம் விழ, தொங்கிக் கொண்டிருந்த கார் இப்போது மலையில் உருண்டு, உருண்டு கீழே…….கீழே….. பள்ளத்தாக்கில் போய் கொண்டிருந்தது. கார் கீழே போகப்போக, அந்த நால்வரின் உயிர்களும் மேலே… மேலே …….பறந்தன.
காரின் கதவு திறந்து கொண்ட வேகத்தில், அந்த அட்டைப் பெட்டியில் இருந்த மரகத லிங்கம் தனியாய் தெறித்து அந்த மலையில் ஓடிக் கொண்டிருந்த முல்லையாற்றின் பிரவாகத்தில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது.
மருதூர்………….
ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. ஊர் மக்கள் கோவில் பக்கத்தில் இருந்த ஆலமரத்தின் முன்பு கூட்டமாய் கூடியிருக்க, பஞ்சாயத்து தலைவர் சுந்தரமூர்த்தி மேடையில் நடுநாயகமாய் வீற்றிருந்தார். கூட்டத்தின் நடுவே சிவராஜ் குருக்கள் தலைகுனிந்து நின்றிருக்க, தியாகுவும், காயத்ரியும் அவரின் பக்கத்தில் நின்றிருந்தார்கள்.
“குருக்களே! நீங்க சொல்றது எங்களுக்கு நம்புற மாதிரி இல்லே. வெளியூர் ஆளு எப்படி கார்லே வந்து கோவில்லே இருக்கிற மரகத லிங்கத்தை எடுத்துட்டுப் போயிருப்பான்? அவனுக்கு நீங்கதான் இந்த மரகத லிங்கம் விஷயத்தை சொல்லி இருக்கணும். உங்க மேலே சந்தேகம் வரக் கூடாதுங்கறதுக்காக உங்களை கட்டிப் போட்டுட்டு போயிருக்கான். இந்த சிலைத் திருட்டிலே உங்களுக்கு எவ்வளவு பணம் தர்றதா சொல்லியிருக்கான்? எல்லா உண்மையும் நீங்களே சொல்லிடறது நல்லது. இல்லன்னா நாளைக்கு போலீஸ் அடிச்சு, உதைச்சு, கேக்குறப்போ நீங்க எதையும் மறைக்க முடியாது. சீக்கிரம் என்ன நடந்ததுங்கிறதை சரியா சொல்லிடுங்க.”
“தலைவரே! இனிமே நான் என்ன சொல்றது? என்மேலே எந்தத் தப்புமில்லே. நான் என் அப்பன் சொக்கனை சரண் அடையறது தவிர வேறு வழியில்லே. எல்லாம் அவன் செயல்!”
குருக்கள் கண்ணீர் மல்க, தனக்கு வந்த ஆபத்தை எண்ணி மனம் உடைந்தார். அவரது கவலை எல்லாம் தான் இல்லாவிட்டால் தன் பேரக் குழந்தைகள் என்ன ஆவார்கள் என்றுதான் நினைத்து பயந்தது. அதுவும் காயத்ரி இப்போது தான் பருவத்தின் தலைவாசலில் நின்று கொண்டிருந்தாள். அவளை யார் பாதுகாப்பது?
சுந்தரமூர்த்தி சிந்தனையில் ஆழ்ந்தார். அவருக்கு குருக்களை சந்தேகிக்க மனம் முழுதும் இடம் கொடுக்கவில்லை. ஆனால் சில ஊர் இளவட்டங்கள் குருக்கள் மேல்தான் குற்றம் சுமத்தினார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனே போக வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இன்று இரவு முழுதும் குருக்களை ஆல மரத்தடியில் கட்டிப் போட்டு விட்டு, நாளை திரும்ப ஒரு தடவை கடைசியாய் விசாரணை செய்து கொள்ளலாம் என்று தலைவர் முடிவு செய்தார்.
அவர் தன் தீர்ப்பை சொல்ல வாய் திறந்த சமயம், “சாமி! சாமி! கொஞ்சம் இங்கே வாங்க!” என்று வண்ணான் சொக்கன் கூப்பிடும் குரல் கேட்டது.
அவனுக்கு ஊர் கூட்டத்தில் உட்காரும் உரிமை இல்லை. அவன் ஆற்றுக்கு சென்று, தான் துவைத்துப் போட்டிருந்த துணிகளை மடித்து வைத்து மூட்டை கட்டிக் கொண்டிருந்த போது தான், அந்த அதிசயத்தைக் கண்டான். கோவிலில் காணாமல் போன மரகத லிங்கம் ஆற்று நீரில் அடித்து வரப்பட்டு ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்தது. அதன் மேல் ஒரு நாகப் பாம்பு குடை போல் தன் படத்தை விரித்து ஆடிக் கொண்டிருந்தது.
சொக்கன் கூப்பாடைக் கேட்டதும், அங்கு குழுமியிருந்த ஜனம் முழுசும் ஆற்றை நோக்கி ஓடியது. சிவராஜ் குருக்களும் முன்னால் ஓடினார். அவருடன் காயத்ரியும், தியாகுவும் கூட ஓடினர். ஆற்றின் நடுவில் ஒரு பாறையின் பக்கத்தில் ஒதுங்கியிருந்த மரகதலிங்கத்தையும், அதன் மேல் படம் எடுத்து ஆடிய நாகப் பாம்பையும் பார்த்து, கூட்டம் ஆவென வாயைப் பிளந்தது.
குருக்கள் கூட்டத்தை விலக்கி ஆற்றில் இறங்கினார். குருக்களைக் கண்டதும், பாம்பு தண்ணீரில் மறைந்து விட்டது. மரகத லிங்கத்தைக்கட்டி அணைத்து, ஒரு குழந்தையைப் போல், தன் கரங்களில் ஏந்திக் கொண்டார். அவர் பின்னால் வந்த தியாகு, தன் தாத்தாவைப் பார்த்து “தாத்தா! திரும்ப சாமி நம்ம கிட்டே வந்திடுச்சு!” என்று ஆனந்தமாய் கூச்சலிட, அவருக்கு தன் பேரன் திரும்பப்பேச ஆரம்பித்த சந்தோஷத்தை விட, தன் தெய்வம் திரும்ப தன்னிடமே வந்து சேர்ந்து விட்டதை நினைத்து, கண்கள் ஆனந்தக் கண்ணீரை சொரிந்தன.
அந்தக்கூட்டத்துக்கு, கடத்தப்பட்ட மரகத லிங்கம் ஆற்றில் எப்படி அடித்து வரப்பட்டது என்பது தெரியவில்லை. மறுநாள் தினசரியில் ஒரு செய்தி! மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒரு கார் ரோடிலிருந்து கீழே கவிழ்ந்து நான்கு பேர்கள் மரணம்! அந்த நான்கு பேர்கள் தான் லிங்கத்தை கடத்தியவர்கள் என்பதும் அந்த ஊர் மக்களுக்குத் தெரிய நியாயமில்லை.
மறுநாள் காலை – வழக்கம் போல் அந்தக் கோவிலில் காலை பூஜையில் குருக்கள், காயத்ரி, தியாகு மூவரின் தேனிசைக் குரலில் சொக்கநாதர் மனம் குளிர்ந்தார். அவர் விரும்பியதும் அதுதானே!

மோஹனா சுகதேவ்
இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் மோகனா சுகதேவ், சென்னை தேசிய காச நோய் ஆராய்ச்சி மையத்தில் (National Institute for Research in Tuberculosis, ICMR, Government of India) சமூக விஞ்ஞானியாக 30 வருடங்களுக்கும் மேலாகப் பணி புரிந்தவர். தனது பணிக்காலத்தில் எய்ட்ஸ், காசநோய் குறித்த ஆராய்ச்சிகள் செய்து அந்தக் கட்டுரைகளை உலக கருத்தரங்குகளிலும், பல விஞ்ஞான சஞ்சிகைகளிலும் வெளியிட்டுள்ளார். இவர் University of California at Los Angeles (UCLA), USA வில் விசேஷ பயிற்சி பெற்று எய்ட்ஸ் நோயாளிகளுக்கான முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.
ஓய்வு பெற்ற பின்பு எழுத்தாளர் அவதாரம் எடுத்து முப்பதுக்கும் மேலான நாவல்களை எழுதியிருக்கும் இவர், தற்சமயம் வானதி பதிப்பகத்தில் சரித்திர நாவல்கள் எழுதி வருகிறார். 2025 ம் வருடம் உலக மகளிர் தினமன்று “சிறந்த சரித்திர நாவல் எழுத்தாளர்” விருது, தண்டீஸ்வரம் அரசு பொது நூலகத் துறையால் “மகளிர் சாதனையாளர்”, பேக்கிடெர்ம் டேல்ஸ் வழங்கிய சான்றிதழ்கள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. அகில இந்திய வானொலியில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குறித்து சுதந்திர தினத்தன்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “சிங்கப் பெண்ணே” நிகழ்ச்சியில் பாரதியார் குறித்தும் உரை ஆற்றியுள்ளார். இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் – “கலைமகள், சக்தி விகடன், உரத்த சிந்தனை, நான், பக்தி” போன்ற பல இதழ்களில் வெளி வந்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன