
“இப்படி நடக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ச்சே! மனிதர்கள் இப்படித்தானோ?
எஸ்டேட் மேனேஜராகப் பொறுப்பேற்று ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. எஸ்டேட் வேலையை மட்டுமா கவனித்தேன்? பங்களாவையும் கவனித்து வந்தேன். சின்ன முதலாளியின் கல்யாணத்திற்கு எவ்வளவு உழைத்திருப்பேன்! அவருடைய குழந்தை ரியா பாப்பா பிறந்தது முதல் கவனித்துக்கொண்டேன். அப்பா, அம்மா இருவரும் பிசினஸ் என்று அலைவதால், என்னிடம் பாசத்தோடு ஒட்டிக்கொண்டது. அதைக் கொஞ்சியதும், அதனுடன் விளையாடியதும் நினைவுக்கு வந்தன. கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“ம்… நேர்மையாக நடந்துகொண்டதற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது” என்று மனதிற்குள் புலம்பியபடி, அந்த எஸ்டேட் ஓனரின் வீட்டிலிருந்து வெளியே வந்தான் ரவி.
இவனது செல்வாக்கைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், முதலாளியிடம் அவனைப் பற்றித் தவறாகப் போட்டுக் கொடுத்தனர். அன்று அவர் வேலையாட்கள் முன்னிலையில் திட்டியதால், சோகத்தோடு அந்தப் பங்களாவை விட்டு வெளியேறினான்.
மெயின் கேட்டைத் திறக்கும் முன், “ரவி அங்கிள்!” என்று சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தான்.
பங்களாவின் முன் இருந்த பூங்கா போன்ற தோட்டத்தில் ரியா நின்றிருந்தாள். தன் கையில் பொம்மையுடன் ஓடிவந்தாள். அவன் குனிந்து அவளை அணைத்துக்கொண்டான். குழந்தையின் இறுக்கமான அணைப்பு அவன் மனதிற்கு இதமாக இருந்தது.
