அன்பு நடவு /எஸ் வி வேணுகோபாலன்

பறந்து கொண்டிருந்த
ரயில்
என்னவோ நினைத்துக் கொண்டு ‘
மெல்ல வேகம் தணித்துக் கொண்டு
கடந்து போகிறது அந்தச் சிற்றூரை

அருகே
வயல்காடு ஒன்றில்
மும்முரமாக நடந்து கொண்டிருக்கும்
நாற்று நடவுக்கான
மரியாதையாகவும்
இருக்கக் கூடும்

சேற்றில் நின்றபடி
எதையோ சொல்ல அழைத்துத்
தனது குரலுக்குச்
செவி மடுக்காத
விவசாயியை நோக்கித்
தலையில் அடித்துக்கொண்டு
வேலையைத் தொடர்கிறாள்
பெண்ணொருத்தி

ரயிலின் சன்னல்வழி
பெருங்குரலெடுத்துக்
கூவி
அவள் அழைப்பதை
அவருக்குக் கடத்தத் துடிக்கிறேன்

முந்திக்கொண்டு
என்னை வந்தடைகிறது
வெள்ளந்தியான
அவரது சிரிப்பு

13 Comments on “அன்பு நடவு /எஸ் வி வேணுகோபாலன்”

  1. ரெயில் தண்டவாளம் அருகே விளை நிலங்கள் காணாமல் போய் கொண்டு இருக்கும் காலத்தில் இந்த கவிதை . வாழ்த்துக்கள்

  2. வெள்ளந்தியான
    அவரது சிரிப்பு
    முந்திக்கொண்டு
    உம்மை வந்தடைந்தாலும்
    அழைத்த அவள் அழகும்
    தன்தலையில் அடித்த அடியும்,
    அதை நீவீர் கண்டுவிட்டீர்
    என்பதை கண்டு
    முற்றிய கதிரென அவள் தன்
    முகம் தாழ்த்தி வெக்கி போனாளோ
    தெரியவில்லையே!

  3. அட்டகாசமான சூழல்கள்.
    மெல்ல போகும் ரயில்.
    வயலிலோ மும்முரமான வேகம் மிகுந்த மாற்று நடவு.
    இரைச்சலின் இடையில் கூவி அழைக்கும் பெண்மணி.
    அழைக்கபட்டவருக்கு இரயிலின் சத்தத்தை தாண்டி அதைக் கடத்த நினைக்கும் நேசம் மிகுந்த கவிஞன்
    .இதை அறியாத அந்த மனிதரின் வெள்ளந்தியான சிரிப்பூ….
    அழகாக கடத்தப்பட்டுள்ளது அன்பூ…

Comments are closed.