இரண்டு கடிதங்கள்/அழகியசிங்கர்

      

           இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு தபால் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டு சென்றேன்.  நான் பணிபுரிந்த வங்கிக் கிளையின் வாசல் ஒரு பிரதான சாலை. வாகனங்கள் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருக்கும்.  ரயில்வே கேட்டைத் தாண்டிப் போனால் ஒரு பெரிய தபால் அலுவலகம் இருக்கிறது.  அங்குச் செல்ல விருப்பமில்லை.

            நான் கையில் வைத்திருந்த கடிதங்களில் ஒன்று திருமணம் முடிந்து விஷயத்தைக் குறித்து விசாரிப்பது.  இன்னொரு கடிதம் துக்கம் பற்றி விசாரிப்பது.  நீண்ட தெருவில் சந்து மாதிரி ஒரு இடத்தில் மிகச் சிறிய தபால் அலுவலகம் இருந்தது.  வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தபால்  அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.  அப்போதுதான் ஒன்று கவனித்தேன்.  யாரோ என்னைப் பின் தொடர்ந்து வருவதுபோல்.  என்னைச் சுற்றிலும் நாலா பக்கமும் பார்த்தேன்.  யாரும் என்னைப் பின் தொடர்ந்து வரவில்லை. பிரமையாக இருக்கலாம்.  மேலும் என்னை ஏன் பின் தொடர வேண்டும் என்ற கேள்வியையும் கேட்டுக்கொண்டேன்.  எனக்கு யாரும் விரோதி இல்லை.  ஏனென்றால் வங்கி மூலம் கேட்கின்ற கடன்களை எல்லோருக்கும் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறோம்.  உண்மையில் கடனைத் திருப்பிக் கட்டு என்று கேட்டால்தானே நாங்கள் பயப்படவேண்டும்.

            அவசரமாக அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.  என் சீட்டில் அமர்ந்துகொண்டு கணினியைச் சுழற்றினேன்.  என் கவனம் அதில் சென்று கொண்டிருந்தது.  உள்ளுக்குள் பின்னால் யாரோ என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக நினைப்பு.  உடனே படாரென்று பின்னால் திரும்பிப் பார்த்தேன்.  யாருமில்லை.  என்னைக் கவனித்துக்கொண்டிருந்த பானுமதி, “என்ன சார், திடீரென்று திரும்பிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

            “ஒண்ணுமில்லை..யாரோ என்னைக் கவனித்துக்கொண்டிருப்பதாக ஒரு பிரமை,” என்றேன்.

            பானுமதி சிரித்தாள்.

            வீட்டிற்குச் சென்று பேப்பரைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.  பின் மனைவியைப் பார்த்து, “யாரோ என் பக்கத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது,” என்றேன்.

            “என்ன ஆச்சு..உங்களுக்கு..யாருமில்லை..”என்றாள்.

            கொஞ்ச நாட்களாய் இது எனக்குப் பிரச்சினையாக இருக்கிறது.  மருத்துவரைப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தால், அவர்கள் எதாவது மாத்திரைகளைக் கொடுப்பார்கள்.  அதனால் பிரச்சினை இன்னும் அதிகமாகுமே தவிரக் குறையாது.  நானே இதைச் சரிசெய்து கொள்ளவேண்டுமென்று நினைத்தேன்.  முதலில் இம்மாதிரியான சித்தப் பிரமை என்னிடம் இருப்பதாகவே காட்டிக்கொள்ளக் கூடாது என்று தீர்மானித்தேன்.  இது எப்படி ஆயிற்று என்றால் யாராவது உண்மையாகவே என் பின்னால் நின்றால்கூட நான் கண்டுகொள்ளாமலிருந்தேன்.  ஒருமுறை சாமி சார் என் பின்னால் வந்து நின்று கொண்டிருந்தார்.  அவரை நான் கண்டுகொள்ளவே இல்லை.

            “என்ன பின்னால் நின்றால் கூட கண்டுகொள்ள மாட்டீர்களே?”என்று வினவினார்.

            நான் சமாளித்தபடி,”வேலை மும்முரத்தில் கவனிக்கவில்லை,”என்றேன்.

            “சரவணன் பள்ளிக்கடன் என்ன ஆயிற்று?”

            “சரவணன் ஒரு சப்ஜெக்டில் பெயிலாயிட்டான்..மேலே எழுதிக் கேட்கவேண்டும்,” என்றேன்.

            “தொல்லை தாங்க முடியவில்லை,”என்றார் சாமி.

            “லோன் டிபார்ட்மெண்டை இனி லொள்ளு டிபார்ட்மெண்டாக மாற்றி விடலாம்,”என்றேன் சிரித்தபடி.

            பல நாட்களாய் இந்தப் பிரச்சினை குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.   இப்போதெல்லாம் நிலைமை இன்னும்கூட முற்றி விட்டது.  படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும்போது என் பக்கத்தில் மனைவி படுத்துக்கொண்டிருப்பதாகப் பிரமை இருக்கும்.  உண்மையில் படுக்கையில் படுக்க மனைவி வந்திருக்க மாட்டாள்.  யாரோ பேசுவதுபோல் கேட்பதுகூட பிரச்சினை.  என் நண்பர் கோபி கிருஷ்ணன் இதை வைத்து ஒரு நாவலே எழுதியிருக்கிறார்.  ஏன் எம்.வி.வெங்கட்ராமன், üகாதுகள்ý என்ற நாவல் எழுதியிருக்கிறார்.  எனக்கு அதுமாதிரி பிரச்சினை இல்லை.  தூக்கம் வந்துவிட்டால் நன்றாகத் தூங்கி விடுவேன்.  குரல் ஒன்றும் கேட்பதில்லை.

            என் அலுவலகத்தில் உள்ள அலுவலர் ஒருவருக்கு ஒரு பிரச்சினை.  அவருடைய மகள் குளியலறையில் குளிக்கச் சென்றால், ரொம்ப நேரம் வெளியே வரமாட்டாள்.  குளித்துக்கொண்டே இருப்பாள்.  இதுவும் ஒரு குழப்பம்.  குளிக்காமலே இருப்பதும் குழப்பம்தான்.  யோகி ராம்சுரத்குமார் அழுக்கு உடைகளுடன் காட்சி அளிப்பார்.  ஆனால் அவர் முகத்தில் ஒரு தேஜஸ் ஜொலிக்கும்.  அபாரமாக இருக்கும்.

என்நிலை எப்படி வேண்டுமானாலும் போகட்டும்.  ஆனால் மருத்துவரைப் போய்ப் பார்ப்பதில்லை என்ற என் தீர்மானம் உறுதியானதுதான்.  பெரும்பாலான மனோதத்துவ மருத்துவர்கள் மயக்க மருந்தைக் கொடுப்பார்கள்.  அதைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கித் தூங்கி வழியவேண்டும்  

            என்னுடன் பழகிக் கொண்டிருக்கும் பலருக்கும் நான் முழுவதுமாக மாறிவிட்டதாகத் தோன்றியது.  பானுமதிதான் முதலில் கவனித்தாள்.

            “என்ன சார், நீங்க கலகலவென்று பேசிக்கொண்டிருப்பீர்கள்…என்ன ஆயிற்று உங்களுக்கு?..”என்று கேட்டாள்.

            “ஒண்ணுமில்லையே…”என்றேன் சமாளித்தபடி.

            பக்கத்திலிருந்த பாக்கியலட்சுமி சொன்னாள்.”பானு சொல்றது சரிதான்…நீங்க பிரமைப் பிடிச்சா மாதிரி இருக்கீங்க..”

            “அப்படியா…எனக்கு ஒன்றும் தெரியவில்லையே?…”

            அதன்பின் அலுவலகத்திற்குச் செல்வதற்குமுன் கண்ணாடி முன் நின்று என் முகத்தைப் பாரத்துக்கொள்வோன்..வாசனைத் திரவியத்தை உடலில் பூசிக்கொண்டு செல்வேன்..பவுடரை முகத்தில் நன்றாக அடித்துக்கொள்வேன்..முகத்தை எப்படி வைத்துக்கொள்வது என்று கண்ணாடி முன் ஒத்திகைப் பார்ப்பேன்.  எப்படி ஒருவரைப் பார்த்துச் சிரிப்பது என்று சிரித்துப் பார்த்துக்கொள்வேன்.

            ஒருநாள் மேலாளர் என்னைப் பார்த்து,”நாளைக்கு நீங்க புலி வளம் போய்விட்டு வாருங்கள்,” என்றார்.

            “புலி வளமா?”

            “ஆளே இல்லையாம்…அந்தப் கிளை மேலாளர்க்கு மிட்டிங்காம்..நீங்கப் போய் கிளையைப் பார்த்துக்கொள்ளுங்கள்..”என்றார்.

            “முதலில் புலி வளம் எங்கே இருக்கிறது..எத்தனை மணிக்குக் கிளம்ப வேண்டும்..,”என்று கேட்டேன்.

            “எட்டுமணிக்குக் கிளம்பினால், சரியாக இருக்கும்.  திருவாரூர் போய் திருத்துறைப்பூண்டி பேருந்தில் ஏறினால் புலி வளம் வந்துவிடும்,”என்றார்.

            “வேறு யாருமில்லையா?  நான்தான் போக வேண்டுமா?” என்று வெறுப்புடன் கேட்டேன்.

            “இங்கேயும் ஆள் இல்லை…நீங்க போய்விட்டு வந்திடுங்க…ஒருநாள்தான்,”என்றார்.

            “சரி,” என்று சொல்லிவிட்டு, என் சீட்டில் வந்து அமர்ந்து கொண்டேன்.  வழக்கம்போல் என் பின்னால் யாரோ நிற்பதுபோல் தோன்றியது.  இந்தப் பிரமையை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் தள்ளுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

            அடுத்தநாள் காலையிலே புலி வளத்திற்குக் கிளம்பினேன்.

            “என்ன திடீர்னு..புலி வளம்..”என்றாள் மனைவி.

            “ஆமாம்.  புலி வளம்,”என்றேன்.

            காலை எட்டுமணிக்கே  பேருந்து பிடித்து திருவாரூருக்குச் சென்று அங்கிருந்து புலி வளம் சென்றேன்.  நான் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு திருவாரூர் கிளையில் என்னுடன் முன்பு பணிபுரிந்த நண்பர் ஒருவர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பார்க்க வரும்படி சொன்னார்.

            புலி வளத்தில் என் அலுவலக வேலை சீக்கிரமாக முடிந்துவிட்டது.  திருவாரூர் சென்றேன்.  யாரோ பின் தொடர்வது இங்கேயும் ஆரம்பித்து விட்டது.  யார் யார் யார் என்னைத் தொடர்வது?  தொடர்பவனின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும். ..ஏன் தொடர வேண்டும்..என்னிடம் என்ன இருக்கிறது.  பின் தொடரும் நிழலா?…

            திருவாரூர் கிளையில் இருக்கும் நண்பர் என்னை வரவேற்றார்.  அவருடன் சிறிதுநேரம் அங்கிருந்தேன்.  எல்லா வங்கி அலுவலகங்களும் ஒரே மாதிரியாக இருந்தன.  பிரச்சினைகளின் தாக்கங்களுடன்.  நண்பர் என்னைத் திருவாரூர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.  பிரமிக்க வைக்கும் கோயில்.  அன்றைக்கு அடுத்தநாள் ஆழித்தேர் ஓட்டம்.  கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்தது.  கோயிலைச் சுற்றி சுற்றி பல பிரகாரங்கள்.  செருப்புப் போடாமல் என்னால் நடக்க முடியவில்லை.  சர்க்கரை நோயால் என் கால்கள் பாதிக்கப்பட்டிருந்தன.  திருவாரூரில் உள்ள இந்தக் கோயிலும், நடுவில் வீற்றிருக்கும் பெரிய தெப்பமும்தான் புகழ் பெற்றவை.  கோயிலுக்காகவே இந்த ஊர் இருப்பதாகத் தோன்றும்.  கோயிலின் எல்லாப் பகுதிகளையும் உடனே சுற்ற முடியாது.  நிதானமாக ஒவ்வொரு இடமாகத் திருவாரூரில் தங்கியிருந்து சுற்ற வேண்டும்.  கமலாம்பாள் சன்னிதியைச் சுற்றிக்கொண்டு வந்தோம்.  என் பின்னால் யாரோ தொடர்வதுபோல் தோன்றியது.  நண்பர் நடக்கும்போது சற்று வேகமாக என்னைத் தாண்டி தாண்டி சென்று கொண்டிருந்தார்.  என் நிதானமான நடை அவருக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது.  யாரோ என்னைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே பின் தொடர்ந்து வருகிறார்கள்.  யார் யார் யார்.. நிச்சயமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்..  

            நண்பர் விசாரித்தார் : “நீங்கள் ஏன் அடிக்கடி திரும்பிப் பார்த்தே நடந்து வருகிறீர்கள்?”

            “அதெல்லாம் ஒன்றுமில்லை…” என்று சமாளித்தேன்.                             நான் நடந்துகொண்டு வரும்போது, துல்லியமாக யாரோ என்னைத் தொடர்வதுபோல் நன்றாகப் பட்டது.  யார் யார்…இப்போது “சாமீ..”என்று கூப்பிடுவதுபோல் தோன்றியது.  நான் வைராக்கியமாகத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன்..”சாமீ..சாமீ..” சத்தம் அருகில் வந்து ஒலிப்பதுபோல் தோன்றியது.  என்னை ரொம்பவும் அடக்கிக் கொண்டேன்.  நானும் நண்பரும் நடந்து செல்லும்போது ஒருவித தூரத்தில் ஒருவரை ஒருவர் துரத்துவதுபோல் வந்துகொண்டிருந்தோம்.  கோயிலைச் சுற்றிவிட்டு தேரையும் பார்த்துவிட்டுத்தான் நான் ஊருக்குக் கிளம்ப வேண்டும்.  “சாமீ..சாமீ..” என்ன இழவு இது..சத்தம் வேறு கேட்கிறதே…உண்மையில் என்னை மடக்க யாரோ துரத்துகிறார்களா?  சட்டென்று திரும்பிப் பார்த்தேன்..ஒரு பிச்சைக்காரி..சத்தம் போட்டபடி என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறாள்.

            என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை.  அவளை ஓங்கி அறைந்தேன். 

            “இனிமேல் வருவாயா..என்ன நினைச்சிண்டிருக்காய்..நானும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்..தொடர்ந்து வந்து என் உயிரை எடுக்கிறாயே..நாயே..”

            அவள் நிலைகுலைந்து கீழே விழுந்து விட்டாள்.  பெரிதாக அழுது கூட்டத்தைக் கூட்டிவிட்டாள்.  

            என் நண்பர் திகைத்துவிட்டார்.  என்னைப் பார்த்து,”ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்.

            அப்போதுதான் என் நிலைமை எனக்குப் புரிந்தது.  அந்தப் பிச்சைக்காரியை நோக்கி கைகூப்பி வணங்கினேன். 

            “என்னை மன்னித்துவிடு,” என்றேன்.  ஒரு 100 ரூபாய்த் தாளை அவளிடம் நீட்டினேன்.  அவளால் நம்ப முடியவில்லை.

            “வேணாம் சாமீ..” என்றாள்.

            “நீ நல்லவள்.  உன்னைத் தெரியாமல் அடித்துவிட்டேன்.  வாங்கிக்கொள்,”என்றேன்.

            அவள் வாங்கிக்கொண்டாள்.  அவள் முகம் உற்சாகமாக மலர்ந்தது.

            அந்த இடத்தைவிட்டு நானும் நண்பரும் நகர்ந்தோம்.  இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நண்பர் என்னுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை.  நண்பரிடம் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டேன்.

            அடுத்தநாள் நான் அலுவலகம் சென்றபோது என்னைத் தொடர்ந்து வரவில்லை.  என் பின்னால் யாரும் நிற்கவில்லை..ஏன்..

5 Comments on “இரண்டு கடிதங்கள்/அழகியசிங்கர்”

  1. உண்மையில் நடந்த கதை போல் தெரிகிறது.இதே மாதிரி அநேகமாக எல்லாருக்கும் நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

  2. உண்மையா? கதையா? என்ற கருத்துக்குள் போகவில்லை..ஆனால் கதையின் உளவியல் மிக அருமை.

Comments are closed.