
இன்று காலையில் என் மனைவி மாதவி, “ஏங்க, இருபதாம் தேதிதான் ஆகிறது. கையில் நீங்கள் கொடுத்த பணம் ஏதும் மிச்சமில்லை. காய்கறி, கொஞ்சம் சாமான்கள் வாங்கப் பணம் வேண்டும்” என்று கேட்டாள்.
என் பெயர் மதன். நான் எங்கள் ஊரிலுள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறேன். சம்பளம் வந்ததும் வீட்டு வாடகை, குழந்தை மகிதாவின் பள்ளிக் கட்டணம், மளிகைச் சாமான்கள், பால், என் வண்டிக்குப் பெட்ரோல் என எப்போதும் பற்றாக்குறைதான். தமிழ்நாட்டு பட்ஜெட் மாதிரி!
இயலாமையால் வந்த கோபத்தை மனைவியிடம் காட்டி, “வரவர வீட்டுக்கு வந்தால் நிம்மதியே இல்லை!” என்று குரலுயர்த்திக் கத்தினேன். அவளை அடிப்பதற்காகக் கையை ஓங்கியவன், அவள் பக்கத்தில் பயந்து அழுதுகொண்டு நின்ற குழந்தையைப் பார்த்துச் சட்டென்று வெளிறிப்போனேன். உடனே வெளியே ஓடினேன்.
“சே! அவளும் பாவம். எத்தனைதான் சிக்கனமாக இருப்பாள்? என்னிடம் கேட்காமல் யாரிடம் போவாள்?” என்று யோசித்தபோது மனத்தராசு அவள் பக்கமே சாய்ந்தது.
மன்னிப்புக் கேட்கும் எண்ணத்துடன் மெதுவாக வீடு திரும்பினேன். என்னைக் கண்டதும் மகிதா, “அம்மா, அப்பா வந்துட்டாங்க!” என்று சந்தோஷமாகக் குரல் கொடுத்தாள். அவளை அள்ளி எடுத்தபடி வீட்டுக்குள் போனேன்.
