ருக்மணி வெங்கட்ராமன்/முகங்களில் எத்தனை விதம்?

பள்ளி விட்டு வந்த மீனா, ஒன்றும் பேசாமல் அம்மாவின் உள்ளங்கையில் கோபமான ஒரு முகத்தை வரைந்தாள்.
“செல்லத்துக்கு என்ன கோபம், செல்லத்துக்கு?” என்று கேட்டவுடன், மனதில் ஆறுதல் ஏற்பட்டதும் நாக்கை வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு முகத்தை வரைந்தாள்.
குழந்தைக்குப் பசியாக இருக்கிறது என்று புரிந்துகொண்ட அம்மா, அவளுக்குப் பிடித்த குலோப் ஜாமூனை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுத்ததும், மகிழ்ச்சியுடன் அடுத்து சிரிக்கும் எமோஜியை வரைய ஆரம்பித்தாள்.
அம்மாவும் அவள் கையில் சிரிக்கும் முகத்தை வரைந்தார். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்.
அப்போது அங்கு வந்த அவளுடைய அப்பா, “என்ன, அம்மாவுக்கும் பொண்ணுக்கும் நல்ல இணக்கம் போலிருக்கே! இது என்ன? தீபா, உன் கையில் இத்தனை முகங்கள் வரைந்து இருக்கின்றன?” என்று கேட்டார்.
“மீனு, அவள் எந்த மூடில் இருக்கிறாள் என்பதை என் கையில் வரைகிறாள். அதன்படி நான் நடந்துகொள்வேன். இப்படித்தான் இரண்டு நாட்களாகச் செய்கிறாள்.”
“இது நல்ல ஐடியாவாக இருக்கே! இனி நீ உன் மூட் எப்படி இருக்கிறது என்பதை நீயும் வரைந்தால், நானும் அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வேன்” என்றவரை வெட்கத்துடன் பார்த்தாள் தீபா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன