மடிப்பாக்கம் பிரபாவதி/அவதாரங்கள்

சுந்தர் என்று அழகான பெயர்தான் அவனுக்கு. ஆனால், அவனுக்குப் பல முகங்கள். அவன் வாழ்க்கையில் பல அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
“இன்னிக்கு கரண்ட் பில் கட்டணும். பணம் வேணும்” என்று சம்பாதிக்கும் கணவனாக ஒரு அவதாரம்.
“அண்ணே, அவரோட என்னால மல்லுக்கட்ட முடியாது. குடிச்சிட்டு ராத்திரியெல்லாம் அட்டகாசம்” என்று தங்கை போன் செய்ததும், மாப்பிள்ளையை மிரட்டிப் பணியவைக்கும் கோபக்காரனாக ஒரு முகம்.
“அப்பா சுந்தரு, எனக்கு எழுந்திருச்சு உக்கார முடியல. கொஞ்சம் கைத்தாங்கலா கூட்டிக்கிட்டுப் போப்பா. பாத்ரூம் போகணும்” என்று அழைக்கும் அப்பாவுக்கு அனுசரணையாக, கனிவுடன் பார்த்துக்கொள்ளும், உதவும் முகம்.
அலுவலகத்தில், அந்த நிமிடமே வேலை நடந்தாக வேண்டும் என்று விரட்டும் முதலாளியின் முன், பணிவுடனும் வேறு வழியில்லை என்ற பாவனையிலும் தலையாட்டும் பொம்மைபோல் ஒரு முகம்.
மாலை வீடு வந்தால், குழந்தைகளிடம் காட்டும் பாசத்தில் ஒரு முகம். பாடம் சொல்லிக்கொடுக்கும்போது கண்டிப்புடன் கூடிய கடுமையான முகம்.
இப்படி அடுத்தவர்களுக்காகவே வாழும் சுந்தரின் உண்மையான முகம் அவனுக்கே மறந்துவிட்டது.
“ஆட்டுவித்தால் யாரொருவர்” என்ற நிலையில் வாழ்ந்துவருவது புரிந்தாலும், தனக்கென என்ன உள்ளது? இவர்கள் எல்லோரும் என்னுடையவர்கள். இவர்களுக்காக வாழ்கிறேன் என்ற நினைப்புதான் சுந்தருக்கு மிஞ்சியது.
பொய்யோ மெய்யோ, ஒவ்வொருவருக்குள்ளும் சுந்தர் ஒவ்வொரு ரூபமாய்த் தெரிந்தான்.
வாழ்க்கை வாழ்வதற்கே. அது தனக்காகவும் என்றிருந்தால், சுந்தருக்கு மகிழ்ச்சியான முகமும் இருந்திருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன