
மரங்களின் அழைப்பிலே
தென்றலாய், வாடையாய்
காற்று மெல்லிய
புன்னகையுடன் வந்து
அணைத்து
காடும், நாடும்
மகிழ நெருங்கி விளையாடுகிறது.
அந்த நெருக்கமே
பகையாகிப் போக
புயலாய் வீசி வதைக்கிறது
ஒருநாள்
துணைக்கு மழையையும்
சேர்த்துக் கொண்டு.
தான் கொஞ்சி விளையாடிய
அந்த பச்சை வம்சத்தையே
ஹோ..ஹோ வென கூச்சல்
போட்டபடி
தன் நரசிம்ம விரல்களால்
கிழித்துப் போட்டு
துவம்சம் செய்துவிட்டுக்
கடந்து போகிறது…
பச்சை வாடையாய் தன்
இறுதி மூச்சை விட்டபடி
தரையில் விழுந்த
செடி, கொடி, மரங்கள்
ஏன் இப்படிச் செய்தான் என்று
அறியாமலேயே
தங்களின் வம்ச விதைகளை
பூமியில் விட்டுப் போகின்றன
தங்கள் நண்பன்
தென்றலாய், வாடையாய்
மீண்டும் அணைக்க
வருவான் என்ற நம்பிக்கையில்.
