அர்ஜுனன்/முகங்கள்

ஓவியக் கண்காட்சிக்குப் பெற்றோருடன் சென்றிருந்தான் ரித்தீஷ்.
நாலைந்து முகங்கள் மட்டும் கொண்ட ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியம் அங்கு இருந்தது.
“அப்பா, இந்த ஓவியம் என்ன சொல்லுதுன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்.”
“சொல்லு, பார்ப்போம்.”
“எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரே கருத்து இருக்காது. வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு மனிதர்களின் பார்வையைக் குறிக்குது.”
“ம்… இதையே ஒரே மனிதன் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாகச் சிந்திக்கிறான்னு கூட சொல்லலாம்,” என்றார் அப்பா.
“அத்தோட ஒவ்வொரு முகத்திலேயும் ரெண்டு கண்களும் ஒண்ணுபோல இல்லை. அதனால ஒரே விஷயத்தில ஆணின் பார்வையும், பெண்ணின் பார்வையும் வித்தியாசப்படுதுன்னும் புரிஞ்சிக்கலாம்,” என்றாள் அம்மா.
அங்கு இருந்த முகங்களில் ஓரிரண்டுக்கு மட்டும் வாய் வரையப்பட்டிருந்தது.
‘மாற்றுக் கருத்து இருந்தாலும், எப்போதும் வாய்விட்டுச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.’
அந்த ஓவியத்தைப் படைத்த ஓவியன் அருகில் நின்று சிரித்துக்கொண்டான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன