ஜே. செல்லம் ஜெரினா/முகங்கள்

“எனக்கு விசித்திரமான பிரச்னை. என்னைச் சுற்றி முகங்களாகவே இருக்கின்றன.”
சைக்கியாட்ரிஸ்ட் கூர்ந்து பார்த்தார்.
“எப்போதிலிருந்து?”
“…..”
“சொல்லுங்கள்.”
“என் சின்ன வயசுலே ஒருநாள் மயக்கமாகிவிட்டேன். முழித்தபோது என் முகத்தைக் கொத்துவது போலப் பலவிதமான முகங்கள் கவிந்து கிடந்தன. அப்போதிலிருந்து…”
“இப்போது இன்னும் தீவிரமாகிவிட்டது போலத் தோன்றுகிறது. என்னால் என் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.”
“பைத்தியம் பிடித்துவிடுமோன்னு பயமாக இருக்கு.”
ஐந்து சிட்டிங்குகள் முடிந்தன.
“தீபாவின் முகங்கள்!”
அரங்கம் நிறைந்திருந்தது. வந்த கூட்டம் அத்தனை ஓவியங்களையும் சிலாகித்தது. பாராட்டியது. கூட்டமாக விவாதித்தது.
சிறுவயதில் நிகழ்ந்த விரும்பத்தகாத ஒரு நிகழ்வு அடிமனதில் கலந்துவிட்ட ஒவ்வாமையே தீபாவின் பிரச்னை எனக் கண்டறிந்த டாக்டர், கேன்வாஸ் ஷீட்டில் தோன்றுவதையெல்லாம், எந்த முகங்களைக் கண்டு அஞ்சுகிறாளோ அவற்றை உருவகித்து, உள்ளத்தை கோடுகளாலும் வண்ணங்களாலும் வெளிக்கொண்டு வரச் சொன்னார்.
முதலில் தடுமாறியவள், மூன்றே மாதங்களில் தீட்டித் தள்ளிவிட்டாள்.
முகங்கள்! முகங்கள் மட்டுமே! வடிவோ ஒழுங்கோ இல்லாத தட்டை முகம், சதுர முகம், ஒற்றைக்கண், ஒன்றரைக் கண், கோணல் கண், காக்கைக் கண்ணுடன் அவலட்சணமான முகங்கள். அள்ளிக் கொட்டியிருந்தன வண்ணங்கள்.
அரங்கில் முதல் நாள் சீண்டுவாரில்லை. வேண்டாத வேலையெனச் சலித்தாள். யாரோ இன்ஸ்டாவில் போட, மூன்றாம் நாள் விற்பனை உச்சம் தொட்டது.
“இப்போது எப்படி உணர்கிறீர்கள்?”
“ரொம்ப ரிலீஃபா ஃபீலாகுது, டாக்டர்.”
“அவ்வளவுதான், போயே போச்சு!”
இருவரும் சிரித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன