சுபாஷிணி ரமணன்/குழந்தை மனசு

தினேஷ் படிக்கும் பள்ளியிலிருந்து, அவன் அப்பாவை வரச் சொல்லி போன் வந்தது.
“என்ன ஆச்சு?” என்று பதறினான் முருகேஷ்.
“ஒண்ணும் இல்ல, பயப்படாதீங்க. இன்னிக்கு நடந்த டிராயிங் காம்பெடிஷன்ல அவன் வரைஞ்சதைப் பற்றிய டிஸ்கஷன்தான்.”
“இதுக்கு எதுக்கு டிஸ்கஷன்?” என்று கவலையுடன் பள்ளியை அணுகினான் முருகேஷ்.
பிரின்ஸிபால் அறையில் இருந்தார்.
“உட்காருங்க சார்” என்றவர், “உங்க வீட்டில் எத்தனை பேர் இருக்கீங்க?” என்று கேட்டார்.
“அப்பா, நான், என் வைஃப், தினேஷ். நாலு பேர்தான் இருக்கோம்” என்றான் முருகேஷ்.
வீட்டில் அவர்கள் பழகும் முறை, தினேஷ் யாரோடு அதிகமாக இருக்கிறான், அவனுக்குத் தேவையான கவனிப்பு கிடைக்கிறதா என்றெல்லாம் பல கேள்விகளைக் கேட்டார்.
அவன் வகுப்பிலும் எப்போதும் சோகமாக அமர்ந்திருப்பதைக் கூறிவிட்டு, தினேஷ் வரைந்த படத்தையும் மற்றவர்கள் வரைந்த படங்களையும் காட்டினார்.
அவர்களெல்லாம் பறவைகள், விலங்குகள், இயற்கைக் காட்சிகள் என்று மகிழ்ச்சியாக வரைந்திருக்க, தினேஷ் மட்டும் பல சோகமான முகங்களை வரைந்திருந்தான்.
“ஏண்டா இப்படி சோகமாக வரைஞ்சிருக்க?” என்று முருகேஷ் கேட்டான்.
“நம்ம வீட்டில் எல்லோரும் எப்பவும் இப்படித்தானேப்பா இருக்கோம்.”
முகத்தில் அறையும் பதிலால் திடுக்கிட்ட முருகேஷ், வேலை, வேலை என்று ஓடுவதால் தனிமையில் ஏங்கும் குழந்தையின் மனதைப் புரிந்துகொண்டான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன