கி. பார்வதி/பார்வைகள் பலவிதம்

“எப்பப் பார்த்தாலும் உங்கம்மா ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்காங்க. சரியாக முகம் கொடுத்துப் பேசறதுமில்லை. அப்படி என்னதான் அவங்களுக்கு என் மேல வெறுப்பு?” விடிந்ததுமே கணவன் ராகவனிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் ராகவி.
“எத்தனை தடவைதான் உனக்குப் புரியவைப்பது? நான் ரொம்ப சோர்வாகிவிட்டேன்.”
ராகவி எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை.
வருத்தத்தோடு அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றாள். ஒரு கிளார்க் விடுப்பு எடுத்திருந்தார். அவருக்குப் பதிலாக வேறு ஆளும் நியமிக்கப்படவில்லை.
சூப்பர்வைஸரான ராகவி, களத்தில் இறங்கி, அந்தக் கிளார்க்கின் வேலையையும் தானே செய்தாள்.
இதைக் கேமரா மூலம் பார்த்த அதிகாரி, நேரில் வந்து எல்லோர் முன்னிலையிலும் ராகவியைப் பாராட்டினார். அவளது உற்ற தோழிகளுக்குக்கூட அதிகாரி அவளைப் பாராட்டியது பிடிக்கவில்லை.
“உன்னோட வேலையை மட்டும் பார்க்காமல், மற்ற வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வதால் எங்க பேரு கெட்டுப்போகுது.”
அன்றிரவு சோகத்தோடு இருந்த ராகவியை ராகவன் தேற்றினான்.
“ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. அதுமாதிரி ஒவ்வொருத்தரோட பார்வைகளும் ஒவ்வொரு மாதிரித்தான் இருக்கும். நம்ம மனசாட்சிக்கு விரோதமில்லாமல், நாம சரியாக நடந்துகொண்டால் போதும்.”
ஓரளவு புரிந்துகொண்ட ராகவியின் உதடுகளில் லேசாகப் புன்னகை அரும்பியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன