
பள்ளியின் ஓவியப் போட்டியில் கயல் வரைந்த ஓவியம் முதல் பரிசு பெற்றது. பல வண்ணங்களில் ஒன்றோடொன்று இணைந்திருந்த விதவிதமான முகங்களைப் பார்த்த ஆசிரியர் வியந்தார்.
பரிசளிப்பு விழாவில் அவளுடைய ஓவியத்தைப் பார்த்த அரங்கம் கைதட்டலால் நிறைந்தது. அந்த ஓவியத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த கயலிடம் ஆசிரியர் கேட்டார்.
“கயல், இந்த முகங்கள் எதைக் குறிக்கின்றன?” என்று கேட்டார்.
“என் குடும்பத்தினரைத்தான்!” என்றாள்.
“விளக்கமாகச் சொல்” என்றார்.
“அப்பா வீட்டில் எங்களை அதிகாரம் செய்கிறார். அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தை அமைதியாகச் சகித்துக்கொள்கிறார்.
அம்மா தனிமையில் ஏனோ வேதனைப்படுகிறார். எங்களைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.
அண்ணன் தைரியமாகத் தெரிகிறான்; தேர்வு என்றாலே பயப்படுகிறான்.
தம்பி, அப்பா திட்டிய அரை மணி நேரத்திலேயே அதை மறந்து, எங்கள் எல்லோரையும் மகிழ்விக்கிறான்.
நானும் பள்ளியில் சிரித்துக்கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் கோபம், பொறாமை, வருத்தம், சோகம் எனப் பல முகங்களைக் கொண்டுள்ளேன். அதையே வரைந்தேன்” என்றாள் கயல்.
ஆசிரியர் நெகிழ்ந்தார்.
“அப்படியானால், உன் ஓவியம் நமக்கு என்ன உணர்த்துகிறது?”
கயல் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னாள்:
“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள் இருக்கின்றன.
ஒருவருடைய முகத்தைப் பார்த்து எதையும் முடிவு செய்துவிடக் கூடாது” என்றாள்.
ஆசிரியர் கயலை வியந்து பார்த்தார்.
