WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி மாலா மாதவன் எழுதிய ” மூடுபனி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

மடிப்பாக்கம் ஆவின் அலுவலகத்தில், பால் கார்டு வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு வண்டியை எடுத்தாள் அகிலா. மாதம் பிறந்தால் வரிசை கட்டி நிற்கும் வேலைகளில் இதுவும் ஒன்று. அடுத்து நேரே ரேஷன். பின் மாதாந்திரப் பொருட்கள் வாங்க மளிகைக் கடை. வீட்டில் கொண்டு வந்து வைத்து விட்டுப் பின் சாம்பார்ப் பொடிக்காக வெயிலில் காயவைத்த சாமான்களுடன் மாவு மில் நோக்கிப் பயணம்.
அதையும் விட்டால், சில நாட்களுக்கு ஒரு முறை கொஞ்சம் மேல்தட்டாய் பாங்க் வேலைகள். வாங்கிய லோனுக்கு வரிசை தப்பாது கப்பம் கட்டும் செலவு.
அத்துடன் தினம் வீட்டில் மல்லுக்கட்டும் பெருக்குதல், துடைத்தல், பாத்திரம் தேய்த்தல், சமைத்தல் எனத் தொடரும் வேலைகள். தவிர கணவன் சொன்னான் எனப் பார்க்கும் பகுதி நேர வேலை. அதையும் வீட்டில் இருந்து பார்த்தாலே போதும்.
இதில் பெண் என்பவள் ஹவுஸ் ஒய்ஃபாம். வேடிக்கை தான். அவள் தானே குடும்பத்தின் அச்சாணி. லட்சத்தில் சம்பாதிக்கத் தெரிந்த ஆண்பிள்ளைகளுக்கு ஒரு வீட்டு வேலை கூட விதரணையாகப் பண்ணத் தெரியாது.
அப்படியே செய்தாலும் அங்கங்கு தேய்க்காத பாத்திரங்களும், காய்கறிக் குப்பையும் கைகுலுக்கிக் கொண்டிருக்க, எறும்பும், கரப்பானும் எட்டிப் பார்த்து, அதனதன் குடித்தனத்துக்கு இடம் பிடிக்கும்.
“அகிலா! என்ன இத்தனை நேரம்? ஒரு சோறு செய்யல வீட்டுல? எங்க போய் ஊர் சுத்திட்டு வர?” தன்னிடமிருந்த சாவியை வைத்துத் திறந்து கொண்டு வந்திருந்த கணவன் சங்கர் இரைந்தான்.
‘ஆமா. பெரிய புஷ்பக விமானம் வாங்கிக் கொடுத்திட்டாரு. அலுங்காம, நலுங்காம ஊர் சுத்திட்டு வரேன்!’ மனதில் பதில் கொடுத்தபடி நின்றிருந்தாள் அகிலா.
“வாயத் திறந்திறாத! வந்த நாள்ல இருந்து இப்ப வரை இதான் உங் கிட்ட கிரகம்; ஊமைச் சாமியாராட்டம் மனுஷனை ஆட்டி வை. என்னிக்கு உன் கிட்ட இருந்து எனக்கு விமோசனமோ?” இரைந்த சொற்களின் வீச்சு அகிலாவின் நெஞ்சை நச்சென்று பதம் பார்க்க, மளுக்கென்று முகிழ்த்த கண்ணீரை விரல்களால் துடைத்தபடி, சமையல் கட்டு நோக்கிச் சென்றாள் அகிலா.
அகிலாவுக்கும், சங்கருக்கும் கல்யாணமாகி ஒரு வருடம் முடியப் போகிறது. இன்னும் ஒட்டுதல் உருவாகவில்லை. அவன் வடக்கே என்றால், இவள் தெற்கே நின்றாள். இவள் வடக்குக்கு வந்தால், அவன் தெற்கே நகர்ந்தான்.
வந்த முதல் நாளே, அதிகாரமாய் சொல்லி விட்டான்.
“தோ பாரு! சம்பாதிச்சு போடுவேன். அவ்வளவு தான். எல்லா வேலையும் நீ தான் பார்க்கணும். படிச்சவதானே நீ? பார்ட் டைம் வேலைக்கும் போகணும்.”
“வீட்டப் பார்த்துக்கறதுலாம் உன் பாடு. என்ன இருந்தாலும் இது உங்கப்பா வாங்கிக் கொடுத்த வீடு தானே?”
….
“கடைக்கா? நானா? இங்க பாரு அகிலா; என்னை எதுக்கும் கூப்பிடாதே! இதெல்லாம் நீ தான் பார்த்துக்கணும்!”
பொறுப்புச் சங்கிலிகள் ஒவ்வொன்றாய்ப் பூட்டப்பட, அகற்றும் வழி தெரியாது, மௌனப் போர்வையை இலாவகமாய் அணிந்து கொண்டாள் அகிலா.
‘அவள் கனவின் இராஜகுமாரன் இப்படி இல்லையே. அவள் விரல் நகம் அழுக்காகி விடாது, உள்ளங்கையில் வைத்துத் தாங்குபவன் ஆகிற்றே. அவள் ‘ம்’ என்று தலையாட்டும் முன், நினைக்கும் பொருளைக் கொண்டு வந்து கொட்டுபவன் ஆகிற்றே.’
‘இவன் – ‘இந்த சங்கர் யாரோ?’ கனவு தேசத்து இராஜகுமாரனைத் தள்ளிவிட்டு அப்பாவால் உள் நுழைந்த வில்லன்.’ அகிலா கசப்புடன் புன்னகைத்தாள்.
அடுப்பில் தோசை கருகிக் கொண்டிருந்தது.
“ஏய்ய்ய்! கன்னங்கரேன்னு உன் மூஞ்சி மாதிரி தோசை கருகறது தெரியல? அப்படி எந்த கோட்டையைப் பிடிக்க யோசனை?” சங்கர் பின்னாடி வந்து நின்று அவள் முதுகில் அடித்தான்.
‘அம்மா!’ வலியில் அடுப்பை அணைத்து விட்டாள் அகிலா.
“ஏய், தோசைடி.!”
பதில் பேசாது நகர்ந்த அகிலாவை, வெறித்தபடி பார்த்துக்கொண்டு நின்றான் சங்கர்.
‘இவள் என்ன மாதிரி பிறவி? பேசவே மாட்டேங்கறா? ஒரு வேலையும் ஒழுங்காத் தெரியல. இவளோட வாழ்ந்து என்னத்தக் கண்டோம்? பேசாம டைவர்ஸ் பண்ணலாமா?’ – மனம் கசந்து முதல் விரிசல் விட்டது அப்போது தான். எப்போது பார்த்தாலும், ஆபீஸ் வேலை என டூர் ப்ரோகிராம் போட்டுக் கொண்டு விலகலானான்.
“யூ ஆர் ஸோ ஸ்வீட் அகிலா. என்ன அழகா சமைக்கிற? பட்டு பட்டா தோசை; வாவ்; டேஸ்டி சட்னி!” கனவுக் கணவன் காதோரம் வந்து பேசி, தன் மூச்சுக்காற்றால் அவளை குறுகுறுக்கச் செய்ய, அகிலா நெளிந்தாள்.
“ஹேய், நான் வரதுக்குள்ள எல்லா வேலையும் முடிச்சுட்டியா? ஏம்மா – நான் ஹெல்ப் பண்ணி இருப்பேனே! பாவம் நீ ஒரு ஆளா இத்தனையும் செஞ்சிருக்கியே?” கனவுக் கணவனின் கரிசனையில், கண்ணோரம் நீர் துளிர்க்க, அவன் மேல் சாய்ந்த அகிலாவை, முன்னுச்சி கோதி முத்தமிட்டு,
“அட் யுவர் சர்வீஸ் மேடம்! இன்னிக்கு எங்க போகலாம்?” கனவுக் கணவனின் கொஞ்சல் நீண்டு கொண்டே போனதில், அகிலாவுக்கு சங்கரைப் பற்றிய ஞாபகமே இல்லை.
“போங்கப்பா!” கிளியாய் மிழற்றிய அகிலாவின் பதில் மொழியைக் கேட்க அங்கே வெற்றுச்சுவர் தான் இருந்தது.
இலக்கற்று வெறித்தபடி உட்கார்ந்திருந்த அகிலா, சட்டென்று கைப்பையை எடுத்துக் கொண்டு கால் போன போக்கில் நடந்தாள். தூரத்துக் கடற்கரை அவளை வா வாவென்றது.
யாருமற்ற பிரபஞ்சத்தில், ஏதோ ஒரு நினைவடுக்கில் நுழைந்து உலாவும் அவளின் ராஜகுமாரன், அவள் மனதை ஆட்சி செய்து கொண்டிருக்க, நிஜமாய் வந்த சங்கரோ நிழலாகிக் காணாமல் போக, அந்த கடற்கரை மணல் வெளியில் எல்லையில்லா வானத்தை வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள் அகிலா.
‘எனக்குள் இருக்கிறானே அந்த ராஜகுமாரன். அவன் எதற்கும் என்னை அடிப்பதில்லை. எதற்கும் என்னை வெறுப்பதில்லை. எதற்குமே என்னிடம் கோபப் படுவதும் இல்லை. அவன் போதும். அவன் மட்டும் போதும்.’
தீர்க்கமாய் யோசித்தவள், எழுந்து வீட்டுக்கு வரும் போது இருள் தன் போர்வையைப் பூமிக்குப் போர்த்திக் கொண்டிருந்தது.
“என்னடி அகிலா; எங்க போய்ட்டு வர? வீடு பூட்டி இருக்கேன்னு வாசலில் நிற்கறோம்!” அப்பாவுடன் ஊரிலிருந்து வந்த அம்மா கேட்டாள்.
“இவரோட தான்ம்மா வெளியில் போய்ட்டு வந்தேன். பீச்ல நல்ல காத்து. காற்றாட உட்கார்ந்துட்டு வந்தோம்!”
“இவரோடன்னா? யாரு மாப்பிள்ளையோடையா?” அப்பா கேட்டார்.
“ஆமாப்பா, உங்க மாப்பிள்ளை தான்!”
“இவ என்ன சொல்றா? மாப்பிள்ளை தான் அங்க?” அம்மா அப்பாவின் காதை கடித்தார்.
“உஷ்; சும்மா இரு. இவ நடந்துக்கறது பிடிக்காம தான், நம்ம மாப்பிள்ளை?” மனைவியிடம் தணிந்த குரலில் சொன்னவர், “என்னது இதெல்லாம் அகிலா? மாப்பிள்ள இல்லாம நீ மட்டும் இப்படி வெளியே?”
“அவரும் தான் வந்தார்ன்னு சொன்னேனேப்பா. இருங்க சூடா தோசை ஊத்தறேன். உங்களுக்குத் தெரியுமா? என் தோசை அப்படியே பட்டு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும்ன்னு இவர் சொல்வாரு. நான் தோசை வார்க்க ஆரம்பிச்சேன்னா, இவர் சாப்பிடற எண்ணிக்கைக்கு அளவே இல்லை!” சிரித்தாள் அகிலா.
“அடியேய், முழிச்சுக்கோ; மாப்பிள்ள எங்க?” அம்மா ஆங்காரமாய்க் கேட்டாள்.
“என்னம்மா நீங்க முழிச்சுக்கோன்னு. நானென்ன இப்ப தூங்கிக்கிட்டா இருக்கேன். உங்க மாப்பிள்ளையோட தானே உள்ள வந்தேன். பாக்கலையா நீங்க?” அசால்ட்டாய் பதிலளித்தாள் அகிலா.
“ஏங்க வாயில்லா பூச்சிங்க அகிலா. இவளா இவ்வளவு பேசறா. தானுண்டு. தன் வேலையுண்டுன்னு இருப்பாளேங்க. இப்படி கண்ணுக்கு முன்னாடி இல்லாத புருஷனை இருக்கற மாதிரி பேசறாளே. இவளுக்கு என்னாச்சு? பேசாம டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாமா?”
“எனக்கும் புரியலடி. ஒருவேளை தனியா இருக்கறதுனால, வேற அஃபேர் ஏதாச்சும்?”
“சே! சே! இருக்காதுங்க. இவ பிள்ளைப்பூச்சி. அதுக்கெல்லாம் தைரியமில்லாதவ.” பெண்ணை நன்கு புரிந்து வைத்திருந்தாள் தாயார்.
அதற்குள் தட்டு நிறைய தோசைகளை எடுத்து வந்திருந்த அகிலா சட்னியுடன் தட்டில் வைத்துப் பரிமாற..
“மாப்பிள்ள?”
“அவர் உள்ளே இருக்காருப்பா. தூங்கப் போயிருப்பார்!”
“அவர் சாப்பிடலயே?” அப்பா வேண்டுமென்றே, அகிலாவின் போக்குக்கே போய் கேள்வி கேட்டார்.
“இப்ப உங்க முன்னாடி தானேப்பா சாப்பிட்டார்? நான் கூட சொன்னேனே? சும்மாச் சும்மாச் சீண்டாதீங்க அப்பா, வந்திருக்காருன்னு!” அகிலா மென்மையாய் முறுவலித்தாள்.
பூட்டி இருந்த வீட்டில் யார் இருக்க முடியும்? சாவி போட்டு திறந்த அகிலாவுடன் கூட வந்தவரும் யாருமில்லை. இப்போது இருப்பது அப்பா, அம்மா, அகிலா மூன்றே பேர். இதில் நாலாவதாய் மாப்பிள்ளை இருப்பதாயும், அவர் கண்முன்னாடி சாப்பிட்டுச் சென்றதாயும் கூறுகிறாள் அகிலா.
‘என்ன நடக்கிறது இந்தப் பெண்ணுக்குள்?’ பரிதவித்த அம்மா, தன் தட்டில் இருந்த தோசையைப் பிய்த்து மகளுக்கு ஆசையுடன் ஊட்டலானாள்.
“வேலைக்கு லீவ் போட்டுடு அகிலா!”
“ஏம்ப்பா?”
“உங்க அம்மாவுக்கு என்னமோ மூளைச்சூடு போல. முன்னயும் பின்னயுமா பேசறா. டாக்டர் கிட்ட காட்டிட்டு வந்துடலாம்.”
“மூளைச்சூடா? என்னம்மா இது?” அகிலா பதறிப்போய், அம்மாவைப் பிடித்துக் கொண்டாள்.
“அம்மாவுக்குன்னு சொல்லிட்டு, ஏம்ப்பா எனக்கும் சேர்த்து டெஸ்ட் எடுக்கறீங்க?”
“வயசான காலத்துல அவளைத் தனியா டெஸ்ட் எடுக்க வைக்கணுமா அகிலா?” அப்பாவின் மென்மையான குரலில் அவர் சொல்வதெற்கெல்லாம் கட்டுப்பட்டாள்.
டாக்டரின் ஆழ்மன பரிசோதனையில் அவளுள் இருக்கும் இராஜகுமாரன் வெளிப்பட்டான். நின்றான். நடந்தான். அரவணைத்தான். கொஞ்சினான். கூடினான். குழைந்தான். கேட்டுக் கொண்டிருக்கும் பெற்றவர்களின் கண்களில் நீர் வழிந்தது.
“என்ன டாக்டர் இது? இயல்பிலேயே அகிலா எதையும் தனக்குள் வைத்துக் கொள்ளும் ரகம். அது தான் அவளை இப்படி ஆக்கி விட்டது டாக்டர்!”
“உங்கள் பெண் நல்லவள். மிக மிக நல்லவள். அவளைக் கொண்டாடத் தெரியாத புருஷன் அமைந்து விட்டது அவளது துர்பாக்கியம். அவளின் உள்மனம், அவளைக் கொண்டாடக் கூடிய கற்பனை புருஷனைப் படைத்துக் கொண்டு, அவளும், அந்த இராஜகுமாரனுமாய் வாழ ஆரம்பித்து விட்டார்கள். சொல்லப்போனால் இது மூடுபனி வாழ்க்கை. இருப்பது போல் தெரியும். ஆனால் இல்லாதது.”
“என்ன செய்வது டாக்டர்? இதை எப்படி மாற்றுவது?”
“ஏன் மாற்றணும்? வாழ்ந்துட்டுப் போகட்டுமே! சந்தோஷமா இருக்காங்களே!”
“டாக்டர்! இது நிஜ வாழ்க்கையில்லை. கற்பனை சுகங்கள்; கானல் வாழ்க்கை!” அம்மா படபடத்தாள்.
“ஆமா டாக்டர். மாப்பிள்ளை சங்கர் வேற – அங்க டைவோர்ஸ் பேப்பர் அனுப்பி, பொண்ணு கிட்ட கையெழுத்து வாங்கிக் கொடுங்கன்னு நிற்கறார் டாக்டர். எல்லாம் அகிலாவோட இந்த குணத்தினால் தான்!”
“அகிலாவை ஆளும் இந்த கற்பனை எண்ணங்களே அவள் மிஸ்டர் சங்கரால் பட்ட புறக்கணிப்புகளின் விளைவு தான் சார். இதில் திரும்ப அவருடனே உங்கள் பெண்ணை வாழ வைக்கப் போறீங்களா? அகிலா தன் இராஜகுமாரனுடன் ரொம்ப தூரம் பயணிச்சுட்டா. இனிமே அவ சங்கரைப் பார்த்தாலும்!”
“டாக்டர்! இது அவ வாழ்க்கைக்கு?”
“ஒரு இடையூறும் இல்ல. அவ பாட்டுக்கு இருப்பா. வேலைக்குப் போவா. சந்தோஷமா வாழ்க்கையை ரசிப்பா. வந்தது போலவே இந்த இராஜகுமாரன் ஒருநாள் தன்னாலயே காணாமல் போயும் விடுவான். அப்போ அவளுக்கு சாஞ்சுக்க ஒரு தோள் தேவைப்படும். அப்போ பாருங்களேன் ஒரு நல்ல மாப்பிள்ளையாய்.”
அகிலாவின் அம்மா புடவைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்பாவுக்குத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் பற்றுதலாய்ப் பிடித்துக் கொண்டார்.
“இதோ மனைவி அழுததும், சட்டென்று நீங்களும் கண்கலங்கறீங்களே; இந்த அனுசரணை, அகிலாவுக்கு அவள் கணவன் சங்கரிடமிருந்து கிடைக்கவில்லை சார். அவங்க அழுதா, ஏன் உங்க மனம் துடிக்குது? என் கணவன், என் மனைவி அப்படிங்கற பந்தம் இறுக்கமா இறுக்கறதால தானே. அது இங்க மிஸ்ஸிங். அகிலாவோ, சங்கரோ அதற்கான முயற்சிகளில் இறங்கவே இல்ல. சங்கர், அகிலாவை தன் வீட்டு வேலைகளைச் செய்யும் மிஷினாகப் பார்த்தான் என்றால் அகிலா, சங்கரை தன் வீட்டில் சம்பாதிக்கும் ஒருவனாய்ப் பார்த்தாள். அவள் தனக்காகத் தானே வீட்டு வேலைகள் செய்கிறாள் என்று அவனும், அவன் தனக்காகத் தானே உழைக்கிறான் என்று அவளும் புரிந்து கொள்ளவே இல்லை. விளைவு – இருவருமே இன்னொரு வாழ்க்கையில் நுழைந்து விட்டனர். அவன் நிஜத்தில். இவள் நிழலில். பாவம் அகிலா. விட்டுடுங்க. சந்தோஷமா இருக்கட்டும்! தானாச் சரியாயிடும்!”
மூடுபனியில் முகங்கள் தெரிவதில்லை.
‘அகிலாவுக்கும், அவள் கனவு ராஜகுமாரனின் முகம் தெரியவே இல்லை. ‘

மாலா மாதவன்
திருமதி மாலா மாதவன் சென்னையில் வசிக்கிறார். இவர் ஒரு முதுநிலை கணினி பட்டதாரி. “விருட்ச விதைகள்” என்ற சிறுகதையோடு தினமலர் வாரமலரில் ஆரம்பித்த இவருடைய கதைப் பயணம் பல பரிசுகளுடனும், பாராட்டுகளுடனும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு செல்கிறது.
கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறுகதைப் போட்டியிலும், அசோகமித்திரன் சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றவர் இவர். பெண்மணி, ராணி, கல்கி, குமுதம் சிநேகிதி, மங்கையர் மலர், கலைமகள் போன்ற பத்திரிகைகளில் இவருடைய கதைகள் பிரசுரம் ஆகியுள்ளன. இவர் தனது பல நூல்களை புஸ்தகா மற்றும் வானதி பதிப்பகங்களில் பதிப்பித்துள்ளார்.

Excellent story மாலா. ரொம்ப அழகாய் ஒரு பெண்ணின் மன உளைச்சலை அவள் கற்பனை நாயகனைப் பற்றிச் சொல்லி இருக்கீங்க.