லலிதா சங்கர்/மூக்கணாங்கயிறு

சிங்காரத்திடம் சின்னம்மா!
“ஏனுங்க! அப்போ நம்ம நிலத்தை விற்கத்தான் வேணுமுங்களா?”
“நானும் நல்லா யோசனை பண்ணிப் பார்த்துப்புட்டேன். வேற வழியில்லை புள்ள. கடன்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு வேணாம்? அட! சொல்லித்தானே ஆகணும் புள்ள!”
“நம்ம நிலம் நீச்சை வித்துப்புட்டு..! பொறவு நம்ம பொழப்புங்க?”
“அது..! அதை நம்ம குலசாமி பாத்துக்கிடுவாரு. நீ முதல்ல அந்தச் சட்டையை எடுத்துக்கிட்டுவா. நிலத்தைப் பார்க்க ஆளுக வந்து அங்க காத்துக்கிடப்பாக.”
“ஏனுங்க! மிச்சம்மீதி ஏதாச்சும் இருக்குதுங்களா? குத்தகைக்கு ஏதாவது நிலத்தை வாங்கத் தோதுப்படுங்களா?”
“என்னது குத்தகைக்கா? நாளைக்கு கஞ்சி காய்ச்சக்கூட தம்படிக் காசு இல்ல. அதுக்கே என்ன செய்யறதுன்னு யோசனை ஓடுது மனசுல. இதுல குத்தகையாம்ல!”
“ஏனுங்க! நம்ம பொழப்பு இப்படி ஆகிப்போச்சே! இப்போ என்ன செய்யறதுங்கோ?”
“வேற என்ன புள்ள செய்யறது? எல்லாரும் போறமாதிரி சென்னைக்குப் போக வேண்டியதுதான்.”
“ஹக்கங்! நம்ம ஊரு மண்ணையும் ஊரையும் விட்டுட்டு எப்படிப் போறதுன்னு ஒரு யோசனை வேணாமா உங்களுக்கு? வேற வழியே இல்லீங்களா?”
“இல்ல புள்ள. வேற வழியே இல்லைதான். இருந்த ஒரு வீட்டையும் வாங்கின கடனுக்காகக் கொடுத்துப்புட்டோம். கொஞ்சம்போல இருந்த மண்ணும் நம்ம கையை விட்டுப் போயிடுச்சு.”
“மண்ணு என்னங்க பண்ணும்? நேரங்கெட்ட நேரத்துல மழை பெஞ்சுச்சுன்னா அதுக்கு மண்ணைக் குறை சொல்லலாமுங்களா?”
“சரி, மண்ணு இல்லை, மழை கழுத்தை அறுத்துப்போட்டுச்சு. வேற என்னத்தைச் சொல்றது? இனிமே இங்க எதை வெச்சும் குப்பை கொட்ட முடியாது. சென்னைக்குப் போய்க் குப்பையைக் கொட்டறதுதான் ஒரே வழி. கிளம்பு புள்ள.”
“நம்ம மவன் எங்க?”
“ம்ம்ம்! இஸ்கூலுக்குப் போயிருக்கான். அவனோட சோக்காளிப் பசங்களை விட்டுட்டுப் போறோம்னு அவனும் ஒரே அழுவாச்சி. அந்தப் புள்ளையை எப்படித் தேத்தப்போறோம்னு தெரியலங்.”
“அட! அது சின்னப்புள்ள புள்ள. சீக்கிரமா தேறிக்கிடுவான்.”
கோவையை ஒட்டிய அந்தக் கிராமத்திலிருந்து கோவை ரயில் நிலையத்திற்கு வந்து, பின் அங்கிருந்து கிடைத்த ரயிலில் கக்கூசை ஒட்டிய இடத்தில் உட்கார்ந்துகொண்டு, அந்தக் குடும்பம் சென்னையை வந்தடைந்தது.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை அவர்களையும் ஆரத்தழுவி வரவேற்றது. படிப்பறிவில்லாத சிங்காரத்தின் ஏர் பூட்டிய அந்தக் கை, இப்போது துடைப்பத்தைத் தொட்டுக் கூட்டிக்கொண்டிருந்தது.
“இங்காருங்க! நீங்க எந்த வாயை வெச்சுக்கிட்டு குப்பையைக் கொட்டணும்னு சொன்னீங்களோ தெரியலையே! நிஜம்மாவே நாம குப்பையைக் கொட்டற மாதிரியே ஆகிப்போச்சே!”
“வாயைக் கழுவு புள்ள! வெத்துக்கையோட வந்த நமக்கு இன்னிக்கு இந்தக் குப்பைதான் சோறு போடுது. பள்ளிக்கூடப் பக்கம் கூட ஒதுங்காத நமக்கு இன்னிக்கு ஆளுக்கு பத்தாயிரம் சொளையா கிடைக்குதே! கிராமத்துல இந்தக் காசை நாம வாழ்நாளுல பார்த்ததில்லையே!”
“ஆமாம்! நீங்கதான் மெச்சிக்கணும். நம்ம ஊருல சம்பாதிக்கற காசை அப்படியே சேத்து வைக்கலாம். சோத்துக்கும், குழம்பு காய்ச்சவும் நாம ஒத்தப்பைசா செலவு பண்ண வேண்டாம். இங்க அப்படியா? சும்மா விளையற கீரையை இருபது ரூவாய்க்கு மனசாட்சியே இல்லாம விக்கறாங்க. எலிப்பொந்து மாதிரி ஒரு வீடு, அதுக்கு அய்யாயிரம் வாடகை, அதுபோக கரண்ட் செலவு, அது இதுன்னு அது ஒரு ரெண்டாயிரம். ஒட்டுமொத்தமா இங்க இருக்கற மொத்தக் குடும்பத்துக்கும் ஒரே ஒரு கக்கூசு. அதுலயே குளிச்சுக்கிடணும். அய்யே! சீ! நினைச்சாலே வாந்தி வருது. இன்னும் மிச்சக் காலத்தையும் இந்த ஊருலயே கழிக்கணும்னா எனக்கு நாண்டுக்கிட்டுச் சாவலாம் போல இருக்குதுங்க. போதும்போதாதுக்கு எந்தத் தண்ணி சாக்கடைத் தண்ணி, எந்தத் தண்ணி குளிக்கற தண்ணின்னே தெரியலை. சாக்கடைத் தண்ணியிலேயே குளிச்சுப்புட்டு, சாக்கடையில வேலை பார்க்கறதெல்லாம் ஒரு பொழப்புன்னு சொல்றீங்களே! இது நல்லாவா இருக்கு?”
“இந்தா! சும்மா புலம்பிக்கிட்டு கிடைக்காத. முதல்ல நம்ம புள்ளையைக் கிளப்பு. அவனை இன்னிக்கு இஸ்கூலுல சேர்த்துப்புடுவோம்.”
“இப்போ சொன்னீங்க பாருங்க! இது ஒண்ணுதான் கேக்க நல்லா இருக்குது. ஏனுங்க! நம்ம புள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா போதுமுங்க. அதுக்காக எல்லாச் சங்கடத்தையும் பொறுத்துக்கிடலாம்.”
“ஏனுங்க! நல்லா பெரிய இஸ்கூலாத்தாம் இருக்குதுங்கோ!”
“பாத்தியா! டேபிளு! சேர்! இதுல படிச்சு நம்ம பையன் பெரிய ஆபீஸரா வருவான் பாரேன்!”
“ஆமாங்கோவ்! நினைச்சாவே ஜிவ்வுன்னு இருக்குதுங்கோ!”
“கொஞ்சம் தள்ளி நின்னு கனவு காணும்மா. மணியடிக்கணும். அப்புறம் தாயி! இந்த நினைப்பு பொழைப்பைக் கெடுத்த கதை உனக்குத் தெரியுமா?”
“அது என்ன கதைய்யா?”
“ம்ம்ம்! உன் கதைதான். உன் பிள்ளை பெரிய ஆபீஸரா வரணும்னு நினைச்சேன்னா, நீ தனியார் பள்ளிக்கூடத்துல சேர்த்துப் படிக்க வையி. இங்க வராத. இங்க சேர்த்தா உன் பையன் உருப்படாமப் போயிடுவான். அம்புட்டுத்தான் நான் சொல்லுவேன்.”
“அய்யா! நீங்க சொல்ற இஸ்கூலுல சேர்க்கணும்னா எம்புட்டு செலவாகும்?”
“அது ஆகும் மாசம் கொறஞ்சது ஒரு ஆயிரம், ஆயிரத்து ஐநூறு. அதைத்தவிர வருஷப் பீஸு, அது இதுன்னு ஒரு பத்தாயிரம், இருபதாயிரம் ஆகும்.”
“அடியாத்தீ! அம்புட்டுப் பணத்துக்கு நாங்க எங்க போக? அது ஆவுற கதையில்லீங்கய்யா!”
“அப்போ உங்க தலையெழுத்து அவ்வளவுதான்னு நினைச்சு இங்கயே சேர்த்துவிடுங்க. வேற என்னத்தைச் சொல்றது? போங்க, போங்க! ஆக வேண்டியதைப் பாருங்க.”
“ஏனுங்க! மரம்மாதிரி நிக்கிறீங்க? அந்த மனுஷன் சொன்னதைக் கேட்டீங்களா? எனக்கு வவுரு கலங்குதுங்.”
“சூ! நீ பேசாம வா. நம்ம குலசாமி இருக்கார்ல? எல்லாம் அவர் பார்த்துக்கிடுவார்.”
“தம்பி! புது இஸ்கூல் எப்படிய்யா இருக்குது? உனக்குப் பிடிச்சிருக்கா?”
“சூப்பரா இருக்குங்கய்யா! தினமும் முட்டை கொடுக்கறாங்க. இன்னிக்கு சாம்பார் சாதம் கொடுத்தாங்க. தட்டு நிறைய சாப்பாடு. ரொம்ப நல்லா இருந்துச்சுங்கய்யா!”
“அப்படியா கண்ணு! பாடம்லாம் புரியுதுங்களா?”
“கொஞ்சம் கொஞ்சம் புரியுதுங்கய்யா. புரியலேன்னா எங்க டீச்சர் கேட்கச் சொன்னாங்க. எனக்கு அவங்களை ரொம்பப் பிடிச்சிருக்குங்கய்யா.”
“அப்படியா கண்ணு? அவங்கள்லாம் நமக்குச் சாமி மாதிரி. சொல்லிக்கொடுக்கற வாத்தியாருங்க மனசு நோகற மாதிரி நாம எப்பவும் நடந்துக்கக்கூடாது தம்பி! எப்பவும் அவங்களைப் பார்த்தா சாமியைக் கும்பிடற மாதிரி கும்பிட்டுக்கிடணும். சரியா?”
“சரிங்கய்யா!”
நாளும் அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டிருந்துச்சு. அப்படித்தான் அன்னிக்கு ஒருநாள்…
“தம்பி! இங்காரு! உங்கய்யன் உனக்காக இன்னிக்கு இனிப்பு போண்டா வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு! ஓடி வாங்க, ஓடி வாங்க!”
“அய்யா! கண்ணு! உங்க முகமே சரியில்லீங்களே! என்ன ஆச்சு ராசா?”
“அய்யா! இன்னிக்கு ஸ்கூலுல ஒரு அண்ணா இல்ல, அவரு வாத்தியாரைக் கெட்ட கெட்ட வார்த்தை பேசி, அடி அடின்னு அடிச்சிட்டாருப்பா.”
“நீங்க பாத்தீங்களா?”
“ம்ஹூம்! இன்னொரு அண்ணா செல்லுல காமிச்சாரு. எங்க ஸ்கூலுலதான் அடிச்சிருக்காரு. அந்த அண்ணா ஏம்ப்பா அந்த வாத்தியாரை அடிச்சாரு?”
“இதோ நீங்க இப்போ சொல்றீங்கள்ல? அந்தத் தறுதலைப் பையலை ‘அவரு’, ‘இவரு’ன்னு மரியாதையா? வாத்தியாரை அடிச்சுட்டா ஏதோ பெரிய ஆளுன்னு அந்தக் கூறுகெட்டவனுக்கு நினைப்பு. அதுதான் அடிச்சுப் பேர் வாங்கணும்னு நினைச்சிருக்கான். அதை போட்டோவும் பிடிச்சு படமா எடுத்திருக்கான். அவனால படிச்சு முன்னேற முடியாதுன்னு தெரியும். அதுதான் இப்படி பெரியாளா ஆகணும்னு நினைச்சிருக்கான்.”
“அப்படின்னா அந்த அண்ணா செஞ்சது தப்புங்களாய்யா?”
“தப்புதான் கண்ணு. ரொம்ப ரொம்ப ரொம்பத் தப்பு.”
“இல்ல..! வாத்தியார் அவனைக் கேள்வி கேட்டதுதான் தப்புன்னு ஸ்கூல்ல எல்லா அண்ணாக்களும் சொல்றாங்களேய்யா?”
“எல்லா அண்ணாக்களும் உளறினா அந்த உளறல் சரியாகிப்புடாது தம்பி! வாத்தியார்னா கேள்வி கேக்கணும். படிக்கற நாம அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவங்க. அவர் கையில தடி இருந்தாத்தான் நாளைக்கு நம்ம வாழ்க்கையில வெளிச்சம் இருக்கும். இப்போ அய்யா மாடு ஓட்டும்போது பாத்துருக்கீங்கள்ல? கையில கயிறு இருக்கும், கம்பு இருக்கும். எதுக்கு? அது தறிகெட்டு ஓடாம இருக்கணும்னுதான். அதே மாதிரிதான் வாத்தியாருங்களும் உங்களை நல்ல வழியில நடத்திட்டுப் போறதுக்கு அவங்களுக்கு ஒரு அதிகாரம் எப்பவும் இருக்கோணும். இல்லேன்னா நீங்க தறிகெட்டுப் போயிடுவீங்க.”
“அப்போ மாடும் நாங்களும் ஒண்ணாய்யா?”
“இல்ல கண்ணு. மனுசங்க வேறதான். ஆனால் எப்பவும் எதுக்கும் லகான் அப்படிங்கற கயிறு வேணும். அது இல்லேன்னா எதுவும் சரிப்படாது. அந்த லகானை இந்த முட்டாள் மனுசங்க போராடி அவுத்துவிடச் சொல்லி, அவுத்துவிட்டதோட பலன் வாத்தியாரையே கையை நீட்டி அடிக்கறதுல கொண்டுவந்து நிறுத்தியிருக்கு.”
“தம்பி! யாரு எக்கேடு கெட்டுப்போனாத்தான் எனக்கென்ன? எனக்கு நீயும் உன் வாழ்க்கையும் முக்கியம் தம்பி! நீ எப்பவும் இப்ப இருக்கற மாதிரியே இருக்கோணும். வாத்தியார் திட்டினா, திட்டோ அடியோ வாங்கிக்கங்க. அவங்க உங்களோட நல்லதுக்குத்தான் எப்படியும் எதையும் சொல்லுவாங்கன்னு நம்புங்க தம்பி. நல்லது எப்பவும் வேப்ப இலையை அரைச்சுக் குடிக்கறாப்புல கசக்கத்தான் செய்யும். நீ அவங்களைப் பார்த்துத் தப்பு பண்ணப் பயப்படணும்; மாறாக, அவங்க உன்னைப் பார்த்து உன்கிட்ட பேசறதுக்குப் பயப்படற மாதிரி நடந்துக்கக்கூடாது. இதை எப்பவும் உன் ஞாபகத்துல வெச்சுக்கிடணும். சரியா தம்பி?”
“ம்ம்ம்! சரிங்கய்யா!”
“சரி வாங்க! சீனி போண்டா சாப்பிடலாம். சின்னம்மா! சூடா மூணு டீ போட்டுட்டுவா. மூணு பேரும் ஒட்டுக்கா ஒண்ணா ஒக்காந்து சாப்பிடுவோம்.”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன