
இந்த தீபாவளி நாள் முற்பகலில் வாட்ஸ் அப்பில், “எப்படி இருக்கிறீர்கள்?” என்ற செய்தி பார்த்ததும் முதலில் வியப்பு, அந்த எண்ணில் இருந்து எப்படி செய்தி வருகிறது…. முழு செய்தி பார்த்தபின் பெருகிய கண்ணீரோடு அழைத்தேன். பேசத் தொடங்கினேன் ! எதிர் முனையிலும் கண்ணீர்.
வரது என்கிற வரதராஜனை எப்போது முதலில் பார்த்தது, 1980களில்! பொற்காலம் அது…. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்க முன்னணி ஊழியராக ஓய்வற்ற கிளைப் பயணங்கள், தொழிற்சங்க இயக்கங்கள், புதிய புதிய புதிய அறிமுகங்கள், கொண்டாட்டத் தோழமை உறவுகள். இந்தியன் வங்கி சேலம் ஆத்தூர் பெல்ட்டில் கெங்கவல்லி ஜெய்சங்கர், ஆத்தூர் சிங்காரம், சுந்தரம் என்று சேலம் மாவட்டத்தில் சம வயதினர் பலரது அன்பு வாய்த்த அதே காலத்தில் தான் தலைவாசல் வரதராஜனும் (வரதுவாக!) நெருக்கமாக இணைந்தார் தோழமை வட்டத்தில்!
என் அத்தை மகன் ராஜப்பா போன்ற சாயல், அதே போன்ற பேச்சு மொழி, புன்னகை மின்னும் கண்கள், வரது உருவம் மட்டும் கூடுதல் உயரம், ஊட்டி ராஜப்பா நினைவுக்கு வராமல் வரதுவோடு பேசிய நினைவில்லை. நான் சார்ந்திருந்த தொழிற்சங்கத்தின் ஆர்வமிக்க தோழர்களில் ஒருவர், நிறைய கேள்விகளும் கேட்பவர், எல்லா இயக்கங்கள், மாநாடுகளிலும் உற்சாகமாக வந்து கலந்து கொள்பவர். நீண்ட கால நண்பர்.
விருப்ப ஓய்வில், இந்தியன் வங்கியில் தனது பணிக்காலம் முடியும் முன்பே, விருப்பம் இல்லாமல் வெறுப்பில் வங்கியில் இருந்து விடை பெற்றவர் வரது. ஓசூரில் ஒரு கிளை மேலாளராக இருந்தார் அப்போது. அந்த நாட்கள் மறக்க முடியாதவை, நல்ல விஷயத்திற்காக அல்ல! உற்சாகமாகவே அழைத்துப் பழகிய குரலுக்கு மாறாக வேதனை மிகுந்த வலியோடு அழைத்த குரல் அது. பல் சிகிச்சை முதல் பல்வேறு பிரச்சனைகளில் அவர் துடித்த போதும் விடுப்பு எடுக்க முடியாத கடுப்பில் நகர்ந்த நாட்கள். VRS கொடுத்த போது, சட்டென்று மே தின மறுநாள் ஓசையின்றி விடுவித்து அனுப்பி விட்டனர், கிளை ஊழியர் இருவர் வீட்டுக்கு உடன் வந்து அன்பு பாராட்டிச் சென்ற ஒற்றை ஆறுதல் மட்டுமே நாற்பது ஆண்டுப் பணிக்குப் பிறகான மிச்சம் என்று அவர் சொல்வதுண்டு.
எழுத்தராக இருந்த வரதராஜன், குடும்பத் தேவை கருதி சேலத்தில் இருந்து சென்னைக்கு வர விரும்பி, வரிசையில் நீண்ட காலம் காத்திருந்த நேரத்தில் புதிய கிளை திறப்பு என்பதால் படப்பை கிளைக்கு மாற்றலில் வந்து சேர்ந்தார். 2010 செப்டம்பரில் நான் தலைமை அலுவலகத்தில் இருந்து நிர்வாகம் செய்த இடமாற்றலில் தாம்பரம் மேற்கு கிளையில் சென்று சேர்ந்தேன். அடுத்த ஓரிரு மாதங்களில் வரது, தேர்வு எழுதி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று நான் இருந்த கிளைக்கு வந்து இணைந்தார். சென்னை கிளை ஒன்றிற்கு வரவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக பதவி உயர்வு அது.
தொழிற்சங்கப் பணிக்காக நான் ஓயாது இயங்கிக் கொண்டிருக்கையில், கிளை உதவி மேலாளர் சுதீந்திரன், அதிகாரிகள் இயக்கத்தின் மூத்த தோழர், மார்க்சிய சிந்தனையாளர் கங்காதரன், பிறகு கிளைக்கு வந்த வரதராஜன் செய்த பேருதவி மறக்க முடியாதது!
சனிக்கிழமை அரை நாள் வேலை நாள் இருந்த காலம் அது, வரது எனக்கு யூனியன் அலுவலகத்திலேயே நேரம் ஆகிவிட்டது, இன்று லீவு மார்க் பண்ணிடுங்க என்று அழைப்பேன். அவராவது விடுவதாவது. இல்லப்பா…ஏடிஎம் கேஷ் வைக்க ஆள் வேணும், நீ வந்துரு, சாப்பிட உனக்காகக் காத்திருப்பேன் என்பார். பெரும்பாலான ஊழியர்கள் சனிக்கிழமை லஞ்ச் கொண்டு வந்திருக்க மாட்டார்கள், அப்போது தாம்பரம் கிளையில் 9 மணிக்கு வேலைகள் தொடங்கும், சனிக்கிழமை 1 மணியோடு சரி. வரது நான் போகும்போது டைனிங் டேபிளில் நிஜமாகவே காத்திருப்பார், மெதுவாகப் பழைய கதைகள் பேசிவிட்டு, சாப்பிட்டு முடித்து, ஏடிஎம் கேஷ் கொண்டு வைப்போம். அதிகாரி ஒருவர், எழுத்தர் ஒருவர் ரகசிய எண்களை எந்திரத்தில் போட்டு முடித்தபின் தான் திறக்கும். மூத்த கடைநிலை ஊழியர் (பட்டுல்லாஸ் சாலை தோழர், பணி ஓய்வுக்குப் பின் இங்கே வந்து சில வேலைகள் செய்து அன்றாட ஊதியம் கொஞ்சம் பெற்று வந்தவர்) ஆறுமுகம் பணப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து வைத்து, வேணு சார் நம்பர் போடுங்க…என்று சொல்வார். அதற்குப் பிறகு எப்போது பேசும்போதும் வரது, வேணு சார் நம்பர் போடுங்க, பேசலாமா என்று சொல்லிவிட்டு, கரெக்ட் தானப்பா, ஆறுமுகம் உன் கிட்ட அப்படித் தானே சொல்வார் என்று சிரிப்பார்.
வரது என் அருகமை வாய்ப்பை மிகவும் கொண்டாடுவார். தனக்கு சோர்வு ஏற்படும்போது, கிளையில் வேலை பளு கூடும் நேரங்களில் என்னிடம் பகிர்வார். எப்போதும் கூட்டம் குறையாதிருக்கும் கிளை, கிளியரிங் பிரிவில் காசோலைகள் குவிந்து கொண்டே இருக்கும். கேஷ் கவுண்டர்களில் ஊழியர்கள் நின்று நிதானித்து ஒரு தேநீர் அருந்தும் சின்னஞ்சிறு இடைவெளி நேரம் கூட வாய்க்காது. புதிய கணக்கு திறப்பு, வைப்புத் தொகை புதுப்பித்தல், கடன் பிரிவு என்று எந்த கவுண்டரிலும் கூட்டம் கூட்டம் தான். தேவையில்லாமல் உள்ளே வந்து நோட்டம் விடும் சந்தேகத்திற்குரிய நபர்களை அதட்டல் போட்டு வெளியே நிறுத்தும் தூய்மை பணியாளர் சரஸ்வதியின் சாதுரியம் மறக்க முடியாதது.
அவரது வேலை பளு என்றல்ல, கிளையின் பணிச்சுமையைக் கொஞ்சும் சீரமைக்க கிளை முதன்மை மேலாளரிடம் போய் உட்கார்ந்து பேசுவேன். சிறிது மாற்றங்களைக் கலந்து பேசி செய்யும்போது வரது உருகிப் போய் நன்றி பாராட்டுவார். ஆந்திராவில் இருந்து லட்சுமி நாராயணன், பிறகு கேரளத்தில் இருந்து பாலசுப்பிரமணியன் (பாலு, சேலத்தில் இருந்து மாற்றலில் வந்தாலும், பாலக்காடு சொந்த ஊர்) முதன்மை மேலாளராக வந்தபோது கிளையில் கூட்டாக நிறைய முன்னேற்றங்கள் செய்ய முடிந்தது. கிளையை விட்டுப் போனபிறகும் வரது இருவரிடமும் நெருக்கமாக இருந்தார். பாலு சார் மகள் திருமணத்திற்கு பெங்களூரில் இருந்து குடும்பத்தோடு சென்று வந்தார் வரது. தாம்பரம் மேற்கு ஊழியர்கள் எல்லோரோடும் வாட்ஸ் அப்பில் அதே தோழமை அவருக்கு.
வரதுவிடம் கொஞ்சம் படபடப்பு உண்டு. நான் கூட அவரைக் கிண்டல் செய்வேன், படப்பை விட்டு வந்தும் படபடப்பை விடவில்லையே என்று பென்ஷன்தாரர்கள் வந்தால் படபடப்பு ஆகி விடுவார் வரது, தாத்தா பாட்டிகள் வந்தால் என்னிடம் அனுப்பி வைப்பார், EPF ஓய்வூதியம் எண்ணூறு, ஆயிரம் என்று அற்ப சொற்ப தொகை பெறுவோர், உரிய அரியர்ஸ் கிடைக்கவில்லை என்று நொந்து போய்ப் பேசுவார்கள், வரது என்னிடம் கேட்பார், இதெல்லாம் என்னப்பா ஓய்வூதியம் இதிலும் குறை வைக்கறானுங்க, இதைக் கொஞ்சம் விசாரியேன் என்பார். அப்போது, அந்தக் கிளையின் தோழரே அருள் தான் அத்தாரிட்டி, அவரிடம் கேட்டு அறிந்துகொண்டு நேரே கிளைக்கு அருகிலேயே இருந்த PF அலுவலகம் சென்று அங்கிருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் உதவியோடு ஓய்வூதியர் விஷயங்கள் நகர்த்தி தாம்பரம் கிழக்கு கிளை மூலமாக உரிய தொகைகள் வரப்பெற்று இங்கே வரவு வைக்கும் வேலையை விரைந்து மேற்கொண்டேன். ஓய்வூதியர்கள் வரதுவிடும் போய் கைகூப்பி நன்றி சொன்னால், தான் ஏதும் செய்யவில்லை, எல்லாம் அந்த மனுஷன் தான் என்று என் பக்கம் கை காட்டி அனுப்பி விடுவார் வரது !
2010இல் இது நடந்தது. 1999இல் மறைந்துவிட்ட அதிகாரி ஒருவருடைய மனைவி தனது வீட்டுக்கு அருகே இருக்கும் கிளை என்பதால் தாம்பரம் மேற்கு வந்தார். தன்னுடைய கணவர் PF ஆப்ஷன் போட்டு இருந்தவர், மறைந்துவிட்டார், இப்போது பென்ஷன் ஆப்ஷன் மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறதாமே என்று வரது சீட்டில் போய்க் கேட்டு இருக்கிறார் , வேணுன்னு அங்கே ஒருவர் இருப்பார், முழு பணியும் முடித்து குடும்ப பென்ஷன் உங்களுக்கு உறுதி செய்துவிடுவார் என்று சொல்லி விட்டு இருக்கிறார், நேரே என்னிடம் வந்து கேட்டார் அந்தப் பெண்மணி. அதற்கு இரண்டு வாரங்கள் முன்பு தன்னுடைய மகன் திருமணத்திற்கு கணவரின் நண்பர்கள் முகவரி தேடிப்பெற்று அழைப்பிதழ் அனுப்பி திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி இருக்கிறார். வரவேற்புக்கு வந்த கணவரின் நண்பர் ஒருவர், நீங்க பென்ஷன் கேட்டு விண்ணப்பம் கொடுத்துப் பாருங்க, மாதா மாதம் உறுதியான தொகை வந்தால் நிம்மதியா வாழலாமே என்று சொல்லி இருக்கிறார். கணவரின் விவரங்கள் எல்லாம் எழுதி எடுத்துக் கொண்டு வந்திருந்தார். உடனே படிவம் எடுத்து நிரப்பிக் கொடுத்து, கிளை முதன்மை மேலாளர் பரிந்துரை பெற்று அன்று இரவே தலைமை அலுவலகத்தில் சேர்த்தேன். கடந்த 16 ஆண்டுகளாக அந்தப் பெண்மணி குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவதற்கு முதல் காரணம் வரது!
சக ஊழியரிடம் தமாஷாகப் பேசி வங்கிப் பணிகள் நகர்த்துவதில் சுவாரசியமான மனிதர் வரதராஜன். யாருக்கு உடல் நலம் சரியில்லை, யாருக்கு குடும்ப சிக்கல், தொழிற்சங்கம் யாருக்கு உதவ வேண்டும் என்பதை இடையறாது என்னை அழைத்துச் சொல்லி விடுவார்.
மகன் சுதர்சன் திருமண ஏற்பாடுகளின் போதும் பேசிக் கொண்டு இருந்தார். விருப்ப ஓய்வில் சென்ற பிறகு நல்ல வேலையில் நல்ல சம்பளம் இருந்தும் மகனுக்கு சரியான வரன் அமையவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தார். அழைத்துப் பேசினால் கொஞ்சம் ஆறுதலும், நம்பிக்கையும் கிடைக்குதுப்பா, அது தான் உன்னை அழைத்தேன் என்பார். திருமணம் உறுதி ஆனதும் உற்சாகமாக அழைத்துக் கூறினர். என்னால் அப்போது பெங்களூர் செல்ல இயலவில்லை.
விருப்ப ஓய்வில் சென்றபிறகு குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு அவரது உடல் நலம் அவ்வப்போது கொஞ்சம் பாதிப்பை அதிகம் வெளிப்படுத்தத் தொடங்கி இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணியாற்றிய கிளையில் இருந்து பழைய டாக்குமெண்ட் ஒன்றைக் கேட்டு அழைத்து இருக்கின்றனர், இவர் ஃபோன் எடுக்கவில்லை என்று, எப்படியோ என்னை அணுகினர், உங்கள் நண்பரை ஃபோன் எடுத்துப் பேசச் சொல்லுங்கள் என்று!
நான் அழைக்கையில் வரது ஃபோன் எடுக்கவே செய்தார். மருத்துவ மனையில் ட்ரிப் ஓடிக் கொண்டிருக்க, அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்ற சூழலில், அருகே அப்போது மனைவி வார்டுக்கு வெளியே சென்றிருக்கவே ஃபோன் எடுத்து, வேணு சொல்லுப்பா, எப்படி இருக்கே என்று என்னைக் கேட்டுவிட்டுத் தன் நிலையைக் கூறினார்.
அதிர்ந்து போன நான், விஷயம் எதுவும் இல்லப்பா, உடம்பைப் பார்த்துக் கொள் என்றதும், “பரவாயில்லப்பா, ஏதோ விஷயம் இருக்கும், எனக்கு பழைய பிராஞ்சில் இருந்து நிறைய மிஸ்ட் கால்…” என்றார் வரது.
நான் குறிப்பிட்ட வாடிக்கையாளர் பெயரைச் சொல்லி அந்த டாக்குமெண்ட் பற்றிக் குறிப்பிட்டதும், எந்த ரிஜிஸ்தர், அதன் மேலட்டை வண்ணம் என்ன, எங்கே டாக்குமெண்ட் இருக்கும் என்ற விவரங்கள் சொல்லி முடித்தார் – 4 ஆண்டுகளுக்கு முன்பே பணியில் இருந்து வெளியேறியவர்! வாடிக்கையாளரது வீட்டுப் பத்திரம் அவ்வண்ணமே கிடைத்து விட்டது, ஆனால், டாக்குமெண்ட் எல்லாம் எங்கோ தடயம் இல்லாமல் வரதராஜன் சார் போட்டுவிட்டுப் போனார் என்று புகார் செய்தவர்களிடம் இருந்து நானாக அழைத்துக் கேட்டு அறிய வேண்டி இருந்தது ! வரதுவிடம் நான் நன்றி சொன்னபோது சிரித்துக் கொண்டார், அவருக்கும் தகவல் இல்லை என்று புரிந்து கொண்டேன்.
வரதுவின் முக்கிய வாடிக்கை, எனது பிறந்த நாள், திருமண நாள் மட்டுமல்ல, எங்கள் மகள் திருமண நாள் உள்ளிட்டு ஒரு நாள் முன்னதாகவே அழைத்து வாழ்த்து சொல்வது. என்னைப் போலவே வேறு சில நண்பர்களுக்கும் அவர் இப்படி வாழ்த்து பரிமாறி இருப்பார் என்றே தோன்றுகிறது.
நவம்பர் வந்து விட்டால், வங்கியில் ஓய்வு பெற்றோர் உயிர்ச் சான்றிதழ் வழங்க வேண்டும், வங்கி நிர்வாக சுற்றறிக்கை வருவதற்கு ஒரு நிமிடம் முன்பாகவாவது வரதுவிடம் இருந்து மெசேஜ் வந்து விடும், எனது சர்வீஸ் எண் குறிப்பிட்டு, சரி தானே என்று கேட்டு! பத்து நாள் கழித்து நிர்வாகம் அதுவரை உயிர்ச் சான்று கொடுத்தோர் பட்டியலை வெளியிடும்போது அதில் என் பெயர் இல்லை என்றால், வரதுவிடம் இருந்து ஃபோன் அழைப்பு வந்து விடும், தலைவா, ஏன் இன்னும் லைஃப் சர்டிஃபிகேட் கொடுக்கல என்று!
இந்த தீபாவளி – நவம்பர் 8 அன்று மெசேஜ் வந்தது, வரதுவின் எண்ணில் இருந்து, சார் நலமாக இருக்கிறீர்களா என்று கேட்டு ! ஒரு கணம், வரதுவின் எண்ணில் இருந்து யார் அனுப்புகிறார் என்று யோசித்தேன்….சார் என்று ஒருபோதும் என்னை விளிப்பதில்லை வரது, தலைவா என்று தான் அன்பின் அழைப்பு இருக்கும்….. மெசேஜ் தொடர்ந்து வாசித்தேன், சார் நலமாக இருக்கிறீர்களா என்று போட்டு, அவருடைய மனைவியின் பெயர் கீழே குறிப்பிட்டு இருந்தது.
உடனே அந்த எண்ணை அழைத்தேன் அடக்க மாட்டாத கண்ணீர் பொங்க ! அடுத்த முனையிலும் கண்ணீர் ததும்பும் குரல்.
“வரதராஜன் காலமாகிவிட்டார்….. உங்களோட மெசேஜ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கு…உங்களுக்கு தகவல் வந்திருக்குமோ என்று சந்தேகத்தில் தான் மெசேஜ் போட்டேன் என்றார்.
தெரியும்மா….. தாம்பரம் மேற்கு தோழர்கள் மெசேஜ் போட்டு இருந்தனர், ஹைதராபாத் லட்சுமி நாராயணன் சார் அழைத்தே பேசினார்.. பாலு சார் மெசேஜ் வந்தது…… நான் சுதர்சனுக்கு மெசேஜ் அனுப்பி துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தேன், பெங்களூர் வர முடியவில்லை, என் அண்ணனுடைய மனைவி மார்ச் மாதம் காலமானார், அந்த நேரம் மிகுந்த துயரம் சூழ்ந்திருந்தது…. என்று சொன்னேன்.
“ஆனாலும், வரது பெயரை வாட்ஸ் அப் பிராட்காஸ்ட் குழுவில் நீக்க ஏனோ தோன்றவில்லை….. மெசேஜ் போய்க் கொண்டே இருந்திருக்கிறது…. ஸாரி” என்று தொடர்ந்தேன்.
வரதுவின் மனைவியோ, “சார்….உங்க எழுத்து எது வந்தாலும் என்னிடமும் கொடுத்து வாசிக்க சொல்வார்… எனக்கு தமிழ் ஆர்வம் அதிகம், கதை, கட்டுரை எல்லாம் வாசிப்பேன்…. உங்களைப் பற்றி ஓயாம பாராட்டி நிறைய சொல்வார்…. அவர் நம்பரை அப்படியே வச்சிருக்கேன், அவரோட நண்பர்கள் மெசேஜ் போடுவது பார்க்கும்போது அவர் இருப்பதாகவே நெனைச்சுப்பேன்… டெலிட் பண்ணிடாதீங்க” என்றார்.
வரதுவோடு பழகிய காலங்களை நினைவில் இருந்து அவரிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு உரையாடல்கள், வெவ்வேறு தருணங்கள்….. குறுக்கிடாது கேட்டுக் கொண்டிருந்தார்.
“அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்திய மாதிரி இருந்தது சார்….” என்றார் நாத் தழுதழுக்க….
வரதுவின் மருத்துவத்திற்காக அலைந்து சிரமப்பட்டது, குணமாகி விடும் என்று வீடு திரும்பி மீண்டும் மருத்துவமனைக்குப் போக வேண்டி வந்தது, பல லட்சம் செலவு செய்தும் அவரைக் காப்பாற்ற இயலாமல் பறிகொடுக்க நேர்ந்தது எல்லாம் சொன்னார் கண்ணீரோடு. அவரது சிரமங்கள் தெரியும், என்னோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார், சிலபோது மெசேஜ் மூலம் தனது அவஸ்தையைத் தெரிவித்து இருக்கிறார் என்றேன் நான்.
“இந்த ஆண்டு நவம்பர் நான்காம் நாளே இந்தியன் வங்கி துறைமுகம் கிளைக்குச் சென்று லைஃப் சர்டிஃபிகேட் படிவம் எழுதிக் கொடுத்தேன், கண்ணீர் மல்க கிளையின் உதவி மேலாளரிடம் கொடுத்து, ஆண்டு தோறும் அழைத்து நினைவூட்டல் சொல்ல அந்த நண்பர் இல்லை, தொடர் மருத்துவம், தொடர் சிகிச்சை, குணமாகி மீண்டும் ரணமாகும் வேதனையில் இருந்து இந்த ஏப்ரல் மாதம் விடை பெற்றுக்கொண்டார் வரது எனும் வரதராஜன் என்று சொன்னேன். நேரில் போக முடியவில்லை, அவருடைய மகனுக்கு இரங்கல் செய்தி அனுப்பித் துயரத்தைப் பகிர்ந்து கொண்டேன் என்பதையும் சொன்னேன்” என்று வரதுவின் மனைவியிடம் கடைசியாகக் குறிப்பிட்டேன்.
சில நொடிகள் மௌனம் அவரிடம். இந்தப் பக்கம் என் கண்களைத் துடைத்துக் கொண்டது போலவே, அடுத்த முனையில் அவரும் இயல்புக்கு மெல்ல வந்திருக்க வேண்டும்.
“பெங்களூர் வரும்போது வாய்ப்பிருந்தால் வீட்டுக்கு வாங்க, வழக்கம்போல் உங்க மெசேஜ் அவரோட எண்ணுக்குத் தொடர்ந்து அனுப்புங்க. நான் எதிர்பார்க்கல, மெசேஜ் பார்த்துவிட்டு பதில் போடுவீங்கன்னு தான் நெனச்சேன், அழைச்சு பேசினது பெரிய ஆறுதல் என்றவர், ” அடுத்த நவம்பர் லைஃப் சர்டிஃபிகேட் நான் உங்களுக்கு நினைவூட்டல் செய்வேன் சார் ” என்று முடித்தார்.

நல்ல பதிவு
இனிய நண்பர் மட்டுமல்ல என் உறவினரும் கூட
காலம் வெகு சீக்கிரம் அவரை அழைத்துக் கொண்டு விட்டது
அற்புதமான மனிதர்கள் நம் வாழ்வில் மறக்கமுடியாத நம் நினைவில் நித்தம் இருப்பவர்கள்.
மிகவும் விரிவாக, உங்களுடைய சொந்த நடையில் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.
தோழர் வரதராஜன் அவர்களை என்னுடைய தெளிவான நினைவுகளில் இருந்து என்னால் நினைவு கூர முடியவில்லை. ஒருவேளை நானும் வயதாகிக் கொண்டிருப்பதால் இருக்கலாம், அல்லது நான் வெளிச்சத்தில் இல்லாததாலும் இருக்கலாம். ஆனாலும், இப்படி அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் மிக்க ஒரு தோழரை நான் எப்படித் தவறவிட்டேன் என்று நினைத்து மனம் மிகவும் வருந்துகிறது, என்னை நானே நொந்து கொள்கிறேன்.
தோழர் வரதுவுக்கு என்னுடைய வணக்கங்கள்.
கடந்த கால நிகழ்வுகளை எந்த இடத்திலும் வேகம் குறையாமல், தெளிவாகவும், கோர்வையாகவும் கொண்டு வந்து சேர்த்த உங்களுடைய சிறந்த திறனுக்கு என்னுடைய பாராட்டுகள்.
இப்படிபட்ட நல்ல நண்பர்கள் சீக்கிரம் நம்மை விட்டு போய் விடுகிறார்கள். தோழர்கள் ராமையா, அழகியனம்பி, சுப்பையா துரை அசோகன் பட்டியல் நீள்கிறது. வரது நண்பராக அமைந்தது வரம்தான்
Beautifully narrated sir.
அனுபவித்து வருந்தினேன் என்று சொல்லலாமா?
அண்ணார் ராஜன் தலைவாசல் பணியில் சேர்ந்தது முதல் கடந்த 40வருடங்களுக்கு மேல் ஒரு மூத்தசகோதரர் போல எங்களுடைய குடும்பத்தில் இருந்தார்.அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நீங்கா நினைவுகளுடன்,கனத்த இதயத்துடன் தலைவாசல் சேகர்,த