
ரவிவர்மன் ஒரு 25 வயது கிராமத்து ஓவியன். சிறுவயதில் சுவர்களில் கிறுக்கிக் கொண்டிருந்தவன், இன்று பெரிய ஓவியனாகிவிட்டான். அவனுடைய ஓவியம் இடம்பெறாத பத்திரிகையே கிடையாது. அவன் வரையும் ஓவியங்கள் அனைத்தும் முப்பரிமாணத் தோற்றத்தில் பார்ப்பவரை மிகவும் கவரும்.
அவனுக்கு நெடுநாளாக ஓர் ஆசை உண்டு. அவனுடைய மனதில் பதிந்திருந்த காதலி ரதியை ஓவியமாக வரைய வேண்டும் என்பதுதான் அது.
இதோ, இப்போது அதை வரையத் தொடங்கிவிட்டான். ஆனால் சகுனம் சரியில்லை போலிருக்கிறது. மின்சாரம் தடைப்பட்டது. இருந்தாலும், தன் சம்சாரமாக நினைத்துக் கொண்டிருந்த ரதியை வரையத் தொடங்கிய அவனுடைய கைகளால் ஓவியம் வரைவதை நிறுத்த முடியவில்லை.
பக்கத்து வீட்டு மாடத்தில் கார்த்திகை மாத விளக்கு ஒன்று தன்னைச் சுற்றிலும் ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது.
அந்த விளக்கை ஒரு கையில் ஏந்தியவாறு ரதியின் அழகான முகத்திற்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய தாடியும் மீசையும் அவளுடைய முகத்தில் வந்து உரசுவதை அவளால் உணர முடிந்தது. வெட்கத்தால் அவள் முகம் சிவந்தது.
அவளுடைய முகத்தை மேலும் வசீகரமாக வரைந்து, அதை ரசித்துக் கொண்டிருந்தான் ரவிவர்மன்.
அவன் இன்னும் சிறிது நேரத்தில் ரதியின் ஓவியத்தை முடித்துவிடுவான். அதைப் பார்த்து அவன் மட்டுமல்ல, நாமும் மகிழப் போகிறோம். அவனுடைய இந்த ஓவியத்திற்கு தேசிய விருதுகூடக் கிடைக்கும் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
எனக்கும் அது உண்மை என்றுதான் தோன்றுகிறது. பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
