
“ராம் மறுபடியும் வரைய ஆரம்பிக்க வேண்டும். அவனுடைய உலகம் அதுதான். அவன் கையில் மறுபடியும் தூரிகையைக் கொடு. நிச்சயம் பழைய ராம் திரும்பி வருவான்” என்று ராமின் மனைவி காவ்யாவிடம் அவனுடைய நண்பன் அறிவுறுத்தினான்.
ராமின் கையில் தூரிகை பேசும். கதை கதையாகச் சொல்லும். ஆனால் இப்பொழுது அவை எல்லாமே கதையாகிவிட்டன.
முதலில் சிறிய வாக்குவாதமாகத் தொடங்கிய ஒரு விஷயம், பெரிய சண்டையில் முடிய, அன்று எடுத்து பரணில் போட்ட கேன்வாஸ் ஸ்டாண்ட் இன்றுவரை கீழே இறங்கவில்லை. இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அதற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான சண்டையோ சச்சரவோ வரவேயில்லை. பேசிக்கொண்டால்தானே சண்டையும் சச்சரவும்!
மறுநாள் ராமின் பிறந்த நாள். அன்று இரவு ராம் உறங்கச் சென்றவுடன், பரணிலிருந்த கேன்வாஸ் ஸ்டாண்ட், பெயிண்ட் பாட்டில்கள், பிரஷ் பவுச் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, பெரியதாக, “ஹாப்பி பர்த்டே டியர் ராம்” என்று எழுதி வைத்தாள்.
மறுநாள் காலை அந்தக் கேன்வாஸைப் பார்த்தவுடன், பிறந்த கன்றுக்குட்டி தன் அம்மாவிடம் பாய்ந்து செல்வதுபோல, ராம் ஓடிச்சென்று தூரிகையைக் கையில் எடுத்து வரையத் தொடங்கினான்.
இரண்டு வருட மௌனம் இப்பொழுது பேசியது. ராமின் மனதில் அணைந்திருந்த தீபம் மீண்டும் உயிர்பெற்றது.

நச்சுன்னு இருக்கு கதை