
“ஏன்யா மேஸ்திரி! வெள்ளையடிக்கச் சொன்னா, திருஷ்டிப் பொம்மையைக் கிறுக்கியிருக்கே! பேசினதுலே பாதிக்காசைப் பிடிச்சுட்டுத்தான் தரணும். பொழைச்சுப்போ!”
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நூலகரின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார் ஒருவர்.
வெள்ளைக்காரர் போலிருந்தவரைக் கண்டதும், “வாங்க, பெர்னார்ட்!”
“இதை வரைந்த ஆர்ட்டிஸ்ட்டைப் பார்க்கணுமே!” என்று அவர் தன் மொபைலில் பிடித்த புகைப்படத்தைக் காட்டினார்.
மேஸ்திரி, ‘இப்போ தலைவலி போய் திருகுவலி வந்துடுச்சா? இவன் வேற வந்து கிளறுறானே!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
“என்னாச்சு?”
“அவரைப் பார்த்துப் பாராட்டணும்! என்ன கலர் சென்ஸ்! லைப்ரரிக்குப் பொருத்தமா, ரொம்ப அர்த்தபூர்வமா இருக்கு!”
பெர்னார்ட் சொல்லிக்கொண்டே போக, “எதே! அர்த்தபூர்வமா? அழகாவா?” என்று மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
முட்டைக் கண்ணும், முடங்கியதுபோலிருந்த கைவிரலில் தூரிகையும், இடது கையில் கைதானா அது? அதிலொரு அகல் விளக்கும், திட்டுத் திட்டாக ஈஷிய வர்ணக் கலவையும்! திருஷ்டிப் பொம்மையென்றுதானே தான் திட்டியது என்ற நினைவு வர, நூலகர் மேஸ்திரியைப் பார்க்க, அவர் முழிபிதுங்கி நின்றார்.
“தாத்தா!”
மேஸ்திரியின் எட்டு வயதுப் பேரன்.
“ஸார்! தாத்தாவைத் திட்டாதீங்க. நான்தான் வரைஞ்சேன். மன்னிச்சுடுங்க!”
“வாட்! நீயா?”
“ஆமா!”
“இதுக்கு அர்த்தம் தெரியுமா?”
“அர்த்தமா? இது எங்க தாத்தா. தாத்தா கையிலே பிரஷ்ஷும், இருட்டிப்போச்சுன்னு லைட்டும் எடுத்துட்டுப் போறார். அவ்ளோதான்!”
ஒரு நொடி அசாத்திய மௌனம். மூவரும் வெடித்துச் சிரித்தனர்.
