சசிகலா விஸ்வநாதன்/இதயத்தில் ஒளிரும் தீபம்

கைதேர்ந்த ஓவியன் என்று தன்னை நினைத்துக்கொண்டு, ஏதேதோ கேன்வாஸ்களில் வரைந்துகொண்டிருக்கிறான்!
“நல்லா வந்திருக்கல்ல?” என்று வசந்தியிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். எத்தனை முறை “ஆமாம்! நல்லாதான் வந்திருக்கு” என்று சொன்னாலும், மீண்டும் அதே கேள்வி! ஆனால், பதிலை எதிர்பார்க்காமலேயே கேட்டுக்கொண்டிருந்தான்.
நேற்று தான் வரைந்த ஓவியத்துக்கு அகில இந்திய அளவில் முதல் பரிசு கிடைத்ததாகச் சொல்லி மகிழ்ந்தான். வசந்தியோ, “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று பதிலளித்தாள். அருகில் இருந்த கத்தரிக்கோலால் அவள் தலையில் ஒரு போடு போட்டதும், அவள் திடுக்கிட்டுப் பயந்துவிட்டாள். அவனைச் சமாதானப்படுத்தி மெதுவாகத் தூங்க வைத்தாள்.
காலையில் எழுந்ததும், “வசந்தி! என் நெஞ்சில் ஒரு தீபம் ஒளிர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. அதை அணையாமல் அவ்வப்போது தூண்டிவிட்டு எண்ணெய் விடு” என்றான்.
வசந்தி, “சரி” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்.
மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதுதான் தெரிந்தது; அவன் இருதுருவ மனநிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளான் என்பது. தலையில் இடி இறங்கியதுபோல் உணர்ந்தாள் வசந்தி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன