சுபாஷிணி ரமணன்/அக(ல்) விளக்கு

வண்ணங்களைப் பக்கத்து வீட்டுப் பரசு எடுத்துக் கொடுக்க, சுரேந்திரன் வரைந்துகொண்டிருந்தார்.
“நான் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருகிறேன், தாத்தா” என்று எழுந்தான் பரசு.
அவன் வாசலுக்கு வரும்போது, யாரோ “இது ஓவியர் சுரேந்திரன் வீடுதானே?” என்று கேட்டுக்கொண்டிருக்க, ‘பட்டென’ மின்சாரம் போய் விளக்குகள் அணைந்தன.
“அடடா! மின்சாரம் போய்விட்டதே!” என்ற பரசு, உள்ளிருந்து நாற்காலியை எடுத்துக்கொண்டு வந்து, “இங்கேயே உட்கார்ந்திருங்க சார். கரண்ட் வந்ததும் உள்ளே போங்க. பார்த்துப் போகாவிட்டால் தடுக்கிவிடும். நான் எங்க வீட்டுக்குப் போய்விட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டுப் போய்விட்டான்.
வந்தவருக்கு உட்காரப் பிடிக்காமல், நாற்காலியை எடுத்துக்கொண்டு உள்ளே வர, பரசு சொன்ன மாதிரியே தடுக்கி விழுந்து, “ஆ!” என்று கத்தினார். நாற்காலி சரிந்து விழுந்தது.
சத்தம் கேட்டு, விளக்கையும் தூரிகையையும் ஏந்தியபடி விரைந்து வந்த சுரேந்திரன், வந்தவர்மீது தானும் மோதிக்கொண்டு, “ஸ்!” என்று கூறிக்கொண்டே விளக்கு சாயாமல் சற்றே அணைத்துப் பிடித்துக்கொண்டார்.
அவரை ஆச்சரியத்துடன் பார்த்தவர், “எனக்குத்தான் இருட்டில் தெரியவில்லை. விளக்குடன் வந்த உங்களுக்குமா தெரியவில்லை?” என்றார்.
“வெளிச்சம் உங்களுக்குக் காட்டத்தான் எடுத்துவந்தேன்.”
பார்வையற்ற சுரேந்திரன் எங்கோ பார்த்தபடி பதில் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன