ருக்மணி வெங்கட்ராமன்/மனதின் காவியம்

அன்று அரங்கமே நிரம்பி வழிந்தது. ஓவியக் கண்காட்சியில் வெற்றி பெற்ற ஓவியங்களின் அணிவகுப்பு. வென்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா.
பல வேறு நாடுகளிலிருந்தும் பல ஓவியர்கள் கலந்து கொண்டனர்.
“சிறிது நேரத்தில் பரிசு விவரங்கள் அறிவிக்கப்படும்.”
அரங்கத்தில் சலசலப்பு. எந்த ஓவியத்துக்குப் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு.
“பத்து, ஒன்பது…” என்று இறங்கு வரிசையில் எண்ணத் தொடங்கினர்.
“முதல் பரிசு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாதவனுக்கு. அவர் வரைந்த ஓவியத்தின் பெயர் ‘மனதின் ஓரத்தில்’.”
மாதவன் மகிழ்ச்சியுடன் மேடையேறினார். அவர் வரைந்த ஓவியத்தில் ஜடாமுடியுடன் ஒருவர், ஒரு கையில் தூரிகையும் மறுகையில் அகல் விளக்கும் வைத்திருந்தார்.
“வாழ்த்துகள்! சிறப்பான ஓவியம். இந்த ஓவியத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“என் மனதில் நிறைந்த உருவம். அவர் என் தந்தை. அவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. வசதி இல்லாததால், வரைவதற்குத் தூரிகையோ பேப்பரோ எதுவும் கிடையாது. அவர் மனதில் தோன்றியதை இயற்கை வண்ணங்களைக் கொண்டு வீட்டு சுவர்களில் வரைவார். மக்கள் அவரைப் பார்த்து, ‘பித்து பிடித்துக் கிறுக்குகிறான்’ என்று கேலி செய்வார்கள். அதனால், இரவில் அகல் விளக்கைக் கையில் ஏந்திக்கொண்டு அவர் வரைந்தார். நிறைவேறாத அவரது ஆசைகளை நான் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். என் மனதில் பதிந்த அவரது நிழல்தான் இந்த ஓவியம்.”
அனைவருடைய கைதட்டலும் விண்ணைத் தாண்டியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன