
அவன் கடவுளைத் தேடிப் போனான். பல இடங்களில் அலைந்தான். அவன் ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றுக்கொடுப்பவனாக இருந்தான். திடீரென்று ஒருநாள் வேலையை விட்டுவிட்டான். மனைவி மக்களைத் துறந்தான். இலக்கின்றிக் கடவுளை அடையக் கோயில் கோயிலாக அலைந்து திரிந்தான். அவனுக்கு அமைதி கிடைக்கவில்லை.
பல குருமார்களைப் போய்ப் பார்த்தான். அவன் முன்பு ஓவியனாக இருந்ததால், தூரிகையை வைத்துக்கொண்டு அலைவான். கையில் ஒரு விளக்கையும் ஏந்திக்கொண்டு அலைவான்.
அவன் போகுமிடமெல்லாம் பக்தர்கள் அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவன் சொல்வதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.
அவனை அவதார புருஷன் என்கிறார்கள். அவன் சிரிக்கிறான். அவர்களைப் பார்த்து, “நான் ஒரு பொய்யன்” என்கிறான். அவன் சொல்வதை அவர்கள் நம்பவில்லை.
