
சொல்லோவியம் தீட்டும் கவிஞன்
மாக்கோலத்திலிருந்து
சிறு அரிசித்துண்டை உருட்டிச் செல்லும்
சிற்றெறும்புகளின் பேரணியிலிருந்து
சொற்களின் நளினத்தை
கற்றுக் கொள்கிறான்
வீட்டு முற்றத்தில் உள்ளங்கை அளவு
மண் பூமியை மட்டும் இன்னும்
நனைக்காமல்
முல்லை மொட்டுக்களாக
சிதறி விழுந்து கொண்டிருக்கும்
மழைத் துளிகளிடமிருந்து
சொற்களின் நடனத்தை
கற்றுக்கொள்கிறான்
கனத்த கார்முகில்கள் போன்ற
சிறகுகள் கொண்ட வல்லூறு
சிறகசைப்பை நிறுத்திவிட்டு
அசையா சமாதி கொள்ளும் போது
சொற்களின் சாகும் கலையை
கற்றுக் கொள்கிறான்
(13.11.2026 அன்று விருட்சம்
இணைய கவியரங்கில்
” கவிதை வாசிக்கலாம் வாங்க ” நிகழ்வில்
வாசிக்கப்பட்ட கவிதை)
