ஆர். வெங்கடேஷ்/எரிசக்தி விடுதலை

சாலையோர டீக்கடைகள் முதற்கொண்டு, வீடுகள், அலுவலக கேண்டீன்கள் என்று எங்கே போனாலும் நீக்கமற நிறைந்திருப்பது எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்கள் தான். இன்னும் சில இடங்களில் இருப்பவை, இண்டக்‌ஷன் ஸ்ட்வ்கள் எனப்பும் மின் அடுப்புகள். ஆனால், இவற்றுக்கு மாற்றாக, வேறு ஏதேனும் எரிபொருளும், அடுப்பும் இருக்குமா என்று யோசித்துக்கொண்டே இருப்பேன்.

மின் அடுப்புகள் போல் கேஸ் அடுப்புகள் போல் பெரிய அளவில் வளரவில்லை. வெளிநாடுகளில் வளர்ந்து, பரவியுள்ளன. இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டும் தான் மின் அடுப்புகளுக்கு ஓடுகிறார்கள். ஒருசில மாதங்களுக்கு முன்பு கூட இந்த அனுபவத்தைப் பார்த்தோம்.

எல்.பி.ஜி.யில் உள்ள பெரிய பிரச்னை, அதை நாம் இறக்குமதி செய்கிறோம். உள்நாட்டில் எல்.பி.ஜி. உற்பத்தி பெரிய அளவில் இல்லை. ஹோர்மூஸ் நீரிணை மூடல் போன்ற சர்வதேச பிரச்னைகள் தோன்றும்போதெல்லாம் திடீரென்று இங்கே பதற்றம் தொற்றிக்கொள்ளும். கேஸ் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று ஒவ்வொரு குடும்பத் தலைவியும் தவியாகத் தவித்துப் போய்விடுகிறார்.

உலகெங்கும் மாற்று எரிபொருள்கள் என்னென்ன உள்ளன என்று பார்க்கத் தொடங்கினேன். பையோ கேஸ், பையோ எத்தனால், பயோமாஸ் பிரிக்கெட்ஸ் மற்றும் பெல்லட்ஸ், சூரிய ஒளி குக்கர்கள், ஹைட்ரஜன் சமையல், எரிமலைப் பாறைகளைச் சூரிய ஒளியில் சூடாக்கி, அந்த வெப்பத்தைச் சேமித்து வைத்து சமைக்கும் முறை உள்ளிட்ட முறைகள் தற்போது பல்வேறு நாடுகளில் பல்வேறு நிலைகளில் பயன்பாட்டில் உள்ளன.

இதில் மிகவும் நம்பிக்கை தருவது பையோ எத்தனால் எரிபொருள் தான். அதாவது, நமது எல்.பி.ஜி. சிலிண்டர் மாதிரி, பையோ எத்தனாலை, சிலிண்டரில் அடைத்து வீட்டுக்குக் கொண்டுவந்து சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கென்யாவில் இந்த எரிபொருள் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. அங்கே கோகோ நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், எத்தனால் எரிபொருளை நிரப்பும் தானியங்கி ஏ.டி.எம்.களை உருவாக்கி நடத்தியுள்ளன. அதாவது, வீட்டுக்கு எரிபொருள் தேவைப்படும் மக்கள், தங்களிடம் இருக்கும் எரிவாயு உருளையை எடுத்துக்கொண்டு கடைக்குப் போய் நிரப்பிக்கொண்டு வர முடியும், பயன்படுத்த முடியும். மிக மிக எளிமையான மாதிரி.

என்ன ஒன்று, இந்தத் திட்டம் கென்யாவி தொடரவில்லை. அரசாங்கத்தின் வரிவிலக்குகள் கிடைக்கவில்லை என்பதால், இந்த நிறுவனமே மூடப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த ஐடியா பிரமாதமாக இருக்கிறது. நமது நாட்டிலும், இரண்டு இடங்களில் பையோ – எத்தனால் சோதிக்கப்பட்டு இருக்கிறது. அசாம் மாநிலத்தில் ‘பிரைம் குக்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இந்த முயற்சியைச் செய்தது. அதேபோல், நாக்பூரில், பையோ – எத்தனால் அடுப்புகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதனால், ஏழை எளியவர்களுக்கான எரிபொருள் செலவு மிச்சமாகும் என்றும் அவர் பேசியிருக்கிறார்.

எனக்கு என்னவோ, பையோ – எத்தனால் எரிபொருளும், அடுப்புகளும் நமது நாட்டின் எதிர்காலத் தேவைகளை நிறைவு செய்யும் என்று தோன்றுகிறது.

இன்று இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் இ20 எரிபொருள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதாவது 20 சதவிகித எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல். வருங்காலத்தில் இ85 மற்றும் இ100 எரிபொருளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, முழுமையாக எத்தனால் மட்டுமே கொண்டு இயங்கும் பிளெக்ஸிப்யூயல் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக இதற்கு அர்த்தம்.

இன்னொரு பக்கம் நாடெங்கும் இருக்கும் பல்வேறு சர்க்கரை ஆலைகள், துணைப் பொருளாக கிடைக்கும் கழிவுகளில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்கின்றன. கரும்பு, மக்காச்சோளம், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட அடிப்படைப் பொருள்களைப் பயன்படுத்தி, எத்தனால் உற்பத்தி நடைபெறுகிறது. அரசாங்கம், ஒரு லிட்டருக்கு 60 முதல் 65 ரூபாய் கொடுத்து, இந்த எத்தனாலை வாங்கிக் கொள்கிறது.

ஒரு கட்டத்தில் உற்பத்தி உபரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்போது, வெறும் வாகனங்களுக்கு மட்டுமே உள்ள எத்தனால் பயன்பாடு, வீட்டு சமையல் எரிபொருளாகவும் மாறக்கூடும்.

எல்.பி.ஜி.க்கும் பையோ-எத்தனால் எரிபொருளுக்கும் இடையே இருக்கும் ஆற்றல், செலவு ஆகியவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். உதாரணமாக, இன்றைக்கு நமது தமிழகத்தில் இண்டேன் கேஸ் 14.2 கே.ஜி. ரூ. 957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஒரு கிலோகிராம் ரூ. 67.42. இது உற்பத்தி செலவு அல்ல. விற்பனை விலை. அதேசமயம், இதில் மத்திய அரசின் மானியம் இருக்கிறது. அது எவ்வளவு என்று உடனடியாக என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பேச்சுக்கு ஒரு கிலோகிராம் 67 ரூபாய் என்றே எடுத்துக்கொள்வோம். எத்தனாலும் ஒரு லிட்டருக்கு 60 முதல் 65 ரூபாய்க்குக் கிடைக்கிறது. நாளைக்குச் சந்தைக்கு ஏ.டி.எம். மூலம் விற்பனைக்கு வரும்போது இதுவும் 67 ரூபாய்க்கே கிடைக்கலாம். அப்படியானால், விலை என்று பார்க்கும்போது, இரண்டுமே ஒரே அளவாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால், எரியும் திறன் என்று சொல்லப்படும் வெப்ப ஆற்றல் திறனில் (Calorific Value / Energy Density) பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு கிலோ எல்.பி.ஜி தோராயமாக 46 மெகாஜூல் (MJ) வெப்ப ஆற்றலைத் தரும். ஒரு லிட்டர் பயோ-எத்தனாலோ, தோராயமாக 21 மெகாஜூல் (MJ) வெப்ப ஆற்றலை மட்டுமே தரும். அதாவது, எல்.பி.ஜி வாயுவானது எத்தனால் திரவத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான வெப்ப ஆற்றலைக் கொண்டுள்ளது.

இது செலவிலும் பிரதிபலிக்கும். ஒரு சிலிண்டர் எல்.பி.ஜி-யின் மொத்த வெப்ப ஆற்றல் 14.2 x 46 = 653.2 MJ. இதே அளவு வெப்ப ஆற்றலைப் பெறத் தேவைப்படும் எத்தனாலின் அளவு: 653.2 / 21 = 31.1 லிட்டர். ஒரு லிட்டர் எத்தனாலின் விலை 65 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், 31.1 லிட்டர் எத்தனாலின் மொத்த விலை: 31.1 x ரூ. 65 = ரூ. 2,021.50. அதாவது எத்தனால் வழக்கமான எல்.பி.ஜி. செலவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

இது இன்றைய தேதியில் இருக்கும் சூழ்நிலைகளின் அடிப்படையில் போடப்பட்ட கணக்கு. இதில் நிறைய மாறுதல்கள் வரும்.

உதாரணமாக, எத்தனால் அடுப்பின் திறன். சாதாரண எல்.பி.ஜி அடுப்புகளில் எரிவாயு காற்றில் கலந்து எரியும்போது சுமார் 45 முதல் 50 சதவிகிதம் வெப்பம் வீணாகிறது. ஆனால், நவீன எத்தனால் அடுப்புகள் 60 முதல் 70 சதவிகிதம் வரை மிகத் திறமையாக வெப்பத்தைச் சமையல் பாத்திரத்திற்கு நேரடியாகக் கடத்தும். இதனால் எத்தனால் தேவை மேலே சொன்ன 31 லிட்டரை விடக் குறைந்து, சுமார் 23 முதல் 25 லிட்டராகக் குறையலாம்.

முக்கியமானது, அரசின் மானியம். தற்போது, பெட்ரோலோடு சேர்க்கப்படும் எத்தனாலுக்கு அரசு வரி விதிக்கிறது. நாளைக்கு சமையல் எரிவாயுவாக பையோ எத்தனால் மாறுமானால், எல்.பி.ஜி சிலிண்டருக்குத் தருவது போல இதற்கும் வரிவிலக்குகளோ அல்லது நேரடி மானியமோ கொடுக்கலாம். அப்போது இதன் விலையை லிட்டருக்கு 40 முதல் 45 ரூபாய் வரை குறைக்க முடியும்.

இதில் இன்னொரு விஷயத்தையும் சேர்த்துவிடுகிறேன். இப்போது நாடெங்கும் இருக்கும் கேஸ் அடுப்புகளை, எத்தனால் எரிவாயு அடுப்புகளாக மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. இதற்கென்று தனியாக அடுப்புகள் வாங்க வேண்டியிருக்கலாம். 3 முதல் 5 ஆயிரம் வரை செலவாகலாம். அல்லது யாரேனும் ஒரு புத்திசாலி, இதற்கு மாற்று வழியும் கண்டுபிடிக்கலாம்.

உதாரணமாக, எல்.பி.ஜி என்பது வாயு, எத்தனால் என்பது திரவம் என்பதால், இந்தத் திரவம் அடுப்பிற்குள் வரும்போதே அதனை வெப்பப்படுத்தி வாயுவாக (Vapour) மாற்றும் ஒரு சிறிய ‘வேப்பரைசர் கிட்’ (Vapouriser Kit) போன்ற அடாப்டரை நம் நாட்டுப் பொறியாளர்கள் உருவாக்கினால், தற்போதைய கேஸ் அடுப்புகளிலேயே சிறிய மாற்றங்கள் செய்து எத்தனகாலைப் பயன்படுத்த முடியும்.

உண்மையில் நாம் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்காக அலைகிறோம். முதலில் படிப்படியாக எத்தனால் உற்பத்தியை அதிகரித்து, எத்தனால் அடுப்பு உற்பத்திக்கு அனுமதி கொடுத்து, ஜி.எஸ்.டி. விலக்கும் கொடுத்து, நாடெங்கும் தற்போது இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் வாயிலாகவே பையோ-எத்தனால் எரிபொருளையும் விநியோகித்தால், நாம் ஒரு பெரிய பிரச்னைக்குத் தீர்வு காண்போம். பெட்ரோல் பங்க்குகள் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் மூலமாகவே ‘சமையல் எத்தனால் ஏடிஎம்களை’ மிக எளிதாக நாடு முழுவதும் கொண்டு சேர்த்துவிட முடியும்.

இனிமேல் வெளிநாட்டில் இருந்து எல்.பி.ஜி. இறக்குமதி செய்யவேண்டிய தேவையே இருக்காது. எவ்வளவு பெரிய விடுதலை தெரியுமா? மத்திய அரசு மனசு வைக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன