
அந்த எறும்புக் குடும்பத்தை
நான் பின்தொடர்ந்திருக்கக்கூடாது
இனிப்பு பூசிய மனநிறைவு
எவ்வளவு கதகதப்பு
என்னைக் கண்ணும் காணாமல்
ஓரக்கண்ணால் இழுத்த மாயச் சூழல்
நான் வெளியே வர வரப் பார்த்தேன்
என் மூக்கோடு முட்டிச் சென்றன எறும்புகள்
எனக்கு மீண்டும் மீண்டும் வேண்டுமாயிருந்தது அக்கதகதப்பு
என்னை மூக்கோடு முட்டி முட்டிச் சென்றன அவை
மூக்கோடு மூக்கு முட்டி முட்டிச் சென்றோம் நாங்கள்
என் ஆறு கால்களை அதிசயித்துக்கொண்டே
பையப் பையப் போகிறேன் இப்போது
அடுக்குப் புறையில் சிந்திக் கிடக்கும்
அதிரசப் பொற் துணுக்கை ஏந்திக்கொண்டு இறங்கும்
அச்சிறு நுண்ணுயிர்ப்பு நான்தான்
என் வழியில் குறுக்கிடாதே
கடிப்பேன் நான்
ஒரு பெரிய எறும்புக் குடும்பத்தின்
செல்லக் கடைக்குட்டி எறும்பு நான் இப்போது.
(13.11.2026 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் தமிழ்வெளி காலாண்டிதழில் (அக்டோபர் – டிசம்பர் 2026) பிரசுரமான கவிதை
(7.8.2026, 7.20 am)
