
அந்தப் பெரிய அரங்கில் அந்த ஓவியன் மிகப் பெரிய திறமையாளனாக அறிமுகப்படுத்தப்பட்டான்.
இவனா திறமைசாலி? கன்னாபின்னா என்ற சட்டையும் கண்ணாடியுமாக, கையில் ஒரு தூரிகையுடன் நின்றிருந்தான். பார்த்தவர்கள் முகம் சுளித்தார்கள்.
“உங்களுடைய சவால்களை இந்த ஓவியர் நிறைவேற்றுவார். யார் என்ன சூழலைக் கொடுத்தாலும் அதற்கு உடனே படம் வரைவார்” என்றனர்.
அவனைச் சோதிக்க விதவிதமான சூழல்களில் வரையச் சொன்னார்கள். அனாயாசமாக வரைந்து கொண்டிருந்தான்.
பிரபல ஓவியர் ஸ்வரன், இவனை மடக்க என்ன வழி என்று யோசித்தவர், மேடைக்கு விரைந்தார். அங்கே எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கை அவன் கையில் கொடுத்து, “ஒரு கையால் விளக்கை மார்புக்கு மேலே பிடித்தபடி, மற்றொரு கையால் வரைய முடியுமா?” என்றார்.
அடுத்த நிமிடம் மார்போடு விளக்கை அணைத்தபடி படத்தை வரைந்து முடித்தான்.
அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்வரன்.
“என் திறமையின் மேல் இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா?” என்றவன், இரு கைகளாலும் விளக்கைப் பிடித்தபடி, ஒற்றைக் காலைத்தூக்கி, அதில் தூரிகையைப் பிடித்து, அதே படத்தைத் தன் காலால் மீண்டும் வரைந்தான்.
இப்போது அரங்கமே அவனது திறமையை வியந்து கைத்தட்டியது.
