
கீரைக்காரி சரோஜா ரயிலிலிருந்து இறங்கி, ஊருக்குள் வந்தாள்.
இரு கைகளிலும், தோளிலும் கீரைக்கட்டுகளைத் தாங்கிய பைகள். அவை பச்சைப் பசேலென்று பளிச்சென்று இருந்தன.
“கீரம்மா! கீரே கீரே! முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, வல்லாரைக் கீரை!”
சத்தம் கேட்டவுடன் தினமும் வெளியில் வந்து பார்ப்பது பூங்கொடிக்கு வழக்கம். ஆனால், ஒரு நாளும் கீரை வாங்கியதில்லை.
“புள்ளத்தாச்சி புள்ள! ஒரு நாளும் கீரை வாங்கமாட்டேங்கிற. இந்த நேரத்துல நல்லாக் கீரை சாப்பிடணும்மா!”
“அந்த ஆசையில்தான் வெளியில வருவேன். அந்தக் கீரையை ஆய்ந்து செய்யணுமேன்னு அலுப்பா இருக்கு.”
“அம்மா, மாமியார்னு பெரியவங்க யாரும் இல்லையா?”
“இல்லம்மா! நான் காதல் கல்யாணம் செய்துகிட்டேன். ரெண்டு பக்கமும் எதிர்ப்பு. இந்த நேரத்துலதான் அம்மாவைத் தேடுது மனசு.”
கண்களில் கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டியது.
“கலங்காதம்மா! வேணும்னா நானே கீரையை ஆய்ந்து எடுத்துட்டு வரேன். உனக்குச் சம்மதம்னா வாரத்துல ரெண்டு நாள் கீரையைச் சுத்தபத்தமா சமைச்சுக் கொண்டாரேன். என்ன உன் அக்காவா நினைச்சுக்கோ. ஒரு பெண்ணோட வலியும் வேதனையும் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்.”
பூங்கொடி அதற்கு ஒத்துக்கொள்ள, அவளுக்குப் பிடித்தமான உணவுகளை எல்லாம் அன்போடு செய்து கொடுத்தாள் சரோஜா.
மனிதம் மரித்துவிடவில்லை என்பதைப் பறைசாற்றினாள் சரோஜா.

எழுத்தில் சுருக்கம், கருத்தில் விளக்கம்.அன்பில்,ஆழம்! அபாரம்