சுந்தர மணிவண்ணன்/வள்ளியின் வைத்தியம்

“இரண்டு நாளாகக் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. நமக்குத் தெரிந்த டாக்டர்தான். ரொம்பப் பழக்கமானவர்.
சிம்பிளான வைத்தியம். செலவும் அதிகமாக இருக்காது. மாத்திரை கொடுத்து சீக்கிரமே குணப்படுத்திவிடுவார்.
இப்ப என்னவோ தெரியவில்லை. அட்மிஷன் போடணும், ட்ரிப்ஸ் ஏற்றணும், ஸ்கேன் எடுக்கணும்னு சொல்கிறார். ஏகப்பட்ட மருந்துகளையும் எழுதிக் கொடுக்கிறார். பில்லும் பெரிதாக வருகிறது. எல்லா வசதிகளோடும் புதிதாக ஆஸ்பத்திரி ஒன்றைக் கட்டியிருக்கிறார். என்ன செய்வதென்றே புரியவில்லை!” என்று வள்ளியிடம் விசனப்பட்டுக் கொண்டிருந்தாள் பங்கஜம்.
“என்னம்மா சொல்கிறாய்? குழந்தைக்கு அப்படி என்ன உடம்புக்கு?”
“தொடை இடுக்கில் வீக்கமாக இருக்கிறது. நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறான். அதான் பயமாக இருக்கிறது.”
பங்கஜத்தின் முகத்தில் கவலை தெரிந்தது.
“அதற்காக ஏன் மா இவ்வளவு பயப்படுகிறாய்? ஆனாலும், வீக்கம் இருப்பதையும், நடக்கக் கஷ்டப்படுவதையும் அலட்சியப்படுத்தக் கூடாது. அதுவரைக்கும் நான் ஒரு மூலிகைக் கஷாயம் போட்டுத் தருகிறேன். அது நம் வீட்டுப் பழக்கம்.”
“என்ன சொல்கிறாய், வள்ளி?”
பங்கஜம் வள்ளியை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.
வேகமாகச் சென்ற வள்ளி, ரயில்வே நடைமேடைக்கு அருகில் வளர்ந்திருந்த சில மூலிகை இலைகளைக் கட்டுக்கட்டாகக் கொண்டு வந்தாள்.
“இதெல்லாம் நம்ம முன்னோர்கள் பயன்படுத்தினது மா!” என்று வள்ளி நம்பிக்கையோடு சொன்னாள்.
பங்கஜத்தின் நெஞ்சிலும் ஒரு நம்பிக்கை மெல்லத் துளிர்த்தது.
இரண்டு நாட்களுக்குப் பின், குழந்தை பந்தைக் கண்டதும் எழுந்து அதை உதைக்க ஓடியது.
பங்கஜம் புன்னகைத்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன