
“டண்டணங்கர டண்டணங்கர” என்று தாரை தப்பட்டைச் சத்தம் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது. குடிசையின் நடுவில் அஞ்சலை கிடத்தப்பட்டிருந்தாள். வாசலில் தெருவை அடைத்து உறவினர்கள் எல்லாம் கூடி, ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் ஒரு ஓரமாக, என்ன செய்வது என்று தெரியாமல் பவுணு உட்கார்ந்திருந்தாள்.
வளர்த்த ஆயா போய்ச் சேர்ந்துவிட்டாள். அவளுடைய கடைசிப் பயணச் செலவிற்காகக் கழுத்திலும் காதிலும் இருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள். காரியம் முடிந்தது.
சொந்தங்கள் ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள்.
“இத பாரு புள்ள, உன்னை அனாதையா விட்டுட மாட்டேன்” என்று ஒருவன், இதுதான் சமயம் எனத் தவறான எண்ணத்தோடு அவளிடம் நெருங்க முயற்சித்தான். அவனைத் தள்ளிவிட்டாள்.
உடைந்து போய் அழுதவள், திடீரென்று எழுந்து,
“ஆயா எனக்கு வெறும் சோறு மட்டும் போடல. மானத்தோட இருக்கச் சொல்லிக் கொடுத்திருக்கு. நீங்க உங்க வேலையைப் பாருங்க!”
என்று சொன்னதும் உறவினர்கள் முணுமுணுத்தபடியே வெளியேறினர்.
அடுத்த நாள், சூரியன் மெல்ல எழ, தோளில் ஒரு கீரைப் பையையும், இரு கைகளிலும் பைகள் நிறையப் பலவிதமான கீரைகளையும் தூக்கிக்கொண்டு, காலில் ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டாள்.
அந்த ரயில் வரும் நிலையத்தைக் கடந்து, பெரிய கட்டடத்தின் பக்கம் திரும்பித் தன்னம்பிக்கையுடன் நடைபோட்டாள் பவுணு.
