
மீனா ஞாயிற்றுக்கிழமைக்காக ஏங்கிக்கொண்டிருப்பாள். எப்போது வருமென்று காத்திருப்பாள். இப்போதும் அப்படித்தான்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடும். சந்தை ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும். அவள் பாபுவிற்காகவே சந்தைக்குச் செல்வாள். பாபு ஊர் ஊராகச் சென்று சந்தையில் கடை போடுவான். மீனா இருந்த ஊரிலும் கடை போடுவான். அங்குதான் இருவரும் மனதால் இணைந்தனர்.
சந்தையின் கூச்சல்களுக்கிடையே அவர்கள் பார்வையாலேயே பேசிக்கொள்வார்கள். சில சமயம் இருவரும் சேர்ந்து டூயட்டும் பாடுவார்கள்.
இப்படியாக அவர்களுடைய காதல் மொட்டாகி, மலராகி, மணம் வீசி, பின்பு கல்யாணத்தில் முடிந்தது.
திடீரென்று ஒரு நாள் காய் விற்கப் போன பாபு திரும்பவேயில்லை. மீனா தேடாத இடமில்லை. வருடங்கள் கடந்தன. அவள் ஞாயிற்றுக்கிழமை சந்தைக்குப் போவதை மட்டும் விடவில்லை.
பாபு ஒருவேளை திரும்பக் கிடைப்பானா என்ற நப்பாசை ஒருபுறம்; அதைத்தவிர, அவர்கள் இருவரும் ஒன்றாக அனுபவித்த விஷயங்களை நினைத்துப் பார்ப்பதற்காகவும் சந்தைக்குச் செல்வாள்.
மீனா கொடுத்த புகார் காவல் நிலையத்தில் இன்றும் உயிரோடு இருக்கிறது. அவ்வப்போது பிணவறைக்கு அவளை அழைத்துச் சென்று, அடையாளம் காட்டச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது கூப்பிடுவதில்லை.
மீனாவுக்குத் திடமான நம்பிக்கை. பாபு நிச்சயமாக உயிரோடுதான் இருப்பான் என்றும், அவன் என்றாவது திரும்பி வருவான் என்றும் நம்புகிறாள்.
இன்றும் மீனா ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்குச் சென்றுவிட்டு, பை நிறையக் காய்கறிகளோடும் கீரைக்கட்டோடும் அந்தச் சந்தையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறாள். அடுத்த ஞாயிற்றுக்கிழமையை எதிர்பார்த்துக் கொண்டு, நம்பிக்கையுடன்…

Superb Sir. I really enjoyed reading the small story.